திங்கள், 11 அக்டோபர், 2021

சோதனை (ஆதி 22:2)

 சோதனை  



இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். (ஆதி 22:2)


ஆவிக்குரிய வாழ்க்கையின் அஸ்திபாரம் அசைக்கப்படாமலிருக்க, சோதனையினைச் சந்திக்கவேண்டியது அவசியமே. அழைப்பினைப் பெற்ற ஆபிரகாம் ஆபிரகாம், சரீரப்பிரகாரமாக பல சோதனைகளைச் சந்தித்தான்; பயணத்தின்போது பஞ்சத்தை சந்தித்தான் (ஆதி. 12:10), எகிப்துக்குச் சமீபமாய் ஆபிரகாம் வந்தபோது மனைவியாகிய சாராள் பார்வோனால் அழைத்துக்கொண்டுபோகப்பட்டாள் (ஆதி. 12:15), உடன் பயணித்துக்கொண்டிருந்த லோத்துவின் மந்தை மேய்ப்பருக்கும், ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டானது (ஆதி. 13:7), மனைவியாகிய சாராள் நேரடியாக ஆபிரகாமின் சரீரத்தோடுகூட போராடினாள், நீண்ட நாட்களாக பிள்ளையில்லாமல் இருந்தான் (ஆதி. 15:2,3), எகிப்து தேசத்தாளாகிய தன் அடிமைப்பெண் ஆகாரை ஆபிரகாமின் மடியில் கொடுத்தாள் (ஆதி. 16:1,2), சாராளுக்கும் ஆகாருக்கும் இடையில் உருவெடுத்த பிரச்சனையினைச் சந்திக்கவேண்டியதாயிற்று (ஆதி. 21:10), கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு சாராளை அழைத்துக்கொண்டுபோனான் (ஆதி. 20:2), அபிமெலேக்கின் வேலைக்காரர்கள் ஆபிரகாம் தோண்டின துரவுகளைத் கைவசப்படுத்டதிக்கொண்டார்கள் (ஆதி. 21:25). எனினும், இந்தச் சோதனைகள் மாத்திரம் ஆபிரகாமை நீதிமான் என்றும், விசுவாசிகளின் தகப்பன் என்றும் நிரூபிக்கப் போதுமானதாயிருக்கவில்லை; கர்த்தருக்குப் பயப்படுகிறவன் என்பதை நிரூபிக்க (ஆதி. 22:12) மற்றும் ஒரு சோதனையைச் சந்திக்கவேண்டியதாயிருந்தது.  

வெளிப்புறத்தை மாத்திரமல்ல; உட்புறமும் சுத்தமாகவேண்டுமே. பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.  மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?  உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும் (லூக் 11:39-41) என்று,  'கொடுக்காவிட்டால் கூட உட்புறம் அழுக்காகவேயிருக்கும்' என்பதைப் போதித்தார் இயேசு கிறிஸ்து. 'நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா' என்று சொன்னபோது, அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.  அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 19:24). 

பிறருக்குக் கொடுக்க மனதில்லாதவனின் மனம் இருளிலேயே இருக்கிறது என்றும், பரலோகத்திலே அவனுக்கு இடமில்லை என்பததையும்;தானே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம் (ஏசா 58:7) என்கிறாரே. ஆண்டவர் என்றால் அள்ளிக் கொடுத்துவிடும் பலர், அடுத்தவரென்றால் கிள்ளிக் கொடுப்பதுண்டே.  

தந்ததையே திருப்பிக்கேட்கும்போது, கொடுத்துவிடும் குணம் இல்லாமல், கோணலான திசையில் அவரை விட்டு விலகிச் செல்லும் மக்கள் உண்டு. முதற்கட்டச் சோதனையைத் தாண்டி பின், இரண்டாம் கட்டச் சோதனைக்கு நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும். ஆபிரகாம் கொடுப்பதிலேயே இறுதிக்கட்டமாகச் சோதிக்கப்பட்டான். தேவன் கேட்பவைகளைத் தங்களோடு வைத்துக்கொண்டிருப்பவர்கள், சோதனையில் தோற்றுப்போனவர்களே. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக