அமைதியின் ரகசியம்
அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும்போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான். (ஆதி. 22:5)
தன் புத்திரனும், ஏகசுதனும், நேசகுமாரனுமாகிய ஈசாக்கை பலியிடும்படியாக ஆபிரகாம் பயணப்பட்டுச் சென்றபோது, ஒரு கழுதையையும், இரண்டு வேலைக்காரர்களையும் உடன் அழைத்துச்சென்றான் (ஆதி. 22:3). மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டபோது, ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: 'நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள்,' நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும்போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான் (ஆதி 22:4,5). வேலைக்காரர்களை உடன் அழைத்துச் சென்றால், ஒருவேளை அவர்கள் தன் குமாரனைப் பலியிடும்போது குறுக்கே நிற்கக்கூடும் என்பதால், விட்டுவிடவேண்டிய இடத்தில் அவர்களை விட்டுவிட்டான். நம்முடைய வாழ்விலும், தேவன் நமக்குச் சொன்னவைகளைச் செய்துமுடிக்கவேண்டுமென்றால், தடையாயிருக்கும் மனிதர்களைவிட்டு விடைபெற்றால் மாத்திரமே அது சாத்தியம்.
வேலைக்காரர்களையும், கழுதையையும் நிறுத்திவிட்டு ஆபிரகாம் பலியிடவேண்டிய இடத்தை நோக்கிப் புறப்பட்டபோது, ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள் (ஆதி 22:6); 'தகனபலிக்கான கட்டைகளை மூன்றுநாட்கள் வரை கழுதையே சுமந்துகொண்டுவந்திருக்கக்கூடும்;' இப்போதோ, கழுதை சுமந்த கட்டைகள் ஈசாக்கிற்கு சுமையாகக் கொடுக்கப்படுகிறது. கட்டைகளைச் சுமக்க கழுதை இருக்கும்போது, கடினமான அப்பணியை நான் ஏன் செய்யவேண்டும் என்று ஈசாக்கு கேட்கவில்லை; ஆபிரகாம், குமாரன்மீது கட்டைகளை வைக்கும்போது அதனைப் பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாமின் இரண்டு வேலைக்காரர்களும் என்ன நினைத்திருப்பார்கள்? தங்கள் எஜமானாகிய ஆபிரகாம், தன் குமாரனை கழுதைக்கு ஈடாக மாற்றிவிட்டாரே என்றல்லவோ நினைத்திருப்பார்கள். கர்த்தருக்குப் பலியிடுவதில் ஈசாக்கிற்கு இருந்த ஆர்வத்தையே இது வெளிப்படுத்துகின்றது. பிறருடைய பாரங்கள் நம்மீது சுமத்தப்படும்போது நாம் அமைதியாக இருக்கிறோமா? கர்த்தருக்காக அதைப் பொறுத்துக்கொள்கிறோமா?
மேலும், 'இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது. தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே' (ஆதி 22:7) என்று ஈசாக்கு தன் தகப்பனிடத்தில் கேட்பதும், கர்த்தருக்குப் பலிசெலுத்துவதில் அவனுக்கு இருந்த ஆர்வத்தினையே வெளிப்படுத்துகின்றது. தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தபோது, அங்கே ஆபிரகாம் ஒரு பலீபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான் (ஆதி 22:9). ஆபிரகாம் பலிபீடத்தை உண்டாக்கும்போதும், கட்டைகளை அடுக்கும்போதும் ஈசாக்கின் கண்கள் ஆட்டுக்குட்டியைத்தானே தேடிக்கொண்டிருந்திருக்கும். இத்தனை ஆயத்தங்களைச் செய்தும் தகப்பனுக்கு ஆட்டுக்குட்டி கிடைக்கவில்லையென்றால், அத்தனையும் வீணாகிவிடுமே என்று ஒருவேளை ஈசாக்கு சிந்தித்துக்கொண்டிருந்திருக்கக்கூடும்.
எல்லா ஆயத்தங்களையும் செய்து முடித்தபின், தன்னை நோக்கி தகப்பன் வந்ததைக் கண்ட ஈசாக்கு என்ன நினைத்திருப்பான்? அப்பாவுக்கு, ஆட்டுக்குட்டி கிடைக்கவில்லை, இத்தனை தூரம் பயணித்து வந்த அவரால் பலிசெலுத்தமுடியாமல் போய்விடக்கூடாது என, பலிக்குப் பதிலாக தனது ஜீவனையே பலிபீடத்தில் வைத்துவிட ஈசாக்கு ஒப்புக்கொடுத்தான். தியானம் பண்ணுகிற வாலிபனாக மாத்திரமல்ல, கர்த்தருக்காக தன்னையே தியாகம் செய்கிறவனாகவும் காணப்பட்டான் ஈசாக்கு. மேலும், உன்னதமான யெகோவாவுக்கு என் தந்தை ஓர் ஆட்டுக்குட்டியை தகனபலியாகச் செலுத்துவார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்; ஆனால், 'ஆட்டுக்குட்டிக்கான இடத்தில் நானே யெகோவாவுக்கு பலியாகும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே' என்றும் அவன் நினைத்திருக்கக்கூடும்; அந்த நினைவே அவனை பலிபீடத்தில் அமைதியாயிருந்திருக்கச் செய்திருக்கும். நாமும் பலியாகவிருக்கும் நேரத்தில், இப்படிப்பட்ட நினைவினால் நிறைந்திருந்தால், ஆத்துமாவை அமைதி சூழ்ந்துகொள்ளும். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (1யோவா 3:16). பலிபீடத்திலும் அமைதி பதிலாகட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக