சனி, 9 அக்டோபர், 2021

உறவும், உணர்வும் (ஆதி 39:12)

 

 உறவும், உணர்வும்



அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். (ஆதி 39:12)


மரணத்திற்கு நேராகவே நம்மை இழுக்கும் மாம்சத்தோடு, ஆத்துமாவும் அழிவைச் சந்தித்துவிடக்கூடாது. திருமணம் முடிந்திருந்தும், திருப்தியடையாத சரீரத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தாள் போத்திபாரின் மனைவி. கணவன் உடனிருந்தபோதிலும், உயிரோடிருந்தபோதிலும், அவளது மாம்சீகக் கண்களோ மற்றவர்களை தனக்கு இரையாக்கும்படிக்குத் துடித்துக்கொண்டிருந்தன. உடல் கணவனோடு இருந்தபோதிலும், அவளுடைய உணர்வுகளோ யோசேப்பின் மேலேயே தொங்கிக்கொண்டிருந்தன. 'பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார்' தனது கணவனாயிருந்தபடியினால், கணவனின் அதிகாரத்தினிமித்தம் தனக்குக் கிடைத்த அத்தனை சுகபோகமான காரியங்களையும் அவள் தனது வாழக்கையில் அனுபவித்திருக்கக்கூடும்; நல்லதோர் வீடு, கூப்பிட்டதும் ஓடிவரும் வேலைக்காரர்கள், உயர்தர உணவுகள் மற்றும் உடைகள் என 'கணவனால் கிடைத்த' அத்தனையையும் அவள் அனுபவித்துக்கொண்டிருந்தபோதிலும், முழு மனதோடு கணவனை அவளால் நேசிக்க இயலவில்லை. 

அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்த (ஆதி 39:6) யோசேப்பைக் கண்டபோது, 'வீட்டை இடித்து, வேசித்தனம் செய்ய துடித்தாள்.' திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும் (நீதி 27:7) என்பது சாலமோனின் வார்த்தையல்லோ. அப்படியே, 'தேனைப் போல' கண்களுக்கு இனிமையானவனாக யோசேப்பு காணப்பட்ட போதிலும், 'திருப்தியடையாததினால்' அவனை விட்டு விலக மனதில்லை. என்றபோதிலும், பரஸ்திர்Pயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும் (நீதி 5:3) என்ற வசனத்தின்படி, யோசேப்போ வஸ்திரத்தை விட்டு விட்டு தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொண்டானே.  

உள்ளத்தின் உட்புறத்தை வேறெங்கோ ஒளித்துவைத்துக்கொண்டு, வெளிப்புறத்தில் மாத்திரம் ஆண்டவருக்கு ஆராதனை செய்யும் மனிதர்கள் அநேகர் உண்டு. மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1சாமு 16:7) என்ற சத்தியத்தைக்கூட மறந்தவர்களாக, ஆண்டவரை ஆராதிக்கும்படியாகத் துணிவோரும், ஆலயத்தின் படிகளில் ஏறி இறங்குவோரும் ஏராளம். என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் (யாத் 20:3) என்பதுதானே அவர் நமக்குத் தந்த கட்டளை. இதனை வலியுறுத்தும்படியாகவே, 'நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே' (1கொரி 10:20,21) என்று பவுலும் தனது நிருபத்தில் குறிப்பிடுகின்றாரே. கன்மலையின் மேல் நின்றுகொண்டிருக்கும் நாம், நமது கண்களை வேறெங்கும் ஏறெடுத்துப் பார்த்து, அவருக்கும் நமக்கும் இடையிலான உறவில் பங்கம் உண்டாக்கிவிடாதபடி கவனமாயிருக்கவேண்டியது அவசியம்.  

திருப்தியடையாத சரீரம் அல்லது மாம்சம், தனது ஆசையையோ அல்லது விருப்பத்தையோ நிறைவேற்றிக்கொள்ள, எந்நேரமும் திசை திரும்பிப் பயணித்துவிடக்கூடும். ஆத்துமா ஆண்டவரண்டை இழுத்தாலும், மாம்சத்தின் பெலன் நம்மில் அதிகம் கிரியை செய்யுமென்றால், அது நம்மை மண்ணுக்குள் புதைத்துவிடுவது மாத்திரமல்ல, இரட்டை வேடத்தோடு இத்தரையில் வாழுபவர்களாகவும் நம்மை மாற்றிவிடும். மாம்சத்தின் இச்சையினால் மரணத்தைத் தழுவி, 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை' என்ற பெயரோடு பிணங்களாக வாழும் மனிதர்கள் இவர்களே. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது (ஏசா 29:13) என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தர் உரைத்த வார்த்தைக்குப் பொருத்தமாகவே அத்தகையோரின் வாழ்க்கை காணப்படும். இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் (யாக் 1:8) என்று யாக்கோபு எழுதுவதைப்போல, அவர்களின் பாதங்கள் பயணிக்கும் பாதையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விலகிச் சென்றுவிடக்கூடும். நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் (1இரா 18:21) என்று எலியா தீர்க்கதரிசி சூளுரைத்த கூட்டத்தினருக்கு ஒப்பானவர்களாகவே அவர்கள் காணப்படுவார்கள். 

    நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட நிலை உண்டாகிவிடக்கூடும். அவரது மணவாட்டிகளாகத் தெரிந்து கொள்ளப்பட்டிருந்தபோதிலும், 'மணவாளியே' என்று மனதார நம்மை அவர் அழைத்துக்கொண்டிருக்கும்போதிலும், மணவாளிக்குத் தேவையான அத்தனை ஆசீர்வாதங்களையும், கிருபைகளையும் அனுதினமும் அருளிக்கொண்டிருந்தபோதிலும், உலகப்பிரகாரமான காரியங்களால் உள்ளத்தில் ஈர்க்கப்பட்டு, ஆண்டவருக்கும் நமக்கும் இடையிலான உறவிற்கு நாம் துரோகம் செய்துவிடக்கூடும். 'உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக' (மத் 22:37) என்ற வார்த்தையை மறந்துவிடுவோமென்றால், நம்முடைய வாழ்க்கை அவருக்கு வருத்தத்தை உண்டாக்கிவிடும் என்பது உறுதி. 'வாழ்விலும், சாவிலும், சுகத்திலும், துக்கத்திலும், மரணம் நம்மைப் பிரிக்குமளவும், பிறர் முகம் பாராமல் இவருக்கே மனைவியாயிருப்பாயா?' என்று கேட்கப்படும் கேள்வி இவ்வுலக இல்லற வாழ்க்கையோடு முடிந்துபோவது அல்ல; மாறாக, மறுவாழ்வில் நாம் பிரவேசிக்கும்போதும், மணவாளனாக எதிர்கொள்ளவிருக்கும் இயேசு கிறிஸ்துவை மனதில் கொண்டவாறு தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டியது. 

சமாரிய ஸ்திரீ மாம்சத்தில் சரிந்துபோனவளாகக் காணப்பட்டபோதிலும், சத்தியம் தன்னைச் சந்தித்தபோது ஆத்துமாவை உயிர்ப்பித்துக்கொண்டாள். 'நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா' என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது, சமாரிய ஸ்திரி பிரதியுத்தரமாக, எனக்குப் புருஷன் இல்லை என்றாள். அப்பொழுது இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஜந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார் (யோவா 4:16-18). சமாரிய ஸ்திரீயின் வாழ்க்கையும் திருப்தியடையாத நிலையிலேயே காணப்பட்டது; என்றபோதிலும், இயேசு கிறிஸ்து அவளைச் சந்தித்தபோது, 'தாகத்துக்குத் தா' (யோவான் 4:8)என்று கேட்டார்; சிலுவையில் அவரது உதடுகள் உச்சரித்த வார்த்தையும் 'தாகமாயிருக்கிறேன்' என்பதுதானே. நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே  அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் (யோவான் 4:10) என்று இயேசு கிறிஸ்து சொன்னதோடு, 'உன்னுடனே பேசுகிற நானே அவர்' (யோவா 4:26) என்றும் சொன்னபோது, அவளுடைய வாழ்க்கை திருப்தியடைந்ததோடு, மற்றவர்களையும் இயேசு கிறிஸ்துவுக்கு நேராக திருப்பும் கருவியாகவும் மாறியதே.

மனைவி இருந்தும், மாம்சத்தை அடக்கிக்கொள்ள இயலாத தாவீது மற்றொருவனது மனைவியின் மேல் சாய்ந்துவிட்டானே. ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான். யுத்தத்திற்குச் செல்லாத தாவீதின் மாம்சத்தோடு யுத்தத்தைத் தொடங்கினான் சத்துரு. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான் (2சாமு 11:1,2,4). வீட்டை விட்டு வெளியேறி கர்த்தருக்காக யுத்தம் செய்ய நாம் புறப்படாவிட்டால், நமது வீட்டுக்குள்ளேயே சத்துரு ஊடுருவி நம்மோடு யுத்தம் செய்யக்கூடும். ஆத்துமாவை யுத்தத்தில் உபயோகப்படுத்தாவிட்டால், மாம்சம் யுத்தத்தில் வென்றுவிடக்கூடும். 

உப்பரிகையின் மேல் நின்றுகொண்டிருந்தாலும், பிசாசு உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு இயேசு கிறிஸ்து செவிகொடுக்காமல், அவனால் உண்டான சோதனையில் ஜெயித்தாரே. அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொல்லி (மத் 4:5,6), உப்பரிகையின் மேலிருந்து இயேசு கிறிஸ்துவை தள்ளிவிட வசனத்தினால் முயற்சித்தபோது, 'உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக' (மத். 4:7) என்று வசனத்தினாலேயே அவனை வென்றாரே. இயேசு கிறிஸ்துவை எப்படியாகிலும் கொன்றுவிடவேண்டும் என்பதே சத்துருவின் திட்டமாயிருந்தது. ஜெப ஆலயத்தில் அவர் உபதேசித்தபோதும், ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள் (லூக் 4:28,29) என்றே வாசிக்கின்றோம். 

உயரமான இடத்திற்கு நாம் கொண்டுசெல்லப்படும்போது, வசனத்தில் உறுதியாயிராவிட்டால், தாவீதைப்போல தோல்வியையே சந்திக்க நேரிடும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக