ஞாயிறு, 10 அக்டோபர், 2021

விடுதலையின் அப்பம் (ஆதி 19:3)

 விடுதலையின் அப்பம்


அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.(ஆதி 19:3) 


'சோதோமை அழிக்கும்படியாகவே இரண்டு தூதர்கள் வந்திருக்கிறார்கள் என்பதையும், பசுமையாக இதுவரை தான் பார்த்துக்கொண்டிருக்கும் அச்சமவெளி இன்னும் சில மணித்துளிகளுக்குள் வானத்திலிருந்து விழும் கந்தகத்தினால் பட்சிக்கப்பட்டு சாம்பலாகப்போகிறது' என்பதையும் லோத்து அறிந்திராதபோதிலும், 'தான் நீதிமான்' என்பதை அவர்களிடத்தில் நிரூபிக்காமலும், 'அவர்கள் யார்?' என்பதையும், 'தேவதூதர்கள்' என்பதையும் அறிந்துகொள்ளாமலும், எதற்காக வந்திருக்கிறார்கள்? எங்கே போகிறார்கள்? என்ற காரணத்தை அறியாமலும், இவர்களை உபசரித்தால் எனக்கு என்ன கிடைக்கும்? என்று எதிர்பாராமலும் வழிப்போக்கர்களை வீட்டுக்குள் அழைத்து விருந்து கொடுத்தான் லோத்து. அந்த விருந்து, விடுதலைக்கு அடையாளமாயிருந்தது. 

லோத்துவின் வீட்டைத் தேடி தூதர்கள் வரவில்லை, 'வீதியிலே இராத்தங்குவோம்' (ஆதி. 19:2) என்றே அவர்கள் சொல்கிறார்கள்; என்றபோதிலும், காப்பாற்றப்படவேண்டிய லோத்துவையே தூதர்கள் முதலில் சந்திப்பது அற்புதமானது; எலியா சாறிபாத் விதவையைச் சந்தித்ததும் இப்படித்தானே. மேலும், 'இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர்' எங்கே? என்று சோதோமின் மனிதர் கேட்ட கேள்வி, 'லோத்து அந்த இருவரையும் அறிந்திருக்கக்கூடுமோ?' என்ற சந்தேகத்துடனானது. இப்படிப்பட்ட அக்கிரமம் நிறைந்த பட்டணம் என்றபோதிலும், 'வீதியில் இராத்தங்க தூதர்களுக்குப் பயமில்லை.'

தூதர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள முடியும்; மனிதர்களைக் காப்பதற்காகவே தூதர்கள் அனுப்பப்படுகின்றார்கள் (யாத். 23:20); தூதர்களை மனிதன் காக்கவேண்டிய அவசியமில்லை. ஒருவேளை, 'சோதோமை நாங்கள் அழிக்கப்போகிறோம், உன்னைக் காப்பாற்றத்தான் வந்திருக்கிறோம்' என்று முதலிலேயே லோத்துவினிடத்தில் அவர்கள் சொல்லியிருந்திருப்பார்களென்றால், லோத்துவின் உபசரிப்பு தடபுடலாக இருந்திருக்கக்கூடும்  என்று  நாம் நினைக்கலாம்; எனினும், தன்னைக் காப்பாற்றத்தான் வந்திருக்கிறார்கள் என்று அறியாத நிலையிலும், அந்நியர்களைக் காப்பாற்றின லோத்துவின் குணம் நீதிமானின் ஓர் அடையாளமே. 

தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்ற வாலிபர்களின் பாதுகாப்பு முன்கூட்டியே சொல்லப்பட்டிருக்குமென்றால், ஒருவேளை துணிச்சலுடன் இராஜாவுக்கு முன்பாக அவர்கள் நின்றிருப்பார்களே என்று நான் நினைக்கக்கூடும்; எனினும், சொல்லப்படாத நிலையிலும், கொல்லப்படும்படியான சூழ்நிலை உண்டானபோதிலும், நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது (தானி 3:17,18) என்ற அவர்களது உறுதி நீதியில் வழியிலேயே நிற்பவர்களுக்கான ஓர் அடையாளமே. 

புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு விருந்துபண்ணினது, லோத்துவின் விடுதலைக்கு அது அடையாளமானது. இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து விடுவிப்பதற்கு முன்,  'புளிப்பில்லா அப்பத்தோடும'; கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள். அதைப் புசிக்கவேண்டடிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா (யாத் 12:8,11) என்று பஸ்காவை புறப்படுவதற்கு ஆயத்தமான ஆகாரமாக்கினாரே.  புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள் (யாத் 12:17) என்றும் சொன்னாரே. இன்றும், கல்வாரிச் சிலுவையிலே பிட்கப்பட்ட அப்பத்தை அந்நியருக்கும் பகிர்ந்தளித்தால், அழிவிலிருந்து அவர்களை நாம் காப்பாற்றிக்கொள்ளலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக