தூரமாக நிற்கும் துணை
அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும். என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள். (ஆதி 16:5)
சந்ததிக்காக ஆபிராம் சிந்தித்துக்கொண்டிருந்தான்; வீட்டில் பிறந்த பிள்ளையை சுதந்தரவாளியாக நினைத்துக்கொண்டிருந்தான்; ஆனால், மற்றொரு பெண்ணிடம் தனது சரீரத்தை பறிகொடுக்க அவன் முயற்சிக்கவில்லை; அந்தத் தவற்றைச் செய்யும்படி சாராயே ஆபிராமைத் தூண்டினாள். சந்ததி வேண்டும் என்பதற்காக, ஆபிராமையும், ஆகாரையும் சேர்த்துவிட்டு, சாராயோ தூரமாக நின்றுகொண்டாள்.
'என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும்' (ஆதி. 16:2) என்று சொன்னவள் சாராயே. அப்படியே, 'எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்ததும் சாராயே.' (ஆதி 16:3)
ஆனால், தனது கணக்கு பொய்த்துப்போனபோதோ, ஆனந்தம் வரும் என எதிர்பார்த்தவளாள் தான் அற்பமாக எண்ணப்பட்டபோதோ, 'எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்' (ஆதி. 16:5) என்று பழியை ஆபிராமின் வசமாகத் திருப்பிவிடுகிறாள் சாராய்.
தன் மடிக்குத்தான் பிள்ளையைத் தேடுகிறாள் சாராய், ஆனால் பிரச்சனை வந்தபோது, 'உம்முடைய மடியிலே கொடுத்தேன்' என்கிறாள். இதைப்போலவே, இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று யாக்கோபினிடத்தில் சொன்னாளே ராகேல். (ஆதி 30:3)
தனக்கும் ஆகாருக்கும் இடையிலான பிரச்சனையை, தனக்கும் கணவனுக்கும் இடையிலான பிரச்சனையாக மாற்றிவிட்டாள் சாராய். அதுமாத்திரமல்ல, குற்றத்தை தான் செய்துவிட்டு, குற்றவாளிக் கூண்டில் ஆபிராமை ஏற்ற முற்படுகிறாள் சாராய்.
ஒருவேளை, 'இனி ஆபிராமும் ஆகாரும் சேர்ந்து வாழட்டும், நாம் பிரிந்துகொள்ளுவோம்' என்றோ அல்லது, 'ஆகாரை வீட்டிலிருந்து எப்படிhயவது துரத்திவிடுவோம்' என்றோ கடினமான முடிவுக்கு சாராய் வந்துவிட்டாள் என்பதையே அவளது வார்த்தைகள் வெளிக்காட்டுகின்றன. பிரியமானவர்களே, ஆண்டவருக்குப் பிரியமில்லாமல் நாம் சேர்க்கும் காரியங்கள், ஆண்டவரிடமிருந்து அதாவது நமது பரலோக மணவாளனிடமிருந்தே நம்மைப் பிரித்துவிடும் என்பது நிச்சயம். 'ஆதாயம்' என்று நினைத்து சேர்க்கும் காரியங்கள், 'ஆத்துமாவை' பறித்துவிடக்கூடும்.
அப்படியே, ஏவாளும் ஆதாமை விட்டுத் தூரமாக தனியே இருந்தபோதுதான் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டாள். விசாரிக்கப்படும் நிலை வந்தபோதோ, 'என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்' என்று மனைவியைக் குற்றஞ்சாட்டினான் ஆதாம். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்;: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். (ஆதி 3:12,13)
'சர்ப்பம் என்னை வஞ்சித்தது' என்று ஏவாள் சொன்னது, 'சாராயை வஞ்சித்தது யார்?' என்ற கேள்வியையே நம் முன் நிறுத்துகின்றது. துணை தூரமாக நின்றால், இடையிலே எகிப்து புகுந்துவிடக்கூடும்; எச்சரிக்கையாயிருப்போம்;.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக