சனி, 9 அக்டோபர், 2021

மாம்சம் மாதிரியல்ல (ஆதி 36:31)

 

 மாம்சம் மாதிரியல்ல



இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களானவர்: (ஆதி 36:31)


ஆவிக்குரியவர்களாகவே வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம், மாம்சத்தின் மாதிரியைப் பின்பற்றிவிடாதபடி எச்சரிக்கையுடனிருக்கவேண்டும். மண்ணிலே சத்துரு நமக்கு முன்னே  நிறுத்தும் மாதிரிகளை கண்ணிலே கண்டு, கண்ணிகளிலே நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. பார்வைக்குச் சிறந்தவைகளாகத் தோன்றும் அத்தகைய மாதிரிகள், சத்துருவின் போர்வைக்குள் நம்மை மூடிவிடும்; நடக்கவேண்டிய வழியினையும் காணக்கூடாதபடி விழிகளை இருளுக்குள் தள்ளிவிடும். எனினும், மாம்சீக சரீரம் ஆவிக்குரிய சரீரத்தை மல்லுக்கட்ட எத்தனிப்பதையும்; ஆவிக்குரிய சரீரத்தை தனது ஆளுகைக்குள் அது அடக்க நினைப்பதையும் நாம் அறிந்துகொண்டால்; ஆவிக்குரிய ஆபத்துக்களுக்கும், விபத்துக்களுக்கும் நமது வாழ்க்கையைத் தப்புவித்துக்கொள்ளலாம். ஆவிக்குரியவைகளைத் தள்ளிவிட்டு, மாம்சத்தில் நமது வாழ்க்கையை மாய்த்துக்கொள்ளக்கூடாது. 

ஏசா மற்றும் யாக்கோபின் வாழ்க்கைச் சரித்திரங்கள், இந்த சத்தியத்தை நமக்குப் போதிக்கப் போதுமானவைகள். அழைக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட யாக்கோபின் வம்சத்தில் இஸ்ரவேல் என்னும் சந்ததி ஒருபுறம் உருவாகிக்கொண்டிருக்க, மறுபுறமோ மாம்சத்தினையே அடித்தளமாகக் கொண்ட ஏசாவின் சந்ததியும் வளர்ந்துகொண்டிருந்தது. மாம்சத்திற்குரியவன் முந்தி பிறந்திருந்தாலும்; ஆசீர்வாதமோ ஆவிக்குரியவனுக்கே உரியது என்பதும், மாம்சத்துக்குரியவன் முந்தி பிறந்திருந்தாலும், ஆவிக்குரியவனையே அவன் சேவிக்கவேண்டும் என்பதும் ஏசா, யாக்கோபின் வாழ்க்கையில் நிரூபணமாகிவிட்ட ஒன்று. எனினும், ஆவிக்குரியவன் பெற்றுவிட்ட ஆசீர்வாதங்களை அபகரிக்க, மாம்சத்திற்குட்டவன் தொடுக்கும் அம்புகளிலிருந்தும், வகுக்கும் திட்டங்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டுமென்றால், வழியெங்கிலும் கர்த்தரையே சார்ந்திருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்.  

ஏதேனிலே ஏவாள் ஏமாற்றப்பட்டபோது, தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து, உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார் (ஆதி 3:15). மாம்சத்திற்கும் ஆவிக்கும் அன்றுமுதல் உண்டாகிவிட்ட பகையை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காட்டிக்கொடுத்ததுடன்,  பகைக்கு மத்தியில் பாதுகாப்பாகவும், பரிசுத்தமாகவும் வாழவேண்டியதையும் சுட்டிக்காட்டினார். ரெபெக்காள் கர்ப்பமாயிருந்தபோது, கர்ப்பத்திலேயே ஏசாவும் யாக்கோபும் மோதிக்கொண்டிருந்தார்கள் (ஆதி. 25:22). அவர்களது மோதலுக்கான தீர்ப்பை, அவர்கள் பிறப்பதற்கு முன்னமே தேவன் அறிவித்திருந்தார். இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்; அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார் (ஆதி 25:23). கர்ப்பத்தில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டாலும், குதிங்காலைப் பிடித்துக்கொண்டு (ஆதி. 25:26) பிறப்பிலேயே மேற்கொள்ள யாக்கோபு முயற்சித்ததாலும், அவனது தலை நசுங்கிவிடாதபடி தற்காத்தவர் கர்த்தரே. 

ஏதேனிலே தொடங்கிய மாம்சத்துக்கும் ஆவிக்குமான இந்தப் போர், பல வீடுகளிலும் இன்றும் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கின்றது. சிலுவையில் தலை நசுக்கப்பட்டுவிட்டபோதிலும், அநேகருடைய வீடுகளில் சத்துருவின் வால் இன்னும் ஆடிக்கொண்டிருக்கின்றது.  மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா 5:17). ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது (1கொரி 15:46) என்று பவுல் எழுதுவதைப் போல, பல 'ஜென்ம சரீரங்களை' இன்றும் மாதிரிகளாக வைத்திருக்கிறான் சத்துரு. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாமலும் (எரே 10:2); சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் (1சாமு 8:5) என்று சொல்லாமலும், ஆவிக்குரியவர்களாகவே வாழ அர்ப்பணிப்போம்.  

மரியாள் இயேசுவை கைகளில் ஏந்துவதற்கு முன்னமே, அதன் மாதிரியான தாய் - சேய் வணக்கத்தை சிலை வடிவில் பாபிலோனில் அறிமுகப்படுத்தி, இன்றும் அநேக மக்களை அதன் வழிமுறைகளில் அடிமைகளாகச் சிறைப்படுத்தி வைத்திருப்பவன் சத்துரு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக