சத்துருவை உண்டாக்கிய சாராய்
அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள். (ஆதி 16:6)
அவன் துஷ;டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.(ஆதி 16:12)
மற்றவர்களை நாம் எப்படி உருவாக்குகின்றோம், அவர்களோடு எப்படி உறவுகொள்கின்றோம், உரையாடுகின்றோம்? என்பது முக்கியமானது. நம்முடைய குணத்தைக் காட்டி, மற்றவர்களை குழியில் போட்டு பலியாக்கினாலும், பழியிலிருந்து ஒளிந்துகொள்வது இயலாததே. சாராய், அடிமைப் பெண்ணாகிய ஆகாரைத்தான் கடினமாக நடத்திக்கொண்டிருந்தாள்; ஆனால், சாராயின் கடினமான குணம், ஆகாரின் கருவுக்குள் நுழைந்துவிட்டது. நம்மோடு பழகுகிற, பணி செய்கிற, வாழ்கின்ற, குடும்பத்திலிருக்கின்ற, ஊழியம் செய்துகொண்டிருக்கின்ற மனிதர்களோடு கோபமாகவோ, கடினமாகவோ நாம் பேசும் வார்த்தைகள் அவர்களைக் காயப்படுத்துவதோடு மாத்திரமல்லாமல், அவர்களையும் கடினமானவர்களாக மாற்றக்கூடும் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
மேற்கண்ட இரண்டு வசனங்களையும் இணைத்து வாசிக்கும்போது, 'சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால், அவன் துஷ;டமனுஷனாயிருப்பான்' என்ற கோர்வையான வரிகள் நாம் கற்றுக்கொள்வதற்கான பாடமாக கிடைக்கின்றதே. நம்முடைய வாழ்க்கையில் நம்மோடு கூட இருக்கும் மனிதர்களை நம்முடைய குணத்தினால் கடினமுள்ளவர்களாக நாம் மாற்றிவிடக்கூடாது. ஆனால், பார்வோனுடைய இருதம் கடினமானபோது, ஆண்டவருடைய இருதயமும் கடினமாயிற்று. என்றபோதிலும், யெகோவாவோடு உறவிலிருக்கும் மனிதர்கள் சகோதரர்களாலோ, சத்துருக்களாலோ கடினமாக நடத்தப்பட்டாலும், தாங்கள் கடினமடைவதற்கு இடங்கொடுப்பதில்லை. சகோதரர்கள் எத்தனையாய் யோசேப்பை கடினமாக நடத்தியிருந்தபோதிலும், கர்த்தரோடு நெருங்கி வாழ்ந்த அவனை அது கடினமுள்ளவனாக மாற்றவில்லையே.
பிலேமோன் பவுலுக்குப் பிரியமானவன், உடன் வேலையாள் (பிலே. 1:1), அவனுடைய வீட்டிலே சபை சபை கூடிவந்தது (பிலே. 1:2), வீட்டிலே சபை கூடிவந்தது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமுள்ளவனாகவும், அன்புள்ளவனாகவும் பிலேமான் காணப்பட்டான் (பிலே.1:4), பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் இளைப்பாறவும், ஊழியர்கள் ஆறுதலடையவும் காரணமாயிருந்தவன் (பிலே. 1:7), ஊழியர்களின் கட்டளைகளை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனதுள்ளவன் (பிலே. 1:9); என்றாலும், 'ஒரேசிமுவை' ஏற்றுக்கொள்ள இயலாதவன், ஒநேசிமுவை 'பியோஜனமில்லாதவன்' என்று நினைத்துக்கொண்டிருந்தான்.
ஆனால், ஒரேசிமு பவுலைச் சந்தித்தபோதோ, சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன் (பிலே 1:13) என்றும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரயமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும் (பிலே 1:15) என்றும் எழுதுகின்றான். அதுமாத்திரமல்ல, 'எனக்கு பிரியமான சகோதரன்' (பிலே. 1:16) என்றும், 'என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்'
(பிலே. 1:17) என்றும், 'அவன் உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்' (பிலே. 1:18) என்றும் பவுல் எழுதுகின்றாரே. பவுல் உடனான உறவு, ஒரேசிமுவை பவுலுக்கு உள்ளம்போன்றவனாகவும், பிலேமோக்கு சகோதரன் போலவும் மாற்றிற்றே. இத்தகைய மனநிலையே நம்மிலே உண்டாகட்டும். சாராயைப்போல, சத்துருக்களை உருவாக்கிவிடாதபடி கவனமாயிருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக