மக்னாயீம்
யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான். (ஆதி. 32:2)
ஆண்டவர் காட்டும் திசையினை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்குவோமென்றால், பலமானதோர் பாதுகாப்பும் நமக்கு அவருடைய கரத்தால் இருக்கிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். சூழ்நிலைகளோ, இயற்கைச் சீற்றங்களோ, மனிதர்களோ அல்லது மிருகங்களோ எது எதிர்த்து வந்தாலும், சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் (சங். 91:13) என்ற வாக்குத்தத்தம் நமக்கு வழியினை ஆயத்தப்படுத்தித் தரும். அதுமாத்திரமல்ல, நம்முடைய பாதங்கள் படும்போது, வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும் (ஏசா. 35:1) என்ற வார்த்தையும் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறும்.
தகப்பனிடத்திலிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டபின், லாபானுடைய வீட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றான் யாக்கோபு. யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டபோது, அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன் (ஆதி. 28:10-13) என்று சொன்னார்; அது ஆசீர்வாதத்தை அறிவிக்கும் சந்திப்பு. (ஆதி. 28:14)
ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதோடு மாத்திரமல்ல, அவர் விரும்பும் திசையிலும் பயமின்றி நாம் பயணிக்கவேண்டும் என்று பாதுகாவலாகவும் அவர் உடன் வருகிறார் (எண். 6:24). ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, லாபானுடைய வீட்டிலிருந்து யாக்கோபு புறப்பட்டபோது, 'தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்'; ஏசாவை தான் எதிர்கொள்ளவிருப்பதைக் கண்டு பயந்த யாக்கோபு, தேவதூதர்களை, 'தேவனுடைய சேனையாகவே' (புழன'ள ர்ழளவ) பார்த்தான். இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்லும்போதும், 'வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்' (யாத் 23:20) என்று ஆண்டவர் சொன்னாரே. மேலும், என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் (யாத் 33:14) என்று தாசனாகிய மோசேக்கு ஆண்டவர் வாக்குக் கொடுத்தாரே. அதுமாத்திரமல்ல, நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா 45:2) என்பதல்லவோ அவர் நமக்குத் தரும் தைரியம். உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையம் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன் (யாத் 23:28) என்கிறாரே. எப்படியாகிலும், அவர் விரும்பும் திசையில் பயமின்றி தொடர்ந்து நாம் பயணிக்கவேண்டும் என்பதில்தான் ஆண்டவருக்கு எத்தனை விருப்பம்.
ஆண்டவருடைய இத்தகைய பாதுகாப்பினை உணர்ந்து, அவர் விரும்பும் திசையில் பயணத்தைத் தொடங்காமல், கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தையே பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டிருப்பதிலேயே பலருடைய வாழ்நாள் முடிந்துவிடுகின்றது. அழைப்பை உணர்ந்தவர்களாக, அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, ஆண்டவர் காட்டும் திசையில் நாம் புறப்பட்டுச் செல்லுவோமென்றால், பாதுகாப்பைக் குறித்து பயப்படத் தேவையில்லை; யுத்தம் கர்த்தருடையது (2 இராஜா.19:35). உடனிருக்கும் பாதுகாப்பினை உணராததினாலேயே, பயத்தினால் அநேகருடைய பயணம் தடைபட்டுப்போனது. அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றானே எலிசா (2இரா 6:16). எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளும் இரதங்களும் நிறைந்திருந்ததே (2இரா 6:17); இதுவே 'மக்னாயீம்'. எனினும், விரும்பாத திசையில் சென்றால் தூதனுடைய பட்டயத்திற்கு நாமே பலியாக நேரிடும் (எண். 22:31).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக