செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஆசீவாதமா? ஆகாரமா? (ஆதி 25:32,34)

ஆசீவாதமா? ஆகாரமா?



அதற்கு ஏசா: இதோ, நான் சாகாப்போகிறேனே, இந்தச் சேஷ;ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ;ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான். (ஆதி 25:32,34)


நாம் எதை தெரிந்துகொள்கிறோம் என்பது, நாம் யார் என்பதை அறிமுகப்படுத்திவிடப் போதுமானது. நம்முடைய தெரிந்துகொள்ளுதலினாலே, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நிலையை நாம் இழந்துவிடக்கூடாது. ஏசா மூத்த குமாரன், சேஷ்டபுத்திரபாகத்திற்குச் சொந்தக்காரன்; என்றபோதிலும் சரீரத்தில் உண்டான சோதனை அவனைச் சரிந்துவிழச் செய்தது. ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான் (ஆதி 25:30). அதைத் தொடர்ந்து, இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான் (ஆதி 25:32). 'களைத்திருக்கிறேன், இளைத்திருக்கிறேன், சாகப்போகிறேன்' என்ற சரீரப்பிரகாரமான நிலை, ஏசாவை சேஷ்டபுத்திரபாகத்தையே விலைக்கிரயமாகச் செலுத்தச்செய்துவிட்டது.   

சரீரத்தில் உண்டாயிருந்த சங்கடமான சூழ்நிலையில், தன்னுடைய வயிற்றை நிரப்பிக்கொள்வதற்காக, எதையும் இழக்க ஆயத்தமாயிருந்தான் ஏசா. எதிர்காலத்தைக் குறித்த கவலையற்றவனாக, இப்போது நான் திருப்தியடைந்தால் போதும் என்றே நினைத்துக்கொண்டிருந்தான். இத்தகைய மனநிலை 'சேஷ்டபுத்திரபாகத்தையே' அலட்சியம்பண்ணவைத்துவிட்டது (ஆதி. 25:34). ஆசீர்வாதமான ஆஸ்தியைக் காட்டிலும், ஆகாரமே அப்போது அவனது கண்களுக்குப் பெரியதாகத் தென்பட்டது. 

நம்முடைய வாழ்க்கையிலும், நமக்காக வைக்கப்பட்டிருக்கின்ற, முன்குறிக்கப்பட்டிருக்கின்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை இப்படியே அநேக நேரங்களில் நாம்  விட்டுக்கொடுத்துவிடுகின்றோம். 'இதோ, நான் சாகப்போகிறேனே' இப்போது சரீரத்திற்குரியவைகளுக்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆவிக்குரியவைகளையும், அழைப்பையும்கூட ஒதுக்கித்தள்ளிவிடுவோர் ஏராளம். நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக (1இரா 21:3) என்று நாபோத் தன்னுடையதைக் காத்துக்கொண்டானே. 

அப்படியே, பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்று சொன்னபோது, இயேசு கிறிஸ்து அவர்களை நோக்கி: ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றாரே (லூக் 10:17,20). 'எங்களுக்குக் கீழ்ப்படிகிறது' என்பதிலேயே இன்றும் அநேகர் சந்தோஷம் காண விரும்புகின்றனர்; பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதை மறந்துவிடுகின்றனர். இதனையே, அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் (மத் 7:22,23) என்று சொல்லுகின்றார். இவர்களெல்லாம், 'தீர்க்கதரிசனம் உரைப்பதிலேயே, பிசாசுகளைத் துரத்துவதிலேயே, அற்புதங்களைச் செய்வதிலேயே' சந்தோஷப்பட்டுக்கொண்டவர்கள். இன்றும், தங்களைத் தாங்களே சந்தோஷப்படுத்திக்கொண்டு, பரலோகத்தின் சந்தோஷத்தை பறிகொடுத்தவர்கள் அநேகர்.  

இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறவர்கள் (ரோம 16:18) ஏசாவைப் போன்றவர்களே. 'பிள்ளைகள்' என்பதை மறந்து 'தேவைகளையே' எப்போதும் முன்நிறுத்தினால் தேவராஜ்யம் நம்மை தேடாது. பிள்கைளின் சேஷ;டபுத்திரபாகம் தேவராஜ்யமே, சரீரத்தின் தேவைகள் தேவராஜ்யத்திற்கு நம்மை தூரமாக்கிவிடக்கூடாது.  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக