முன்னுரிமை
அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். (ஆதி 39:12)
வேதனைகளைச் சந்திக்க நேரிடும்போது, அதற்கான வேரினை அறிய முற்படாமல், விடுதலையை மாத்திரமே விழிகளால் தேடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். அழிவின் பாதையில் பயணிக்கும் ஆத்துமாவைக் குறித்து கவலைப்டாமல், சாவை நோக்கியிருக்கும் சரீரத்திற்கே பலர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், இயேசு கிறிஸ்துவின் பார்வையோ ஆத்துமாவை மூடியிருக்கும் போர்வையான சரீரத்தை ஊடுருவி, செத்த நிலையிலிருக்கும் உள்ளான மனிதனுக்கே முதலில் உயிர்கொடுக்க விரும்புகின்றது. 'பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்' (3 யோவா 1:2) என்பதுதானே யோவானது வார்த்தைகளின் வரிசை.
திமிர்வாத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை, நான்கு பேர் சுமந்துகொண்டுவந்து, இயேசு கிறிஸ்து போதித்துக்கொண்டிருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, படுக்கையோடு உள்ளே இறக்கினபோது, இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் (மாற். 2:5).
திமிர்வாதத்தினால் அவன் படும் வேதனையைக் கண்டதினாலேயே, சுகமாகும்படியாக அவர்கள் அவனை இயேசு கிறிஸ்துவினிடத்திற்கு சுமந்துகொண்டு வந்தார்கள். எனினும், அந்த மனிதனுடைய வாழ்க்கையில் காணப்பட்ட பாவங்களையோ அவர்கள் காணவில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவின் கண்களோ, சுமந்துகொண்டு வந்தவர்களின் உள்ளத்தில் காணப்பட்ட விசுவாசத்தையும், திமிர்வாதமாகக் கிடந்த மனிதனிடத்தில் காணப்பட்ட பாவத்தையும் பார்த்தன. வெளிப்புறத்தில் எத்தனையாய் அலங்கரித்து நின்றாலும், ஆண்டவரின் கண்கள் ஆத்துமாவையே பார்க்கின்றன. ஈசாயின் வீட்டில் சாமுவேல் நுழைந்து, எலியாபைப் பார்த்தவுடனே, கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்று சொன்னபோது, கர்த்தரோ, நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1சாமு 16:7) என்று சொன்னாரே.
சரீர சுகத்திற்கு அல்ல, ஆத்தும இரட்சிப்பிற்கே முதலிடம். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபே 2:8)
என்றே எழுதுகின்றார் பவுல். நம்முடைய வாழ்க்கையிலும் விசுவாசத்தினால் கிடைக்கவேண்டிய முதற்; பலன் 'இரட்சிப்பே'. ஆத்தும இரட்சிப்பை அசட்டைபண்ணினவர்களாக, சரீர சுகத்திற்காக மாத்திரமே விசுவாசிப்பது வியர்த்தமானது. வெளிப்புறத்தில் மனிதர்கள் நம்மை வியாதியஸ்தர்களாகப் பார்க்கலாம், வியாதியினிமித்தம் நம்மேல் கருணைகொண்ட வார்த்தைகளையும் பேசலாம், நாம் சுகமாகும்படி சுகமளிக்கும் கூட்டங்களுக்கும் கூட்டிச் செல்லலாம்; என்றாலும், ஆண்டவர் பார்ப்பது நமது ஆத்துமாவையே.
கானானிய ஸ்திரீயின் மகள் குணமடையவில்லையா? என்ற கேள்வி உள்ளத்தில் உண்டாகக்கூடும். என்றபோதிலும், இயேசு கிறிஸ்துவுக்கும் கானானிய ஸ்திரீக்கும் இடையிலான உரையாடலில் பொதிந்திருக்கும் உண்மையை அறிந்துகொண்டால் நமக்கு உணர்வு உண்டாகிவிடும். அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டபோது, இயேசு கிறிஸ்து அவளை நோக்கி, காணாமற்;போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்று சொன்னதோடு, பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றும் கூறினார். என்றபோதிலும், மகளது சுகத்தையே மனதில் சுமந்தவளாக, மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்று அவள் சொன்னபோது, ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள் (மத் 15:22-28).
இந்த நிகழ்ச்சியில், 'சுகத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி' 'பிள்ளைகளுக்கான சுதந்திரத்தையோ' அவள் மறந்துபோனதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவர் மனம் இரங்கிச் செய்வதினால் நாம் 'மகனாகிவிட முடியாது'. 'பிள்ளைகள்' என்று இயேசு கிறிஸ்து கூறும் ஸ்தானத்தைப் பெரிதாக நினைக்காமல், 'நாய்க்குட்டிகள்' என்ற ஸ்தானத்திலிருந்தாலும், தனக்குக் கிடைக்கவேண்டியது கிடைத்துவிட்டால் போதும் என்ற திருப்தியோடு அவள் திரும்பிப் போய்விட்டாளே. இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட மனநிலையோடு வாழும் மனிதர்கள் அநேகம். பிள்ளைகளாக, அவரோடு கூட மேஜையில் அமர்ந்து போஜனம் உண்ணுவதைத் தவிர்த்து, பாவியாக இருந்தாலும் பரவாயில்லை, கீழே விழுவதைப் பொறுக்கித் தின்றால் போதும் என்ற மனதோடு வாழ்ந்துகொண்டிராமல், பிள்ளைகள் என்ற ஸ்தானத்தை நாம் அடைவதே பிதாவுக்குப் பிரியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக