செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஆசீர்வாதமா? ஆகாராமா? (ஆதி 27:3,4)

 ஆசீர்வாதமா? ஆகாராமா?



ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத் தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான். (ஆதி 27:3,4)


கண்கள் இருளடைந்து பார்வையற்ற நிலையில் காணப்பட்ட ஈசாக்கு, ஏசாவை ஆசீர்வதிக்கவேண்டுமென்று விரும்பினபோது, உடனே அழைத்து அவனை ஆசீர்வதித்திருந்திருக்கலாம்; என்றபோதிலும், ஈசாக்கோ அப்படிச் செய்துவிடவில்லை; ஆசீர்வதிப்பதற்கு முன் தனக்குப் பிரியமான ஆகாரத்தை முன்நிறுத்தினதால் அவனது விருப்பத்தின்படி மூத்த குமாரனாகிய ஏசாவை அவனால் ஆசீர்வதிக்க இயலாமற்போயிற்று. இன்றைய நாட்களிலும், ஜனங்களை ஆசீர்வதிக்கவேண்டும் என்று விருப்பத்துடன் வரும் ஊழியர்கள் சிலர், முதலாவது ஜனங்களிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதால்; ஆசீர்வதிக்கப்படவேண்டிய ஜனங்களில் பலர் ஆசீர்வாதத்திற்குப் புறம்பாகிவிடுகின்றனர். ஆசீர்வதிக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தபோதிலும், இந்த திட்டத்தில் சேருங்கள் என்றும், பணம் செலுத்தி அங்கத்தினராகுங்கள் என்றும் விளம்பரப்படுத்துவதினால்; இயலாதவர்களோ ஆசீர்வாதத்தின் எல்லைக்குள் புறப்பட்டுவர தாமதமாகிவிடுகின்றது. 

ஆட்டுமந்தைக்குப் போய் இரண்டு வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டுவருவது எளிது; ஆனால், வனத்துக்குப் போய் வேட்டையாடி கொண்டுவருவதோ கடினமானது. கடினமான வேலையைச் செய்யும்படியாக ஏசா புறப்பட்டுச் சென்றபோது, கைவசமிருந்த வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டுவந்துவிட்டான் யாக்கோபு. ஆகாரத்திற்குக் காத்திருந்தவன் ஆகாரத்தினாலேயே விழுந்துவிட்டான். 

'என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்க' என்று ஆத்துமாவுக்கடுத்த ஆசீர்வாத்தைக் கூறும் ஈசாக்கு, சரீரத்திற்குரிய ஆகாரத்தையல்லவா 'என்னிடத்தில் கொண்டுவா' என்கிறான். ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் (எபி 12:16) என்று ஏசாவைக் குறித்து வாசிக்கின்றோமே. அதுபோலவே, எனக்காக வேட்டையாடி, எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா (ஆதி. 27:3,4) என்று, ஒருவேளை போஜனத்திற்காக ஏசாவின் மேல் கூறவேண்டிய ஆசீர்வாதத்தை விட்டுவிட்டானே ஈசாக்கு. 

சரீரத்திற்காக பொருட்களை முன்நிறுத்திக்கொண்டு, ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டவனை (லூக். 12:19) நோக்கி, மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் (லூக். 12:20) என்று கேட்டாரே தேவன். சரீரத்திற்காக பொருட்களையும், ஆகாரத்தையும் சவதரித்து வைத்துக்கொண்டு, அதனை ஆத்துமாவோடு இணைத்துப் பேசிக்கொண்டிருப்பவர்களின் காதுகளில் இத்தகைய தேவனுடைய சத்தமே கேட்கும். எனவே, தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றும் (லூக். 12:21), பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை (மத் 6:20) என்றும் போதித்தாரே இயேசு கிறிஸ்து. 

சரீரத்திற்குரிய காரியங்களை மாத்திரம் கொடுத்து ஆத்துமாவுக்குரிய ஆசீர்வாதங்களை நாம் வாங்கிக்கொள்ள முடியாது. அப்படியே, சரீரத்திற்குரிய காரியங்களை முன்நிறுத்தி, ஜனங்களிடமிருந்து அவைகளைப் பெற்றுக்கொண்டு, ஆத்துமாவை ஆசீர்வதித்துவிட முடியாது. லாசருவைப் போல தேவனிடத்தில் ஐசுவரியவானாயிருப்போம் (லூக். 16:22).


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக