www.sinegithan.in
குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள, மாம்சத்தில் மாத்திரமே மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் மாம்சத்திலேயே மனமடிவுடன் நிறைவுபெற்றுவிடக்கூடும். அதுமாத்திரமல்ல, விரிசல்களை மேலும் குடும்பத்திலே உண்டாக்கிவிடவும், விரிவுபடுத்திவிடவும் கூடும்.
அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டான்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.(ஆதி 38:1-6)
சகோதரரை விட்டுப் பிரிந்துசென்றது, யூதாவின் முதற் குற்றம்; என்றபோதிலும், தன்னிடத்திலிருக்கும் தவற்றை யூதா ஒருபோதும் உணர்ந்துகொள்ளவே இல்லை. அதுமாத்திரமல்ல, தனது குமாரர்களிடத்தில் காணப்பட்ட தவறுகளையும், கர்த்தருக்குப் பிரியமில்லாத பொல்லாத வழிகளையும்கூட அவன் அறிந்து அவர்களைத் திருத்தவில்லை. யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார் (ஆதி 38:7) என்றே மூத்த மகனுக்கு ஏற்பட்ட நிலையினை வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். அவ்வாறே, 'அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்று சொன்னபோது, அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராததென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். (ஆதி 38:8-10)
தன்னுடைய குடும்பத்தில் தொடர்ச்சியாக இரண்டு மகன்களது மரணங்கள் நிகழ்ந்துவிட்டபோது, தன்னிடத்திலிருக்கும் தவற்றையும், தன் குமாரர்களிடத்திலிருக்கும் குற்றத்தையும் யூதா உணர்ந்துகொள்ளவேயில்லை. கணவனற்ற நிலையில் விதவையாக விடப்பட்டிருக்கும் மருமகளாகிய தாமாரோடு கூட தேவசமுகத்தைத் தேடாமல்; தன்னுடைய முகத்திற்கு முன் இருக்கும் தாமாரை மாத்திரம் தூரமாகத் துரத்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தான் யூதா. குடும்பத்தில் உண்டாயிருக்கும் வேதனைக்கும், வருத்தத்திற்கும், துன்பத்திற்கும் விடிவுகாணும்படியாக, மாம்சத்தில் யூதா எடுத்த முடிவு அவனை மாம்சத்திலேயே வீழ்த்தியது. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை (ரோம 8:1) என்று பவுல் எழுதுகின்றாரே. மேலும், அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள் (ரோம 8:5) என்ற பவுலின் வார்த்தைகளும் யூதாவின் வாழ்க்கையில் வெளிப்படுவதை நம்மால் காணமுடிகிறதே. 'மாம்சத்தின்படி முடிவெடுத்த யூதா' மாம்சத்துக்குரியவைகளையே சிந்திக்கிறவன் என்பதை 'மாம்சத்தில் விழுந்ததிலிருந்து' நம்மால் புரிந்துகொள்ள முடியுமே.
என்றபோதிலும், யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை (ஆதி 38:26) என்று எழுதப்பட்டிருக்கும் வசனம், யூதாவை மனந்திரும்பினவனாகவும், தாமாரை நீதியுள்ளவளாகவும் சுட்டிக்காட்டுகின்றதே; இரட்சகரின் வரலாற்றில் இவர்களது பெயரும் இடம்பெற்றுவிட்டதே (மத். 1:3). நம்முடைய குடும்பத்தின் வரலாற்றில், பிறரது மறுபிறப்பு இடம்பெறட்டும். மாம்சீக விழுகைக்கு நேராக மாம்சமே நம்மை வழிநடத்திவிடாதபடி கவனமாயிருப்போம்.
அவ்வாறே, எல்க்கானாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை; கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள் (1சாமு 1:2,6,7) என்றபோதிலும், மனதில் வேதனையோடிருந்த அன்னாள் மாம்சத்தில் எவ்வித முடிவையும் எடுத்துவிடவில்லை; தேவசமுகத்தையே தேடிச் சென்றாள்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்று இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளும், அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேது 5:7) என்ற வசனத்தின் நிறைவேறுதலும் அன்னாளின் வாழ்க்கையில் எத்தனை அழகாய் நிறைவேறுகிறது.மேலும், நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை (யாக் 1:17) என்ற வசனமும் பூரணமாக அன்னாளின் வாழ்க்கையில் நிறைவேற்றப்படுகின்றதே.
ஆனால், ஆபிரகாமின் மனைவியாகிய சாராயின் நிலையோ தலைகீழ். தனக்கு பிள்ளை இல்லாத நிலை உண்டானபோது, அதன் வேதனையைத் தாங்கிக்கொள்ள இயலாத சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாளே (ஆதி 16:2). மனைவியாயிருந்தபோதிலும், கணவனை மற்றொருத்திக்குக் கைப்பிடித்துக்கொடுத்துவிட்டாளே சாராய்; எப்படியாய் தனது வேதனையைத் தீர்த்துக்கொள்ள சாராய் நினைத்தாலும், அவளுக்கு மிஞ்சியது கண்ணீர்தானே. வேதனையைத் தாங்கிக்கொண்ட அன்னாள் குடும்பத்தில் விரிசல் உண்டாக இடமளிக்கவில்லை; ஆனால், வேதனையைத் தாங்கிக்கொள்ள இயலாத சாராய் குடும்பத்தில் விரிசலை உண்டாக்கிவிட்டாளே. ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலா 3:3) என்று கலாத்தியரைப் பார்த்து பவுல் கேட்டதுபோல, நம்முடைய வாழ்க்கையையும் பார்த்து பரலோகம் கேட்டுவிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக