வீழ்ச்சியல்ல, வெற்றியே
யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். (ஆதி 39:20)
தொடரும் நம்முடைய பயணத்தின் இடையே, தடைகளை சத்துரு கொண்டுவரக்கூடும்; என்றாலும், தடைகளுக்குப் பின் ஆண்டவருடைய கரத்திலிருந்து வரும் விடையினையோ அறியாதவன் சத்துரு. சொந்த குமாரனும், ஒரே பேறான குமாரனுமாகிய இயேசு கிறிஸ்துவை தேவன் இந்த உலகத்தின் மனிதர்களை மீட்கும்படியாக, இரட்சகராக அனுப்பிவைத்தபோது, சத்துருவின் பார்வையோ, சிசுவிலேயே அவரது சரித்திரத்தை அழித்துவிடும் நோக்கிலேயே காணப்பட்டது. கண்மூடித்தனமாக கிராமத்திலுள்ள அனைத்து சிறார்களையும் சிரைச்சேதம் செய்தாலாகிலும், அந்த ஒரு சிசு செத்துவிடாதா என்று தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தான் அவன். பரலோகப் பிதாவின் பாதுகாப்பு பிள்ளையின் மேல் காணப்பட்டபோதிலும், பிள்ளையின் உயிரை வாங்கும்படியாக, பின்னாலேயேச் சுற்றிக்கொண்டிருந்தான்.
தனக்கு விரோதமாக தரையில் உதித்துவிட்ட அவரை, சிலுவையில் அறைந்துவிட்டால் அனைத்தும் முடிந்துவிட்டது என்றே நினைத்துக்கொண்டிருந்தான் சாத்தான். இயேசு கிறிஸ்துவை கொலை செய்துவிடும்படியாக பல மனிதர்களை ஏவிவிட்டான். அநேக சத்துருக்களையும் விரோதிகளையும் அவருக்கு விரோதமாக எழுப்பினான்; இவ்வுலகத்தில் இல்லாதபடி அவரை கொலை செய்துவிட எத்தனித்தான். வேதபாரகரையும், பிரதான ஆசாரியர்களையும் மற்றும் அதிபதிகளையும் தன் வசமாக வைத்துக்கொண்டு, தனக்குச் சாதகமாகக் காரியத்தைச் சாதித்துவிடத் துடித்தான். உடனிருந்த சீஷர்களுள் ஒருவனான யூதாஸ் காரியோத்தின் உள்ளத்திற்குள்ளேயே புகுந்து, அவரைக் காட்டிக்கொடுக்கும்படிச் செய்தான். கைதியைப் போலப் பிடிக்கப்பட்டு, தலையில் முள்முடி சூட்டப்பட்டு, வீதி வீதியாக இயேசு கிறிஸ்து அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது கோலத்தைக் கண்டு சாத்தான் சந்தோஷப்பட்டிருக்கக்கூடும். இத்தனை நாள் அயராத முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று நினைத்து, பெருமூச்சு விட்டிருக்கக்கூடும். அவருக்கு முன் தான் தோற்றுப்போன பல தருணங்களை நினைத்து, துரப்பட்ட பல தேகங்களை நினைத்து, இனி எல்லாம் எனக்குத்தான் என்று சந்தோஷப்பட்டிருக்கக்கூடும். சிலுவையில் இயேசு கிறிஸ்து தொங்கிக்கொண்டிருந்தபோதும், போர்ச்சேவகர்களாளல் வாரினால் அவர் அடிக்கப்பட்டபோதும், 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்', 'இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசில் இருப்பாய்' 'ஸ்திரீயே, அதோ, உன் மகன், சீஷனே அதோ, உன் தாய்' 'ஏலி! ஏலி! லாமா சபக்தானி' 'தாகமாயிருக்கிறேன்' 'எல்லாம் முடிந்தது' 'பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' போன்ற வார்த்தைகளை இயேசு சிலுவையில் உச்சரித்தபோதும், உயிரை விட்டபோதும், சுற்றி நின்ற ஜனங்கள் துக்கத்துடன் அவரை பார்த்துக்கொண்டிருந்திக்கக்கூடும்; எனினும், சத்துருவின் மனதிலோ, 'எல்லாம் முடிந்தது, இந்த உலகத்தில் நமக்கு எதிராக சுற்றிக்கொண்டிருந்தவரின் கதை முடிந்துவிட்டது, நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது, இனிமேல் இந்த பூமியில் நம்மை துன்பப்படுத்தவோ அல்லது துரத்தவோ யாரும் இல்லை, எந்த மனிதனின் வாழ்க்கையிலும் நான் புகுந்து விiயாடலாம்' என்ற சந்தோஷம் தவழ்ந்திருக்கக்கூடும். பூமியும் அதின் நிறைவும் இனி என்னுடைய கையில்தான் என்றும், என்னுடைய அதிகாரத்தில்தான் அவை இயங்கும் என்றும் அவன் நினைத்திருக்கக்கூடும்.
என்றபோதிலும், மரித்து மூன்றாம் நாள் உயிரோடுகூட இயேசு கிறிஸ்து எழுந்தபோதோ, சாத்தானின் கனவுகள் அனைத்தும் தகர்ந்துபோனது. பிதாவின் வலதுபரிசத்தில் வீற்றிருக்கும்படியாக மாத்திரமல்ல, முழு உலகமும் அவரது நாமத்தினாலே பாவ மன்னிப்பினைப் பெறும்படியாகவும், இரட்சிக்கப்படும்படியாகவும் இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயமாக வென்றாரே. சாத்தான் சரீரப்பிரகாரமாக இனி அவரை ஒன்றும் செய்ய இயலாத நிலைக்கு அவர் உயர்த்தப்பட்டுவிட்டாரே; எத்தனை பெரிய வெற்றி இது. எந்த இரத்தத்தை சாத்தான் சிந்தச் செய்தானோ, அந்த இரத்தமே நமது விடுதலைக்குக் காரணமாகவும் மாறிவிட்டதே.
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் (மத் 10:28) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை கற்றுத்தரும் பாடம் இதுவே. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருப்பின், சத்துரு நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றதைப் போலத் தோன்றினாலும், அது அவனுக்குத் தோல்வியே. யோசேப்பின் வாழ்க்கை பல இடங்களில் தோற்றுப்போனதைப் போலத் தோற்றமளித்தாலும், அவை அனைத்தும் வெற்றியே என்பது அவன் சிங்காசனமேறியபோது நமக்குப் புரிகிறதல்லவா! மரணம் வரையிலான காரியங்களில் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் தனது கையை நுழைக்கவும், அதிகாரம் செலுத்தவும் சத்துரு முயற்சி செய்வான். என்றபோதிலும், நமக்கு விரோதமான அவனது முயற்சியில் ஒருவேளை சரீரப்பிரகாரமாக நாம் தோற்றுப்போனது போலக் காணப்பட்டாலும், அது விண்ணக திட்டத்தின் வெற்றிக்கே வழி வகுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக