ஞாயிறு, 10 அக்டோபர், 2021

சோதோமின் வாசல் (ஆதி 19:1)

சோதோமின் வாசல்


அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: (ஆதி 19:1)


'என்னை மட்டும் காத்துக்கொண்டால் போதும்' என்ற சுருங்கிய வட்டத்திற்குள்ளேயே நாம் வாழ்ந்துகொண்டிருந்தால்,' தேவனுடைய திட்டத்தின் எல்லைகளைச் சுதந்தரிப்பதை மறந்தவர்களாகவே நாம் மாறிவிடுவோம். அத்துடன், 'இவ்வுலகத்திலே நான் படும் பாடுகளை மற்றவர்களும் எதிர்கொள்ளவேண்டும்' என்ற தவறான மனப்பான்மையும், தன்னைக் காத்துக்கொண்டு, மற்றவர்களைக் காக்கக்கூடாதபடிக்கு நமது கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு, பிறரை நமக்குக் காட்சிப்பொருளாக்கிவிடும்.  

லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கோமோராவையும் அழிக்குமுன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது (ஆதி 13:10) என்ற வசனம்; 'சமபூமியின் செழிப்பை' மாத்திரம் சுட்டிக்காட்டுவதாக இருந்தாலும், உள்ளே நுழைந்தபின்போ 'கண்களுக்குத்தான் அது கர்த்தருடைய தோட்டம்' 'குடியிருப்புக்கோ அது எகிப்து தேசம்' என்ற உண்மை நிலையை லோத்துவுக்கு உணர்த்தியிருக்கும். எனவேதான் பேதுரு, 'நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்து' (2பேதுரு 2:8) என்று அவனது நிலையைத் தனது நிருபத்தில் சுட்டிக்காட்டுகின்றார்.  

எனினும், நான் தெரியாமல் இந்த பட்டணத்திற்குள் வந்துவிட்டேன், வேறு யாரும் இந்தப் பட்டணத்திற்குள் வந்துவிடக்கூடாது என்ற மனதுடனேயே தனது வாழ்நாளைக் கடத்திக்கொண்டிருந்திருப்பான் லோத்து. இந்த அனுபவம், 'தன்னை நீதிமானாகக் காத்துக்கொள்ளவேண்டும்' என்ற உறுதியை அவளது உள்ளத்தில் உண்டாக்கியிருந்திருந்தாலும், உள்ளே வேறுயாரும் நுழைந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தையும் ஆத்துமாவில் அதிகரித்திருக்கும். 

ஆபிரகாம் தன்னுடைய கூடார வாசலிலே உட்கார்ந்திருந்தான் (ஆதி. 18:1); ஆனால் லோத்துவோ, 'சோதோமின் வாசலிலே' உட்கார்ந்திருந்தான் (ஆதி. 19:1). பகலின் உஷ்ணம் ஆபிரகாமை கூடார வாசல்வரை கூட்டிவந்தது; ஆனால், சோதோமின் அக்கிரமம், லோத்துவை சோதோமின் வாசல்வரை வரவைத்தது. ஒருவேளை சரீரப்பிரகாரமாக சோதோமில் லோத்து வாழ்ந்துகொண்டிருந்தாலும், நீதிமானாகிய அவனுடைய 'இருதயமோ' சோதோமுக்கு வெளியிலேயே இருந்திருக்கக்கூடும். தவறான இடத்தை தெரிந்துகொண்டுவிட்டேன்; இனி என்னைத் தற்காத்துக்கொள்வதுதான் முதற்பணி என்று எண்ணாமல், 'சோதோமுக்குள் நுழையும் பிறரைக் குறித்தும்' லோத்து கவனமாயிருந்ததாலேயே வாசலிலிருந்தான்.  

பாதாளத்திலிருந்த ஐசுவரியவான், 'அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் (லூக் 16:27,28) என்று கெஞ்சியபோது, 'மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும்' என்றே பதில் கிடைத்தது (லூக் 16:29). அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றபோதிலும், 'அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்' (லூக் 16:30,31) என்றே மாறுத்தரமாகச் சொல்லப்பட்டது. மரணத்திற்குப் பின் சாத்தியமில்லாதை, இப்போதே சாத்தியப்படுத்திக்கொள்ளுவோம்.

வழிப்போக்கர்களாக வருவோரை இவ்வுலகத்தின் வழிகளுக்குள் பிரவேசித்துவிடாதபடி, வாசலிலேயே தடுக்கும் பொறுப்பு நம்முடையதே. நம்முடைய வீட்டு வாசலுக்குள் அவர்களை பிரவேசிக்கச் செய்யவேண்டுமென்றால், நாம் நமது வீட்டு வாசலில் மாத்திரமே உட்கார்ந்துகொண்டிருந்தால் அது சாத்தியமாகாதே; 'பாவம் நிறைந்த பட்டணத்தின் வாசலில் நின்று' அடியேனுடைய வீட்டு முகமாய்த் திரும்புங்கள் என்று 'கூவும்' சுவிசேஷகனாக நாம் மாறவேண்டுமே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக