சனி, 9 அக்டோபர், 2021

தீட்டுப்படாதே... (ஆதி 39:4)

 

 தீட்டுப்படாதே...



யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனை தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். (ஆதி 39:4)


ஆண்டவரின் பிள்ளைகளை அடிமைகளாக்கி வைத்திருந்தாலும், தேவன் அவர்களுக்கு அளிக்கும் அதிகாரத்தையோ அவர்களிடத்திலிருந்து எவராலும் பிடுங்கிவிட முடியாது. யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை இருபது வெள்ளிக்காசுகளுக்கு விற்றார்கள்; போத்திப்பாரும் யோசேப்பை விலை கொடுத்தே வாங்கினான். வேலைக்காரனாகவே போத்திபாரின் வீட்டிற்குள் நுழைந்தான் யோசேப்பு (ஆதி. 39:17); என்றபோதிலும், எஜமானாகிய போத்திபாரோ, 'தனக்கு உண்டான யாவற்றையம் யோசேப்பின் கையில் ஒப்புவித்தான்' (ஆதி. 39:4). ஒப்புவித்ததோடு மாத்திரமல்லாமல், இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார் என்றும், இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் 'உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை' (ஆதி. 39:8,9) என்றே போத்திபாரின் மனைவியைப் பார்த்து யோசேப்பு கூறுகின்றான். 'ஒப்புவித்தான்' 'விசாரியாமல் ஒப்புவித்தான்' 'வேறொன்றையும் விலக்கி வைக்வில்லை' என்ற வார்த்தைகள், யோசேப்பின் மீது போத்திபாருக்கு இருந்த நம்பிக்கையை எத்தனையாய் வெளிப்படுத்திக் கூறுகின்றன. அடிமையாக விற்கப்பட்ட போதிலும், யோசேப்பின் கையில் அதிகாரம் வந்துவிட்டதே. 

மேலும், 'போத்திபாரின் வீட்டில், தீட்டுப்படும்படியான வேளை வந்தபோது,' எஜமானுக்கு உண்மையுள்ளவனாக இருக்க விரும்பினவனாகவும், தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவனாயிருக்க விரும்பினவனாகவும் தன்னைக் காத்துக்கொண்டதினால், நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு (லூக் 19:17) என்ற வார்த்தை யோசேப்பின் வாழ்க்கையில் நிறைவேறிவிட்டதே. சிறைச்சாலைக்குச் சென்றபோதும், சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான். கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் 'விசாரிக்கவில்லை' (ஆதி 39:23) என்றல்லவோ வாசிக்கின்றோம். தீட்டுப்படாத யோசேப்பு, முழு எகிப்து தேசத்திற்கும் அதிபதியாக உயர்த்தப்பட்டான். 

அவ்வாறே, தானியேல், அனனியா, மீஷாவேல, அசரியா என்னும் ஆண்டவருடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் நடந்ததும் இதுதானே. பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அடிமைகளாகப் பிடித்து அவர்களை பாபிலோனுக்குக் கொண்டுவந்திருந்தான். இவர்கள், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய வாலிபர்களாயிருந்தார்கள் (தானி 1:3,6). ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டிருந்தபோதிலும், தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். (தானி 1:5,8) 

அடிமைகளாகப் பிடித்துக் கொண்டுபோகப்பட்டிருந்தபோதிலும், தீட்டுப்படாமல் தங்களைக் காத்துக்கொண்ட வாலிபர்களை தேவன் பாபிலோன் தேசத்தில் உயர்த்திவைத்தாரே. ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். அதுமாத்திரமல்ல, தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான். (தானி 2:48,49)

எங்கே, எந்த நிலையில் இருந்தாலும், தேவனுக்கு முன்பாக தீட்டுப்படாதவர்களாக, பரிசுத்தமாக நம்மை காத்துக்கொண்டால், உயர்வு நம்மைத் தேடிவரும். தீட்டுப்பட்டால், தேவ திட்டமே நம்மை விட்டு விலகிவிடும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக