உயர்ந்த பாதுகாப்பு
அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி, (ஆதி 19:6,7; 9,10)
சத்துருக்கள் நம்மோடு போராடும்போது பொறுமையாயிருந்தாலும், அவர்கள் மேற்கொண்டுவிடாதபடி நம்மை தன்னோடு சேர்த்துக்கொள்ளுகிறவர் ஆண்டவர். லோத்துவின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்நிகழ்வு, இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட இறைவனின் பாதுகாப்பையே நமக்கு வெளிப்படுத்துகின்றது. வீட்டிற்குள் இருந்த தூதர்களைக் காக்கும்படியாக, 'வாசலுக்கு வெளியே வந்த லோத்து, தனக்குப் பின்னாலே வீட்டின் கதவைப் பூட்டியிருந்தான்;' 'திறக்கும்படியாக' அல்ல 'உடைக்கும்படியாக' கதவு பூட்டப்பட்டிருந்தது (locked); தங்களைக் காக்கும்படி, தன்னால் இயன்றதை லோத்து செய்யும்வரை வீட்டின் உள்ளே தூதர்கள் பொறுமையாயிருந்தார்கள். இன்றும், அவர் நமக்காகச் செயல்படும் முன், நாம் அவருக்காக என்ன செய்கிறோம்? என்பதை காண கர்த்தர் பொறுமையாயிருக்கிறார். என்றாலும், லோத்துவை 'பாவத்திற்குட்படுத்தும்படியாக' அவர்கள் நெருக்கியபோது, தீயோரின் கைகளில் தூதர்கள் லோத்துவை விட்டுவிடவில்லை.
லோத்துவின் வீட்டு வாசல் 'வெளியிலே பூட்டப்பட்டிருந்தபோதிலும், வீட்டின் உள்ளே இருந்த தூதர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டினது இயற்கைக்கு அப்பாற்பட்ட செயலல்லவோ!' உள்ளே இருந்த தூதர்கள் வெளியே கைகளை நீட்டியது எப்படி? இந்த உலகத்தில் எத்தனையாய் நம்மை நாமே பாதுகாத்தாலும், உலகத்தின் நெருக்கம் உள்ளத்துக்கு உண்டு. நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை (2கொரி 4:8,9) என்ற பவுலின் வார்த்தைகள் நமது ஆத்துமாவுக்குப் பெலனளிக்கவேண்டும்; மேலும், நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை (ஏசா 57:1) என்ற வசனத்தின்படி சத்துருக்கள் தொடவும், தொடரவும் முடியாதபடி, பரம கானானுக்கு உள்ளே அவர் நம்மை இழுத்துக்கொள்ளுவார். இயேசு கிறிஸ்துவினுடைய சீஷர்கள் வீட்டிக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றாரே (யோவா 20:26).
லோத்து கதவைப் பூட்டினான்; ஆனால், தூதர்களோ, கதவின் பூட்டைக் கூட பார்க்கக்கூடாதபடிக்கு, சத்துருக்களின் கண்களையே பூட்டிவிட்டார்கள்' (ஆதி. 19:11). ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவர்; அப்படியே, ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவர் அவர் (வெளி. 3:7). லோத்துவின் வீட்டுக்கதவினைக்கூட சத்துருக்கள் உடைக்கக்கூடாது என்று சத்துருக்களின் கண்களையே பூட்டிவிட்டார்கள் தூதர்கள் அப்படியே, எலிசாவின் நாட்களில், எலிசாவைப் பிடிக்கும்படியாக சீரிய ராஜா மனுஷரை அனுப்பியபோது, எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார் கர்த்தர். தன்னைப் பிடிக்க வந்தவர்களிடத்தில், 'என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன்' என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோனான் எலிசா (2இரா 6:18,19). நம்மை எத்தனையாய் பாதுகாப்பின் வளையத்திற்குள் அவர் வைத்திருந்தாலும், என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் (யோவா 18:8) என்று தன்னையே பலியாகத் தந்தவர் இன்று நம் உள்ளத்தில் இருந்தாலேயே, உலகத்தின் அசுத்தங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் உயர்ந்த பாதுகாப்பு. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர் (சங் 16:10) என்பது தாவீதின் பாட்டு; தோல்வி இல்லை நமக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக