புதன், 13 அக்டோபர், 2021

வலியின் பிரதியொலி (ஆதி 31:49)

வலியின் பிரதியொலி



அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல், வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர். (ஆதி 31:49)


'திருப்பி அளக்கப்படுவதைக் குறித்து கவலைப்படாமலேயே சில வேளைகளில் நாம் அளந்துவிடுகின்றோம்'. பிறருக்குக் கொடுப்பதில் பாரபட்சமாகவும், தனக்குக் கிடைக்கவேண்டும் என்பதிலோ ஒருதலைப் பட்சமாகவும் இருந்துவிடுபவர்கள் அநேகர். தனக்குக் கிடைப்பதில் 'சரிந்துவிழவேண்டும்' என்று நினைக்கும் அதே நேரத்தில், பிறருக்குக் கொடுப்பதில் தங்களுடைய வாழ்க்கை சரிந்துவிழுந்துவிடுவதைக் காணத் தவறிவிடுவோர் அநேகர். எனவே, வாழ்க்கையின் வழிகளில் வலிகள் உண்டாகும்போது, விதைத்தவைகளின் விளைவினால்தான் அவைகள் வருகின்றனவோ என்ற பயம் நம்மை நிறைத்துவிடுகின்றது; அல்லது, என்றோ செய்த தவற்றிற்கு, இன்று தீர்ப்பு வருகிறதோ என்ற வருத்தத்தில் நிலைதடுமாறிவிடுகின்றோம். லாபானுடைய நிலை இத்தகையதே 'நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்' (லூக் 6:38) என்று இயேசு கிறிஸ்து போதித்தாரே.   

தன்னுடைய தெய்வங்களைத் தேடி லாபான் யாக்கோபை பின்தொடர்ந்து சென்றாலும், அவனுடைய உள்ளத்திலோ அநேக கேள்விகளும், பயங்களும், எதிர்பார்ப்புகளும் உறைந்திருந்தன. தன்னைத் தேடி வந்த யாக்கோபு, இத்தனை சீக்கிரமாகத் விட்டுவிட்டுச் சென்றுவிடுவான் என்று லாபான் எதிர்பார்த்திருக்கவில்லை. தற்செயலாக வந்த யாக்கோபை, தன்னோடு கூடவே நிரந்தரமாகத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்பதே லாபானுடைய தந்திரமாயிருந்தது. யாக்கோபு எதிர்பார்ப்பதையெல்லாம் கொடுப்பதுபோலத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் லாபானுக்கு ஓர் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மகளைக் கேட்டபோது மறுக்காமல் கொடுத்ததற்கும், மறுபக்கத்தில் இருந்த எதிர்பார்ப்பே காரணம். 

எனினும், லாபான் யாக்கோபை நோக்கி, 'நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல், வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்' என்று தனக்கு இருந்த பெரியதோர் பயத்தை லாபான் யாக்கோபினிடத்தில் பதிவு செய்கிறான்  (ஆதி 31:49). யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான். அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்கு கொடுக்கிறதைப் பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான் (ஆதி 29:18,19). என்றபோதிலும், என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் (ஆதி 29:21) என்று கேட்டபோது, அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான் (ஆதி 29:23). காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான் (ஆதி 29:25). 

இந்த வார்த்தைகளை யாக்கோபு எத்தனை வலியோடு உச்சரித்திருப்பான்? எதிர்பார்த்தது ஒருவள்; ஆனால், கிடைத்ததோ இன்னொருவள். இன்னும் ஒருவள் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்திருக்கிறாள் என்று சந்தோஷப்படவில்லை; மாறாக, நேசித்த ராகேலுடன் இன்பமாக வாழ்வதற்கு இடையூறாகத்தான் லேயாளைப் பார்த்துக்கொண்டிருந்தான் யாக்கோபு. எனவே, ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போதும், 'இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார்' (ஆதி. 29:32) என்றும், 'நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக கர்த்தர் கேட்டருளி' (ஆதி. 29:33)என்றும், 'இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார்' (ஆதி. 29:34) என்றும், 'இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார்' (ஆதி. 30:20) என்றும் தனது மனத்தாங்கலை வெளிப்படுத்துகின்றாள். 

ராகேலுக்குப் பதிலாக லேயாளைக் கொடுக்கும்போது, லாபானின் மனது வலிக்கவில்லை; ஆனால், அதே நிலை தன்னுடைய குமாரத்திகளுக்கு நடந்துவிடுமோ என்று நினைக்கும்போதோ லாபானின் மனது வேதனையடைகின்றது. நேர்மையாய் நடந்துகொண்டால் இத்தகைய வேதனைகள் நேர்ந்துவிடாதபடி நம்முடைய வாழ்க்கையைக் காத்துக்கொள்ளலாம்.  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக