அடிகளுக்குப் பின்வரும் அங்கீகாரம்
அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம். ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம்பண்ணினோம். (ஆதி 26:28)
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவா 1:12) என்ற உரிமையினை, பிள்ளைகளான நாம் நன்கு அறிந்துணர்ந்திருந்தபோதிலும், அக்கம் பக்கத்திலுள்ளோரும், அயலகத்தாரும், அந்நியரும் நமக்கும் பிதாவுக்கும் இடையில் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உருவாகியிருக்கும் இந்த உறவை மாம்சீக அறிவினால் உணர்ந்துகொள்வது சற்று கடினமானதே. கிறிஸ்துவின் குணங்கள் நம்மில் வெளிப்படத் தொடங்கினாலும், கிறிஸ்தவர்கள் என்று அவர்கள் நம்மை அழைக்கத் தொடங்கினாலும், பிதாவுக்கும் நமக்கும் இடையிலான பிள்ளைகள் என்ற உறவை அவர்கள் தங்கள் 'உதடுகளால் அங்கீகரிப்பதோ' அத்தனை எளிதானது அல்லவே.
ஈசாக்கின் வேலைக்காரர்கள் தண்ணீருக்காக துரவுகளைத் தொடர்ச்சியாகத் தோண்டிக்கொண்டே வந்தனர். ஆனால், கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம் பண்ணினார்கள் (ஆதி 26:20,21). கன்மலையிலிருந்தும் தண்ணீரைக் கொடுக்கக்கூடிய கர்த்தர் உடனிருப்பதாலேயே ஈசாக்கின் காரியம் ஜெயமாயிருக்கின்றது என்பதை கேராரூரின் மேய்ப்பர்கள் அறிந்துகொள்ளவில்லை. வெட்டின துரவுகளிலிருந்தெல்லாம் அவர்களைத் துரத்திவிட்டபோதிலும், துரத்திவிடப்பட்ட இடங்களிலும் துரவுகளைத் தோண்டி தண்ணீரைக் கண்டார்கள் ஈசாக்கின் மேய்ப்பர்கள். எத்தனையாய் தடுத்து நிறுத்தினாலும் ஈசாக்கின் மேய்ப்பர்கள் துரவினைத் தோண்டி தண்ணீரைக் கண்டுகொள்வதைக் கண்ட கேராரூரின் மேய்ப்பர்கள், இது மனிதர்களால் உண்டாவதல்ல கர்த்தராலேயே உண்டாகின்றது என்பதை அறிந்துகொண்டார்கள்.
அப்படியே, யோபுவின் வாழ்க்கையில் உண்டான பாடுகளினால் ஆஸ்திகளை அவன் இழந்தாலும், பிள்ளைகள் அனைவரையும் இழந்தாலும் ஆண்டவருக்கும் அவனுக்கும் இடையில் இருந்த இறுக்கமான உறவை அவன் இழந்துவிடவில்லை; நண்பர்களாலோ அதனை உணர்ந்துகொள்ள இயலவில்லை. 'நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை' (யோபு 42:7,8) என்று யோபுவின் நண்பர்களை கர்த்தர் கடிந்துகொண்டதோடு, அதற்கு பரிகாரமாக பலிசெலுத்தும்படி யோபுவினிடத்திற்கே அவர்களை அனுப்பினாரே. யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினபோது (யோபு 42:10), கர்த்தர் அவன் உடனிருப்பதை நண்பர்கள் அறிந்துகொண்டனரே.
அவ்வாறே, இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்வதற்கு மனதற்றவர்களாகவே அநேக ஜனங்கள் காணப்பட்டார்கள். வார்த்தைகளால் நிந்தித்தார்கள், வாரினால் அடித்தார்கள், தேவாலயத்திற்குப் புறம்பாக்கினார்கள்; என்றபோதிலும், இயேசு கிறிஸ்து தொடர்ந்து பிதா தன்னை அனுப்பின நோக்கத்தை நோக்கியே பயணித்துக்கொண்டிருந்தார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள் (மத் 27:50-54).
இப்படியே, யோசேப்பு, தானியேல் போன்றோரின் வாழ்க்கையும் பாடுகளுக்குப் பின்னர் பிதாவின் பிள்ளைகள் என பிறரால் அங்கீகரிக்கப்பட்டதே. நம்முடைய வாழ்க்கையில் உண்டாகும் பாடுகள், நாம் பிதாவின் பிள்ளைகள் என்பதை உலகம் அறிந்துகொள்ளும்படியாகவே அனுமதிக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக