உயிரை இழந்த உப்பு
அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். (ஆதி 19:26)
விடுதலையினை வாழ்க்கையில் பெற்றிருந்தபோதிலும், தொடரோட்டத்தில் தொய்ந்துபோய், எட்டிப்பிடிக்கவேண்டிய இலக்கை தொட்டுக்கூடப் பார்க்க இயலாமற்போய்விட்டவர்கள் அநேகர். அப்படியே, விட்டுவிட்டு ஓடினாலும் பார்வையினால் பிற காரியங்களுக்கு இருதயத்தைப் பறிகொடுத்து, பயணத்தை நிறுத்திக்கொண்டவர்களும் அநேகர். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் (மத் 5:13) என்ற உயர்ந்த தேவ சித்தத்தை சத்தமாகக் காதுகளில்; கேட்டும், வழியிலே விருப்பமானவைகளைத் திரும்பிப்பார்த்து உப்புத்தூணாகிவிட்டார்கள் பலர். சோதோமிலிருந்து லோத்து குடும்பமாக விடுவிக்கப்பட்டான், என்றாலும், தொடரோட்டத்திலே மனைவியோ உப்புத்தூணாகி நின்றுவிட்டாள். தூணாகி நின்ற அவளிடத்தில் உப்பின் சுவை இருந்தது உண்மைதான்; என்றாலும், உப்பைச் சுமந்துகொண்டு உலகத்தைச் சுற்றிவரக்கூடிய சுவாசத்தையோ அவள் இழந்திருந்தாள். இன்றும், உப்பைச் சுமந்துகொண்டு ஓரிடத்திலேயே நின்றுகொண்டிருந்தால், நாமும் லோத்துவின் மனைவிக்கு ஒப்பானவர்களே. ஆண்டவரால் அளிக்கப்படும் ஆசீர்வாதம் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு, இருக்கிற இடத்திலிருந்து அசையமுடியாத நிலையில் இருக்கும் மக்கள் உண்டே.
இதனையே, சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் (வெளி. 3:1) என்று உயிருள்ள நிலையினையும் செத்த நிலையையும் அதாவது உப்பாயிருக்கிறோம் என்று பெயர்கொண்டிருந்தும், உலகத்திற்குப் பயனின்றி உயிரற்ற நிலையிலிருப்பதை உணர்த்துவிக்கிறார். நம்முடைய நிலை சர்தை சபையின் நிலைக்கு ஒப்பாக ஆண்டவரால் அளக்கப்படக்கூடாதே.
'உலகத்திற்கு உப்பாயிருக்கிறோம்' என்பதும் 'உலகத்திற்கு ஒளியாயிருக்கிறோம்' என்பதும் அநேர் அறிந்ததே; என்றாலும், உலகத்தைச் சுற்றிவரவோ மனதற்ற நிலையில் ஓரிடத்திலேயே வாழ்க்கையினை மரிக்கச் செய்துவிட்டவர்கள் அவர்கள். அவர்களிடமிருக்கும் உப்பின் சுவையைப் பார்த்து உலகம் அசந்துபோகலாம்; ஆனால், அவர்களோ அசைய முடியாத தூண்களே. ஆண்டவரைப் பின்பற்றியதால், ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள் என்று நாம் எடைபோடலாம்; என்றாலும், போகவேண்டிய இடத்திற்கு போகமுடியாமற்போன உப்புத்தூண்களே அவர்கள் என்பதை அறிந்தால், அவர்கள் செயலிழந்தவர்கள் என்பது தென்படும்.
மேலும் ஒரு காரியத்தை இங்கே நாம் புரிந்துகொள்வது அவசியம். குடும்பத்தின் தலையாகிய கணவன் முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான்; ஆனால், மனைவியோ பின்னிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். விளைவு எஞ்சினை விட்டுவிட்டு ரயில்பெட்டி கழன்றுசென்றுவிட்ட நிலையாகிவிட்டது. அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள் (மத் 24:40,41) என்ற இயேசுவின் போதனையின்படியான இறுதித் தீர்ப்பில் இரக்கம் இடைபடாமற்போய்விட்டது. அப்படியே, எஞ்சின் ஒருவேளை பழுதாகிவிட்டால், ஆண்டவரே தலையாக வந்து பெட்டியினை தன்னோடு இழுத்துச் செல்லுவார் என்ற நிகழ்வும் நடைபெறுமென்பதும் நாம் அறியவேண்டியது. இதனையே, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார் (எபே 1:21-23) என்று குறிப்பிடுகின்றார் பவுல்.
மேலும், லோத்துவின் மனைவி உப்புத்தூணாக மாறியபோதிலும்கூட, லோத்து அங்கே தாமதிக்கவில்லை; குமாரத்திகளைக் கூட்டிக்கொண்டு தொடர்ந்து பயணப்பட்டுச் சென்றுகொண்டேயிருந்தான். லோத்து மனைவியை உதறவில்லை; ஆனால், மலரைப்போலிருந்த லோத்துவின் மனைவியோ நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான் (சங். 92:12) என்ற மரத்திலிருந்து உதிர்ந்துபோனாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக