சனி, 9 அக்டோபர், 2021

ஆசீர்வாதத்தின் வேலி (ஆதி 39:9)

  ஆசீர்வாதத்தின் வேலி



இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். (ஆதி 39:9)


விலக்கி வைக்கப்பட்டிருக்கும் காரியங்களிலிருந்து விலகியே வாழ நாம் கற்றுக்கொள்ளவேண்டும்; இல்லையேல், விலக்கி வைக்கப்பட் டிருப்பவைகளால் விபத்து ஏற்பட்டு, ஆவிக்குரிய வாழ்க்கையிலிருந்தும், ஆண்டவருக்கும் ஆத்துமாவுக்கும் இடையிலான உறவிலிருந்தும் வீழ்ந்து, ஆபத்திற்குள்ளாக வாழ்க்கை அகப்பட்டுவிடும். எல்லைக்கு வெளியே இருப்பவைகள் உள்ளே நுழைந்துவிடாதபடியும், உள்ளே இருக்கும் நாம் எல்லையை விட்டு வெளியேறிவிடாதபடியும், வரையப்பட்டிருக்கும் எல்லைக்குள்ளேயே வாழ்க்கையை அமைத்துக்கொள்வது, விபத்திலிருந்து நம்மை  விலக்கிக் காக்கும். வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான் (நீதி 26:17) என்றும், அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். (பிர 10:8) என்றும் ஞானி சாலமோன் குறிப்பிடுகின்றாரே. 

வீட்டிலுள்ள எல்லாவற்றையும் யோசேப்பின் கைகளில் போத்திபார் ஒப்புவித்திருந்தும் (ஆதி. 39:4,8), யோசேப்பைக் காட்டிலும் பெரியவன் அந்த வீட்டிலே ஒருவரும் இல்லாதிருந்தும், 'உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கிவைக்கவில்லை' (ஆதி. 39:9) என்று தன்னுடைய அதிகாரத்தின் வட்டத்திற்கு வெளியிலேயே போத்திபாரின் மனைவி விடப்பட்டிருப்பதை யோசேப்பு அறிக்கையிடுகிறான். என்றபோதிலும், அதிகாரத்திற்கு வெளியிலிருந்த போத்திபாரின் மனைவியினாலேயே யோசேப்பின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆபத்து வந்தது. அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்த யோசேப்பை போத்திபாரின் மனைவி கண்டபோது, தன்னுயை ஆசையையும், இச்சையையும் அடக்கக்கூடாதவளாக, அவன் மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள் (ஆதி. 39:6,7). யோசேப்பின் ஆவிக்குரிய வாழ்க்கையையும், ஆண்டவருக்கும் அவனுக்கும் இடையிலான உறவையும் போத்திபாரின் மனைவி பார்க்காமல், யோசேப்பின் மாம்சத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், யோசேப்போ, தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து கவனமாயிருந்தான். நம்முடைய மாம்சம் நம்மை வீழ்த்தாவிட்டாலும், மற்றவர்களுடைய மாம்சம் நம்முடைய மாம்சத்தை வீழ்த்திவிடக்கூடும்; மாம்சத்தின் நண்பன் மாம்சம்தானே! ஒருநாள் மாத்திரமல்ல, அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. (ஆதி 39:10). ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் (கலா 5:16) என்ற பவுலின் ஆலோசனை யோசேப்பின் வாழ்க்கையில் எத்தனை உண்மையாயிற்று. 

  கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது (ஆதி 39:5); என்றபோதிலும், அந்த ஆசீர்வாதத்திற்கு வீரோதமாக, போத்திபாருடைய மனைவியின் மாம்சமே கிரியை செய்யத் தொடங்கியது. ஆசீர்வாதத்திற்குக் காரணனாகிய யோசேப்பை வீட்டை விட்டே வெளியேற்றும் போரைத் தொடங்கியது மாம்சம். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும்

இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா 5:17) என்றும், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது (ரோம 7:18-20) என்றும் பவுல் எழுதுகின்றாரே. 

கர்த்தருடைய ஆசீர்வாதம் நம்முடைய வீட்டில் இருக்குமென்றால்; அதற்கு எதிராக கிரியை செய்யத் துவங்கும் மாம்சத்தைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருப்பது அவசியம். ஆலயத்திற்குச் சென்று, ஆத்துமாவை அர்ப்பணித்தவர்களாய், ஆசீர்வாதத்தையும் சுமந்துகொண்டு வீடு வரை வந்து சேர்ந்துவிட்டால் மாத்திரம் போதாது; வீட்டில் நுழைந்ததும், தொடர்ந்து நாம் செய்யும் கிரியைகளே அந்த ஆசீர்வாதத்தை நம்முடைய வாழ்க்கையில் தக்கவைக்க தகுதியுள்ளவர்களாக நம்மை மாற்றும்  

இயேசு கிறிஸ்து தனது சீடர்களை நோக்கி, ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.  அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது (மத் 10:12,13) என்ற வார்த்தை நம்முடைய வீட்டில் நடந்துவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம். ஆசீர்வாதத்தின் வேலியை உடைத்து, ஆபத்தின் குழிக்குள் நாம் விழுந்துவிடக்கூடாது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக