விரோதத்தின் வரலாறு
சத்துருக்களாக வாழ்ந்துகொண்டிருந்த சகோதரர்களான ஏசா - யாக்கோபின் சரித்திரம் நாமறிந்ததே. எனினும், அவர்களது பயணத்தில் பொதிந்திருக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்களில் சிலவற்றை மேலும் தெரிந்துகொண்டால், புரிந்துகொள்வது இன்னும் சுலபமாயிருக்கும் என்ற ஒரே நோக்கத்துடனேயே வேதத்திலுள்ள அவர்களது சரித்திரத்தை யாசேர் புத்தகத்தோடு இணைத்து எழுதியுள்ளேன். சமாதானம் செய்துகொள்ளாமல் சமாதிவரை சென்ற ஏசாவின் விரோதம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றும் குடும்பங்களிலும் காணப்பட்டுவிடக்கூடாது.
சேம், காம், யாப்பேத் என்பவர்கள் நோவாவின் குமாரர்கள் (ஆதி. 5:32). காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள் (ஆதி 10:6); கானானுடைய குமாரனான ஈவியின் (ஆதி. 10:17) மகன் கூரின் புத்திரனான சேயீர் தான் கட்டின பட்டணத்திற்கு சேயீர் என்று பெயரிட்டு குடும்பத்தோடு அங்கே வசித்துவந்தான்.
சேயீர் ஏதோம் நாட்டிலே காணப்பட்ட ஓர் பகுதி (ஆதி. 32:3). அங்கிருந்த காடுகளில் வேட்டைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் ஏசா (யாசேர் 27:1). யாக்கோபோ, தாத்தாவாகிய ஆபிரகாமினிடத்தில் ஆண்டவருடைய வழிகளைக் கற்றுக்கொள்வதிலேயே விருப்பமாயிருந்தவன் (யாசேர் 26:28). ஆபிரகாம் 175 வயதாயிருக்கும் போது தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்; அப்போது யாக்கோ பின் வயது 15 மாத்திரமே (யாசேர் 262:9). அந்நாட்களிலே, ஈசாக்கு தனது இரண்டு குமாரர்களையும், ஏபேருக்குத் தகப்பனும், நோவாவின் மகனுமான சேமினிடத்திற்கு கர்த்தருடைய வழிகளைக் கற்றுக்கொள்ளும் படியாக அனுப்பியபோது. யாக்கோபு விருப்பத்துடன் புறப்பட்டுச் சென்றான்; 32 ஆண்டுகள் சேமின் வீட்டிலே தங்கியிருந்து கர்த்தருடைய வழிகளைக் கற்றறிந்தான். ஆனால், ஏசாவோ ஈசாக்கின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். காட்டிற்குச் சென்று வேட்டையாடுவதிலேயே தன் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தான் ஏசா. ஒருமுறை, சேயீருக்குச் சென்ற ஏசா ஒரு வருடம் நான்கு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து வேட்டையாடிக்கொண்டிருந்தான். (யாசேர் 28:21)
கர்த்தருடைய கட்டளைகளைக் கற்றுக்கொள்ள சேமின் வீட்டிற்கு ஏசா செல்லாதிருந்தபோதிலும், ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்த தினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள் (ஆதி 25:28). இன்றும் வேதத்தை வெறுக்கும் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் மட்டும் சந்தோஷமாகிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் உண்டு. ஈசாக்கு 110 வயதாயிருக்கும்போது, சேம் மரணமடைந்ததற்குப் பின்னரே, யாக்கோபு தனது 50 -வது வயதில் கானானிலிருக்கும் தன் தகப்பனுடைய வீட்டிற்கு வந்தான். (யாசேர் 28:24)
ஓருமுறை சேயீருக்கு வேட்டைக்குச் சென்று வேட்டையாடினபோது, பலத்த வேட்டைக்காரனான நிம்ரோத் (ஆதி. 10:9) உடன் உண்டான பகையினிமித்தம், நிம்ரோத்தை அம்பெய்து, வெட்டிக் கொன்றான் ஏசா (யாசேர் 27:7). ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு இதுவே. (ஆதி 25:29); கூழுக்காக ஏசா தனது சேஷ்ட புத்திர பாகத்தை யாக்கோபுக்கு சகோதரனாகிய யாக்கோபுக்கு எழுதிக்கொடுத்தான்.
ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினு டைய குமாரத்தியாகிய யூதீத்தை விவாகம்பண்ணினான் (ஆதி 26:34; யாசேர் 28:22); இவள் சேயீரில் வாழ்ந்துகொண்டிருந்த ஓர் கானானிய ஸ்திரீ. கர்த்தருக்கடுத்த காரியங்களைக் கற்றுக்கொள்ளும்படியாக ஏசா செல்லாதிருந்தும், வாய்க்கு ருசியாக வேட்டையாடித் தந்துகொண்டிருந்த ஏசாவை ஆசீர்வதிக்கவே ஆசைகொண்டான் ஈசாக்கு. ஈசாக்கின் இந்த தவறான முடிவு, ரெபேக்காளினால் தடம் மாறியது. தகப்பனது ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள, தாயினால் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டான் யாக்கோபு. தகப்பனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டபின், சகோதரனான ஏசாவுக்குப் பயந்து, சேமின் குமாரனாகிய ஏபேரின் வீட்டில் 14 வருடங்கள் தங்கியிருந்தான் யாக்கோபு; அங்கு இருந்த நாட்களில், சேமின் குமாரனாகிய ஏபேரினிடத்தில் மீண்டும் கர்த்தருடைய கட்டளைகளையே கற்றுவந்தான் (யாசேர். 29:11). ஏசாவோ, யாக்கோபின் மேலும், பெற்றோரின் மேலும் கோபமூண்டவனாக மீண்டும் எழுந்து சேயீருக்குச் சென்றான்; அப்போது ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தை விவாகம்பண்ணினான் (ஆதி. 26:34). தகப்பனையும், தாயையும் விட்டுப் பிரிந்து சேயீரிலேயே வாழ்ந்துகொண்டிருந்த ஏசா, ஆறு மாதங்களுக்குப் பின் தனது இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் கானானிலுள்ள தன் தகப்பன் வீட்டிற்குத் திரும்பினான் (யாசேர் 29:13). ஏசாவின் மனைவிகள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதி 26:35); அவர்கள் அந்நிய தெங்வங்களை வணங்கு கிறவர்களாகவே காணப்பட்டார்கள்; கர்த்தருடைய வழியை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஏசாவின் மணவாழ்க்கை, குடும்பத்திற்கு மனமடிவையே கொண்டுவந்தது. இன்றைய நாட்களிலும், கர்த்தருக்கடுத்த காரியங்களில் பிள்ளைகள் போதிக்கப்படாவிட்டால், வேதத்தின் கற்பனைகளை பிள்ளைகள் அறிந்திராவிட்டால், தேவனை அறியாத அந்நிய நுகத்திலேயே அவர்கள் தங்கள் மணவாழ்க்கையை இணைத்துவிடுவார்கள் என்பது நிச்சயம். கர்த்தரை அறியாத பெண்ணை ஏசா மனைவியாக ஏற்றுக்கொண்டதற்கு, அவன் கர்த்தரை அறிந்திராததே காரணம்.
ஏபேரில் வீட்டில் தங்கியிருந்த 14-ம் வருட முடிவிலே, தகப்பனையும் தாயையும் காணும்படியாகப் புறப்பட்டான் யாக்கோபு (யாசேர் 29:20). எனினும் ஏசாவின் கோபம் இன்னும் தணியாதிருந்ததினால், தகப்பனாலும் மற்றும் தாயினால் எச்சரிக் கப்பட்டு, ஆரானுக்கு லாபானிடத்திற்குச் செல்லும்படியாக அனுப் பப்பட்டான். வெள்ளி, பொன் மற்றும் அநேக வெகுமதிகளைக் கொடுத்து மகன் யாக்கோபை வழியனுப்பினர் பெற்றோர். பெயர்செபாவிலிருந்து யாக்கோபு புறப்பட்டபோது 77 வயதாயிருந்தான்.
யாக்கோபு லாபானுடைய வீட்டிற்குச் சென்ற ஐந்தாம் வருடத்தில், ஏசாவின் மனைவி யூதீத் மரணமடைந்தாள் (யாசேர் 30:21). யூதீத்தின் மரணத்திற்குப் பின், சேயீருக்குச் சென்ற ஏசா, நீண்ட நாட்களாக அங்கேயே தங்கியிருந்தான். ஆதாள், அகோலிபாமாள் என்னும் ஸ்திரீகளையும் ஏசா விவாகம்பண்ணினான். யாக்கோபு லாபானுடைய வீட்டிற்குச் சென்ற ஆறாம் வருடத்தில், ஏசா மீண்டும் கானானுக்குத் திரும்பிவந்தான். ஏசாவின் மந்தையோ மிகவும் திரளாயிருந்தது; பூமி அவைகளைத் தாங்கக்கூடாதிருந்தது. ஏசாவின் மந்தை மேய்ப்பருக்கும், கானானியர்களின் மேய்ப்பாகளுக்கும் வாக்குவாதம் உண்டானது (யாசேர் 30:26). இதைக் கண்ட ஏசா, கானானை விட்டு விலகி, மீண்டும் சேயீருக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தான். அவ்வப்போது வந்து பெற்றோர்களைச் சந்திப்பதை மாத்திரம் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
யாக்கோபின் மீதிருந்த பகையோ மறையவில்லை. யாக்கோபு வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டதை அறிந்த ஏசா, யாக்கோபை கொலைசெய்யும்படியாகவும், யாக்கோபு கொண்டுசென்ற பொருட்களைத் திருப்பிக்கொண்டுவரும்படியாகவும் தன்னுடைய மகன் எலிப்பாசை அனுப்பினான் (யாசேர் 29:31); எலிப்பாஸ் அப்போது 13 வயதானவனே. பகையுணர்வைச் சுமந்துகொண்டிருக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளையும் பழிவாங்கத் தூண்டிவிடுவது நிச்சயம் என்பது ஏசாவின் வாழ்க்கையில் நிரூபணமாகிறதே.. உடமைகளை எடுத்துக்கொண்டு, உயிரோடு தன்னை விட்டுவிடும்படி யாக்கோபு எலிப்பாசை வேண்டிக்கொண்டதன்படி, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு யாக்கோபை வெறுங்கையாக அனுப்பிவிட்டான் எலிப்பாஸ் (யாசேர் 29:38); எனினும், ஆண்டவரோ பரிவாரங்களோடு யாக்கோபை புறப்பட்டுவரச் செய்தார். (ஆதி. 32:10)
தகப்பனாகிய ஈசாக்கை அடக்கம்பண்ண இணைந்துவந்தது உண்மைதான் (ஆதி. 35:29); என்றாலும் யாக்கோபை அந்த குகை யிலே அடக்கம் செய்ய ஏசா சம்மதிக்கவில்லையே. எகிப்திற்கு சென்ற யாக்கோபு அங்கே மரணமடைந்தபோது, யோசேப்பு எகிப்திலே உயர் பதவியிலே அமர்ந்திருந்தான். பார்வோனுடைய அனுமதியின்படி தன் தகப்பனா யாக்கோபின் சரீரத்தை, யாக்கோபின் விருப்பப்படி, கானான் தேசத்தில் புதைக்கும்படியாகப் புறப்பட்டுச் சென்றான். எகிப்தின் மக்களும், உயர்அதிகாரிகளும், திரளான ஜனங்களும் யோசேப்போடுகூட சென்றனர். சகோதரனாகிய யாக்கோபு மரணமடைந்ததை அறிந்த ஏசா, சேயீரிலிருந்து புறப்பட்டுவந்து தன் சகோதரனுக்காக புலம்பி அழுதான்; என்றாலும், ஏசாவின் அழுகை வெளிப்படையானதாகவே காணப்பட்டது. எபிரோனிலே ஈசாக்கு புதைக்கப்பட்ட குகையிலே யாக்கோபை புதைப்பதற்கோ ஏசா எதிர்த்து நின்றான். அது தனக்கே சொந்தமானது என்று வாதிட்டான். சேஷ்டபுத்திர பாகத்தை விற்றபோது, யாக்கோபினிடத்தில் தான் அதை விற்றுப்போட்டதை, யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தான் ஏசா. என்றபோதிலும், ஏசா தன் சகோதரனான யாக்கோபுக்கு எழுதிக்கொடுத்த தஸ்தாவேஜுக்கள் அனைத்தையும், யாக்கோபு யோசேப்பினிடத்தில் கொடுத்திருந்ததையோ ஏசா அறியாதிருந்தான். யாக்கோபு தன்னிடத்தில் கொடுத்த தஸ்தாவேஜுக்கள் அனைத்தும், எகிப்தில் இருக்கிறது என்றும், அவைகளை எடுத்துவரும்படியாக சகோதரனாகிய நப்தலியையும் யோசேப்பு அனுப்பியபோது, கலக்கமடைந்த ஏசா, யுத்தத்திற்கு ஆயத்தமானான். யாக்கோபின் குமாரனான தானின் புத்திரன் கூஷிம், காதுகேளாதவனாயிருந்தபோதிலும், அருகி லிருந்தவர்கள் மூலம் ஏசாவின் எதிர்ப்பை அறிந்துகொண்டபோது, எதிர்த்து சென்று பட்டயத்தால் ஏசாவை கொன்று போட்டான். பட்டயத்தை எடுத்த ஏசாவின் வாழ்க்கை பட்டயத்தாலேயே முடிவுக்கு வந்தது (யாசேர் 56 அதி.).
பகையை மனதிலே வைத்திருந்தவனுக்கு, பட்டயமே பதிலானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக