ஞாயிறு, 10 அக்டோபர், 2021

அழைக்கப்பட்டவனும்; அழைத்தவரும் (ஆதி 18:1)

 அழைக்கப்பட்டவனும்; அழைத்தவரும்


பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, (ஆதி 18:1)

நோவாவின் குமாரனான காமின் மகன் பெற்ற கானானின் வழியில் வந்த சந்ததியாகிய எமோரியர்களுள் ஒருவன் 'மம்ரே.' மம்ரே குடியிருந்த சமபூமி, 'மம்ரேயின் சமபூமி' என்று அவனது பெயரினாலேயெ  அழைக்கப்பட்டது. ஆபிராம் மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலேயே குடியிருந்தான் (ஆதி. 14:13). 

எமோரியர்கள் கர்;தருக்குப் பிரியமில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தவர்கள்; 'எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை' (ஆதி 15:16) என்பதே அவர்களைக் குறித்து ஆபிராமுக்கு கர்த்தர் செய்த அறிமுகம்; அதுவே, எமோரியர்கள் யார்? என்பதை அடையாளங்காட்டிக்கொடுக்கப் போதுமானது. எமோரியர்களுக்கும் யெகோவாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை; தெய்வமாக அவரை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும்,  வணங்கவும் இல்லை; அந்நிய தெய்வங்களையே அவர்கள் வணங்கிக்கொண்டிருந்தவர்கள். ஆபிராம் மம்ரேயின் சமபூமியில் குடியிருந்தபோது, எமோரியரின் அநேக அக்கிரமங்களைக் கண்கூடாக அவன் கண்டிருக்கக்கூடும்; அப்படிப்பட்ட அக்கிரமம் நிறைந்த எமோரியர்களின் மத்தியில், யெகோவாவுக்காகப் பரிசுத்தமாக வாழுவது அபிராமுக்கு ஓர் சவாலானதாகவே இருந்திருக்கும். ஆபிராமின் தெய்வம் யெகோவா என்பது எமோரியரின் அறிவுக்கு எட்டியிருக்கும். தங்களது தெய்வங்களை ஆபிராம் வணங்காததை நிச்சயம் எமோரியர்கள் கண்டிருக்கக்கூடும்; என்றாலும், ஆபிராம், அவர்களால் இழுக்கப்பட்டுப்போய்விடவில்லை. அக்கிரமத்தின் நிமித்தம் ஒருவேளை ஆண்டவர் மம்ரேயின் சமபூமிக்குப் போக விரும்பாவிட்டாலும், அழைக்கப்பட்டவன் நிமித்தமாக அங்கே போகவேண்டிய விருப்பம் ஆண்டவருக்கு உண்டானது. நாம் வாழும் சூழ்நிலைகள் ஆண்டவரை வருத்தமடையச் செய்பவைகளாக ஒருவேளை காணப்படக்கூடும்; அனால், அவர் வாழும் மனிதர்கள் எங்கே இருந்தாலும், அங்கே அவர் வருவதற்கு எவ்வித தடையும் இல்லை. அழைக்கப்பட்டவனையே அழைத்தவர் தொடருகின்றார் என்பதற்கு ஆபிராமின் வாழ்க்கை ஓர் ஆதாரம். 

எகிப்து, யெகோவாவுக்கு விரோதமானதோர் தேசம்; யெகோவாவை தெய்வமாகக் கொண்டிராத தேசம்; என்றாலும், யோசேப்பு எகிப்துக்குச் சென்றபோது, யோசேப்போடு கூட கர்த்தரும் அங்கே சென்றார்; எகிப்து ஆண்டவருக்கு இடமளிக்காவிட்டாலும், யோசேப்பின் இருதயம் அவருக்கு இருக்க இடமளித்திருந்ததே அதன் ரகசியம். அப்படியே, அழைக்கப்பட்ட மோசே எகிப்துக்குச் சென்றபோது, அவனோடு கூட நின்று செயலாற்றினார் ஆண்டவர்.

அப்போஸ்தலர்களின் நாட்களில், பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட  இருந்த சதுசேயசமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்; என்றாலும், கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத்திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்தான் (அப் 5:17-19). இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் சிறைச்சாலையில் ஒருவரும் இருந்திருக்க வாய்ப்பில்லை; என்றபோதிலும், அப்போஸ்தலர்கள் சிறைக்குச் சென்றபோது, தூதனும் சிறைக்குள்ளே நுழைவதற்கு எவ்வித சிரமமும் இல்லையே. 

அதைப்போலவே, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினிச் சூளையில் வீசப்பட்டபோது,  ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான் (தானி 3:24,25). அழைக்கப்பட்டவர்களை உலகம் எங்கே வீசினாலும், அவர்களைத் தேடியே அவரும் செல்கிறார்; அக்கினியும் அவரைத் தடுத்து நிறுத்த முடியாது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக