அவருடைய வழி, அவரே வழி
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.(ஆதி 18:19)
கர்த்தர் நம்முடைய வழியில் நம்முடன் வந்துகொண்டிருக்கின்றாரா? அல்லது நாம் கர்த்தருடைய வழியில் அவருடன் சென்றுகொண்டிருக்கின்றோமா? என்ற அறிவு, நமது அகத்தின் முகத்தை இன்னும் ஆண்டவருக்கு முன்னாகச் சீர்ப்படுத்தும் சிந்தையை வளர்க்கக்கூடியது. பாவமான வாழ்க்கை வாழுவோமென்றால், நம்முடைய வழிகளில் அவர் வருவது கூடாதது; ஆனால், அதற்கு இணையாக தன்னுடைய வழியில் அவர் வந்துகொண்டேயிருப்பார்; பாவவழியினை விட்டு, நாம் அவருடைய வழியில் தாவிவிடுவோமென்றால், நம்முடைய வழியில் அவர் நம்முடன் வந்துகொண்டிருப்பார். இதன் தொடர்ச்சி, கர்த்தருடைய வழியிலேயே நமது வாழ்க்கை பயணமாகும். எம்மாவுக்குப் போன சீஷர்களோடு வழியிலே சென்றபோது, அவர்களது விழிகள் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. 'பிட்கப்பட்ட பின்னும் (ஏசா. 53:5), பிட்டுக்காட்டவேண்டியதிருந்தது (லூக். 24:30)' இப்படியே, இணையாக வரும் அவரை இன்னும் காணாதவர்களாக தன்னுடைய வழியிலேயே வாழ்நாளை வழியறியாமல் கடத்துகின்றனர் பலர்.
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவா 14:6) என்கிறார் இயேசு கிறிஸ்து. எனினும், அந்த வழியில் நாம் பயணிக்கும் முன்னதாக அந்த வழியே பயணித்து நம்மைத் தேடிவந்தது என்பது நாம் முன்னறிந்துகொள்ளவேண்டியது. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் (யோவா 15:16) என்று இயேசு கூறுவதன் அர்த்தம்; 'வழியாக அவர் நம்மைத் தேடி வந்ததே.' பரலோகத்திற்கு நேராகப் பயணிக்கவேண்டிய நாம், பயணத்தை மறந்தவர்களாகவோ அல்லது மரணத்திற்கு நேராகவோ பயணித்துக்கொண்டிருந்தபோது, சரியான சாலை நமது வீட்டு வாசலிலேயே போடப்படுகிறது (வெளி. 3:20), நாம் சாலைக்குப் போகவில்லை; ஆனால், சாலை வீட்டிற்கு வந்துவிட்டது; நம்முடைய பரலோக பயணத்தில் எத்தனை கரிசனை ஆண்டவருக்கு. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார் (ஏசா 53:6). கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும் (சங் 1:6) என்று தாவீதும், நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும் (நீதி 12:26) என்று சாலெமோனும் அறிவிக்கின்றனரே. 'அறிவிக்கும் பணியே அழிவினைத் தடுக்கும்.'
'தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான்' என ஆபிரகாமைக் குறித்து தனக்கு இருந்த நம்பிக்கையை ஆண்டவர் இங்கு வெளிப்படுத்துகின்றாரே. நம்மைக் குறித்து இப்படியோர் நம்பிக்கை கர்த்தருக்கு உண்டா? கர்த்தருடைய வழியைக் காத்து நடக்க பிள்ளைகளுக்கும், பின்வரும் சந்ததிக்கும் போதிக்கும் பொறுப்பு நம்முடைய தோளின்மேலேயே இருக்கிறது. பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் (சங் 127:3) என்று மட்டுமல்ல, உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள் என்ற வசனமும் அவர்களது வாழ்க்கையில் நிறைவேறினால் மாத்திரமே, 'உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்' (ஏசா 54:13) என்ற ஆசீர்வாதம் அவர்களைப் பின்தொடரும்.
நாம் அவருடைய பிள்ளைகளானால், நாம் நடந்துகொண்டிருப்பது நம்முடைய வழியில் அல்ல அவரது வழியில், நம்முடைய சாலையில் அல்ல அவரது வேலையில், நமது பணிக்காக அல்ல அவருடைய கனிகளைப் பறிப்பதற்காக. இந்த அறிவு நம்மிலே உயர்ந்து வளருமென்றால்; நம்முடைய வழிகள் நமது விழிகளிலிருந்து விடுபட்டுப்போம். 'வழி இதுவே, இதிலே நடவுங்கள்' (ஏசா. 30:21) என்ற கட்டளையினையே கண்கள் காணும் திசையெங்கும் ஓசையாக எழுப்பிக்கொண்டிருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக