சரிந்துவிழும் சந்ததி
அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். (ஆதி 19:33,35)
நீதிமானைத் தப்பவிட்டாலும், அவனது சந்ததியையாவது தன்னுடையது என்று சொந்தம்பாராட்ட தொடர்ந்து முயற்கிக்கிறான் சத்துரு. 'ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே' (மத். 10:36) என்று எச்சரித்தார் இயேசு கிறிஸ்து. சோதோமிலே குடியிருந்த லோத்து, சோதோமின் அருவருப்புகளினால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொண்டபோதிலும், 'நீதிமான்' என்ற பெயருடனான ஓட்டத்தை, நிறுத்திவிட சத்துரு லோத்துவை தொடர்ந்து நெருக்கிக்கொண்டேயிருந்தான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும் (சங் 111:10); அப்படியே, கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள் (நீதி 1:7) என்ற இவ்விரு வசனங்களும் தரும் விளக்கம் என்ன? கர்த்தருக்குப் பயப்படுதலையும், ஞானத்தையும், போதகத்தையும் மற்றும் நற்புத்தியையும் ஓர் மனிதனை அசட்டைபண்ணவைக்கவேண்டுமென்றால், 'மூடனானால் அது சாத்தியமாகிவிடும்' என்பதே. கர்த்தரது ஞானம் மூளையிலிருந்தாலும், செயல்படாதபடிக்கு அதனை மூலையில் மூடிப்போடுவதற்கு சத்துரு பல தந்திரங்களைக் கையாளுகின்றான். இத்தகைய சதியிலேயே சிக்கி இரண்டு நாட்கள் போதையிலேயே இருந்தான் லோத்து (ஆதி. 19:33,34); சந்ததியையும் இழந்தான்.
பல ஊழியர்களின் பிள்ளைகள் நீதியின் பாதையிலிருந்து விலகி சத்துருவின் வீதியில் நிற்பதற்கும், சத்தியத்திற்கே சத்துருக்களாக வாழ்ந்துகொண்டிருப்பதற்கும் காரணம், தகப்பன் தன் ஞானத்தை எங்கோ பறிகொடுத்ததின் விளைவாக இருக்கக்கூடும். நீதிமான்களாயிருந்தபோதிலும், பிள்ளைகள் தருவது போதை என்ற உணர்வுகூட இல்லாமல் அதைக் குடித்துவிடும் ஊழியர்கள் உண்டு. பிள்ளைகள் எதையாகிலும் சொல்லி அல்லது கொடுத்து நீதிமானாகிய தப்பனை தங்களுடைய ஆசைக்கு இணைங்கச் செய்துவிடுகின்றனர்; விளைவு தேவனற்ற சந்ததி. பல சத்தியத்தைச் சுமக்கும் ஊழியர்களின் ஓட்டத்தை சந்ததியாலேயே முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டான் சத்துரு. குடித்த பின்புதான் லோத்துவுக்கு உணர்வில்லாமற்போயிற்று; ஆனால், 'குடிக்கும் முன்னர் அது போதை' என்கிற உணர்வு எங்கே போயிற்று? பிள்ளைகளின்மேல் போதையாயிருந்த (பிரியமாயிருந்த) அவனுக்கு, அவர்கள் கொடுப்பது போதை என்ற அறிவில்லாமற்போயிற்றே! நீதிமான் போதையிலிருந்தால், அவனுக்குத் தெரியாமலேயே எதுவேண்டுமானாலும் நடக்கலாம். 'உம்மால் எங்களுக்கு சந்ததி வேண்டும்' என்று சொன்னால், நீதிமானாகிய தப்பன் சம்மதிக்கமாட்டார் என்பதை அறிந்த குமாரத்திகள், 'அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா' (ஆதி. 19:32) என்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையிலும், இத்தகைய சூழ்நிலை உண்டாகலாம், நீதிமான்களாயிருக்கும் நமது ஞானமுள்ள மதியை மழுங்கச் செய்யும்படியாகக் கொடுக்கப்படும் போதைகளுக்கு எச்சரிக்கையாயிருப்போம்; இல்லையெனில், தேவனுக்குப் பிரியமில்லாத சந்ததியை உருவாக்கிவிடுவோம். 'எனக்குத் தெரியாதே' என்று சொல்லிவிடமுடியாது; ஏனெனில், வித்து நம்முடையதாகவே இருக்கும். மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான் (மத் 13:25) என்றார் இயேசு கிறிஸ்து. லோத்துவின் வாழ்க்கையில், 'கோதுமையை களைக்குள் விதைக்கச் செய்துவிட்டான் சத்துரு.'
நீதிமானாகிய நோவா (ஆதி. 6:9) திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான் (ஆதி 9:21). நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து, கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான் (ஆதி. 9:24,25) எத்தனையாய் கர்த்தர் நோவாவைக் காத்திருந்தாலும், 'வெறி தெளிந்து விழித்தபோது, சாபத்தின் வார்த்தைகள்தானே சந்ததிக்குக் கிடைத்தது.' திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல (நீதி. 20:1) என்பது எத்தனை உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக