திங்கள், 11 அக்டோபர், 2021

மணவாட்டியின் முடிவு (ஆதி 24:51)

மணவாட்டியின் முடிவு



இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள். (ஆதி 24:51)

அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள். (ஆதி 24:55)


அர்ப்பணிப்பினைத் தொடர்;ந்து அழைப்பிற்குக் கீழ்ப்படிந்தாலும், ஆண்டவர் விரும்பும் திசையில் நாம் அனுப்பப்பட்டுவிடாதபடி, அரணாய் எழும்பும் மதில்களையும் தாண்டவேண்டிய அவசியம் வாழ்க்கையில் உண்டு.  குமாரனாகிய ஈசாக்கிற்கு பெண் தேடும்படியாக ஆபிரகாம் தனது ஊழியக்காரனை அனுப்பியபோது, 'நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திம், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்' (ஆதி. 24:40) என்றே சொல்லி அனுப்பினான். ஆபிரகாமின் இந்த வார்த்தைகள் அவனது விசுவாசத்தின் உறுதியையே வெளிப்படுத்துகின்றன. தகனபலியாக ஈசாக்கை தனக்குத் தரும்படி ஆபிரகாமினிடத்தில் ஆண்டவர் கேட்டபோது, 'ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும்போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்' (ஆதி 22:5) என்றே சொல்லிவிட்டுச் சென்றான்; வேலைக்காரரிடத்தில் சொன்னதுபோலவே, தொழுதுவிட்டு வரும்போது, குமாரனை கூடவே அழைத்துக்கொண்டு வந்தான். அப்படியே, 'என் தகப்பன் வீட்டில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்வாய்' என்று ஆபிரகாம் விசுவாசத்தோடு தன் ஊழியக்காரனிடத்தில் கூறிய வார்த்தைகளின்படியே, ஆபிரகாமின் ஊழியக்காரன் ஆபிரகாமின் குமாரனுடைய மணவாட்டியை கூடவே அழைத்துக்கொண்டுவந்தான். விசுவாசத்தில் பயணத்தைத் தொடங்கினால், விசுவாசமே பயணத்தின் முடிவாயிருக்கும்.

 ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபேக்காளின் வீட்டாரைச் சந்தித்தபோது, ஆபிரகாம் தன்னிடத்தில் (ஆதி. 24:3,4,5,7,8)சொல்லியனுப்பின காரியங்களை ஆதி. 24:37,38,39,40,41 ஆகிய வசனங்களில் எடுத்துக்கூறுகின்றான். அத்துடன், ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று தான் ஆபிரகாமினிடத்தில் கேட்டதற்கு (ஆதி 24:39), நீ என் இனத்தாரிடத்திற்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண் கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் (ஆதி 24:41) என்று ஆபிரகாம் தன்னிடத்தில் சொன்னதையும் அவன் எடுத்துக்கூறுகின்றான். ஆபிரகாமின் ஊழியக்காரன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு, ரெபேக்காளை அனுப்பிவிட அவளது வீட்டார் ஆயத்தமானபோதிலும், 'பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும்' என்று பாசத்தின் வார்த்தைகளைச் சொன்னார்கள்.

'என்னை அனுப்பிவிடுங்கள்' (ஆதி. 24:54,56) என்பதுதான் ஆபிரகாமின் ஊழியக்காரனின் கோரிக்கையாயிருந்தது; ஆனால், பெண்ணை அனுப்புவதை அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்; எனினும், அந்த முடிவோ பெண்ணின் கையிலேயே விடப்பட்டது. 'போகிறேன்' (ஆதி. 24:58) என்று ரெபேக்காள் சொன்னதுபோல, நாமும் ஒருநாள் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து, அவருக்கு மணவாட்டியாக புறப்படுவோம். வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா  என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார் (லூக் 9:59,60). பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில்  அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் (லூக் 9:61,62). 'பின்பற்றிவா' என்று அவரே அழைத்தவனை அடக்கம்பண்ணவும், 'உம்மைப் பின்பற்றுவேன்' என்று தானே சொன்னவனை அனுப்புவித்துவிட்டுவரும்படியாகவும் அவர் அனுமதிக்கவில்லையே. 'பின்பற்றுவேன்' என்று சொல்லும் மக்கள் 'பின்னிட்டுத் திரும்பிப் பார்ப்பதை' கர்த்தர் விரும்புவதில்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக