அழிவிலேயே அடைக்கலம்
அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். (ஆதி 19:17)
பின்பு லோத்து சோவாரில் குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். (ஆதி 19:30)
கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கிழ்ப்படியாமல், பக்கவழிகளைத் தெரிந்துகொள்வதே வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாக்குகின்றது. ஆண்டவர் லோத்துவைச் சந்தித்தபோது, 'நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ' என்றார் (ஆதி 19:17); ஆனால், லோத்துவோ அதனை மறுத்து, மீண்டும் அழிக்கப்படவிருந்த ஊராகிய சோவாருக்குள்ளேயே அடைக்கலம் தேடி ஓடினான். அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான். அதற்கு அவர், 'நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அனுக்கிரகம் பண்ணினேன்' (ஆதி. 19:20,21) என்று சொல்லுகின்றார். இதன் அர்த்தமென்ன? 'சோதோம் வானத்திலிருந்து விழும் கந்தகத்தினாலும் அக்கினியினாலும் அழிக்கப்படவிருந்ததைப்போல, லோத்து தெரிந்துகொண்ட சோவாரும் அழிக்கப்படவிருந்தது' என்பதுதானே. நாமும் பல நேரங்களில், அழிவிலிருந்து ஆண்டவர் நம்மைத் தப்புவிக்கும்போது, மீண்டும் மற்றொரு அழிவிற்குள்ளானதையே தெரிந்துகொண்டு அதற்குள் அகப்பட்டுக்கொள்கிறோம். ஆண்டவர் காட்டும் திசையினை 'தூரமானதாக' எண்ணி, பக்கத்திலிருக்கும் பாதுகாப்பற்ற இடத்திற்குள்ளாகவே பதுங்கிவிட நினைக்கின்றோம். விளைவு, 'அடைக்கலம்' என்று நாம் நினைத்த இடமே பின்நாட்களில் 'ஆபத்தானதாக' மாறிவிடுகின்றது.
சோவார் (ணழயச) என்ற ஊர் 'பேலா' (டீநடய) என்றும் அழைக்கப்பட்டது (ஆதி. 14:2,8). சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமீன் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள் (ஆதி 14:1,2). சோதோம், கொமோரா, அத்மா, சபோயீமீன் மற்றும் சோவார் ஆகிய ராஜாக்கள் 'பன்னிரெண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்தவர்கள்' (ஆதி. 14:4). அடிமையாயிருந்ததும், சோதோமுடன் கூட்டாகவும் இருந்த சோவாருக்குள் அடைக்கலம் புகுந்தான் லோத்து.
'லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது' (ஆதி. 19:23) என்ற இயற்கையான நிகழ்வினை, பாவம் நிறைந்து கவிழ்த்துப்போடப்படவேண்டிய நிலையில் இருளிலிருந்த சோவாருக்குள் 'நீதிமான்' ஒருவன் வந்திருக்கிறான் என்ற பொருளிலும் நாம் எடுத்துக்கொள்ளக்கூடுமே. என்றாலும், நீதிமானாகிய லோத்து, சோவாரிலும் நீதிமான்களை உருவாக்கவில்லை, அங்குள்ள பாவிகளைக் கண்டு பயந்தவனாகவே வாழ்ந்துகொண்டிருந்தான்.பின்பு லோத்து சோவாரில் குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள் (ஆதி 19:30). எனினும், ஆண்டவர் தன்னை அனுப்பிய இடமாக எண்ணி அல்ல, வாழ்க்கைக்கு பாதுகாப்பான ஓர் இடமாகவோ அல்லது, பயங்களை விட்டு அகன்று பதுங்கிவாழும் இடமாகவோதான் மலையினை லோத்து தெரிந்துகொண்டான். 'மலைக்குப் போ' (ஆதி. 19:17) என்ற முதலாவது கட்டளைக்கு கீழ்ப்படியாமல், தன்னுடைய தேவையின் நேரத்தில் 'மலையை நோக்கிச் சென்றான் லோத்து' (ஆதி. 19:30). விளைவு சோவாரில் அவனுக்கு பயம் உண்டானது; மலையிலோ பயங்கரம் உண்டானது. நாமும் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் தரும் 'முதலாவது கட்டளைக்குக்' அடிபணியாமல், 'நமக்குத் தேவைப்படும்போது நம்முடைய தேவைக்காக அதனைக் கையிலெடுப்போமென்றால், கர்த்தர் உடனிருப்பது என்பது கூடாதது.' எண்ணாகமம் 14:44-45 வரையிலான சம்பவம் இச்சத்தியத்தின் பயங்கரத்தையே நம்மை உணரச்செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக