சனி, 9 அக்டோபர், 2021

மந்தையை விட்டுப் போன மேய்ப்பன் (ஆதி 38:16)

 

 மந்தையை விட்டுப் போன மேய்ப்பன்


அந்த வழியாய் அவளிடத்தில்போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். (ஆதி 38:16)


மனதை அடக்கிக்கொள்ள முடியாமல் தாங்கள் செய்துவிடும் செயல்களால், மதிப்பையே இழந்து நிற்கும் மனிதர்கள் இந்த உலகத்தில் அநேகர் உண்டு. ராஜாவின் போஜனத்திலேயும், திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கு நியமிக்கப்பட்டபோதிலும், ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தானியேல் தீர்மானம்பண்ணிக்கொண்டானே (தானி 1:5,8). சுவையானதுதான் என்றாலும், 'தீட்டுப்படுத்தும்' என்பதினால், தன்னை அதற்குத் தூரமாக விலக்கிக்கொண்டானே. 

என்றபோதிலும், தன்னைத் தீட்டுப்படுத்தும் காரியம் என்றும், தனக்கு அவகீர்த்தியை உண்டுபண்ணும் காரியம் (ஆதி. 38:23) என்றும் அறிந்திருந்தபோதிலும், 'வேசி என்று நினைத்து, மருமகளாகிய தாமாரினிடத்தில் பிரவேசித்து' வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டானே. யாரென்று அறியாமல், யாக்கோபு லேயாளிடத்தில் பிரவேசித்துவிட்டு; காலையில் கலங்கி நின்றதைப் போலத்தான் (ஆதி. 29:25), யூதாவின் நிலையும் காணப்படுகின்றது. மருமகனான யாக்கோபு, மாமனாகிய லாபானால் ஏமாற்றப்பட்டான்; ஆனால், மாமனாகிய யூதாவோ மருமகளிடத்திலேயே ஏமாந்து நின்றான்; எத்தனை வேதனை! 

குமாரர்கள் மரணத்தைத் தழுவியபோது, குடியிருக்கும் இடத்தை விட்டே மருமகளாகிய தாமாரை தூரப்படுத்தினான் யூதா. 'நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு' (ஆதி. 38:11) என்று அவளை அனுப்பிவைத்துவிட்டான்; சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவியும், கணவனது செயலைத் தடுத்து நிறுத்தாது, அதற்குச் சம்மதித்திருக்கக்கூடும். மருமகளாக ஏற்றுக்கொண்டபோதோ, யூதா மகிழ்ச்சியாயிருந்திருக்கக்கூடும்; எனினும், தொடர்ந்து வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டபோதோ, அவளுக்கு விரோதமாக சூழ்ச்சி செய்து அவளை அவளது தகப்பன் வீட்டிலேயே தங்கவைத்துவிட்டானே. துக்கம் என்றவுடன் மனிதர்களைத் துரத்திவிடும் குணம் நமக்குத் தூரமாயிருப்பதாக.  அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான் (ஆதி 38:1) என்றே வாசிக்கின்றோம்; அந்த ஈராம் யூதாவின் நெருங்கிய சிநேகிதனாகவும் மாறிவிட்டான். எனவே, தொடர்ச்சியாக வேதம் யூதாவைக் குறித்து, 'யூதா, தனியாக அல்ல, அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனேயே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்' (ஆதி 38:12). யூதாவின் பசியோ, அவனை வேசியை நோக்கித் தள்ளிக்கொண்டிருந்தது; சந்தர்ப்பம் வந்தபோதோ அவனது சரீரம் சரிந்து விழுந்துவிட்டது. நம்முடைய நிலை யூதாவைப்போல காணப்படக்கூடாது, வாய்ப்பு கிடைக்காதவரை பரிசுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், வாய்ப்பு வரும்போது பாவத்தில் வழுக்கி விழுந்துவிடக்கூடாது. திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக முக்காடிட்டுக்கொண்டு, உட்கார்ந்திருக்கும் ஸ்திரீயை வேசி என்று நினைத்து, 'நான் உன்னிடத்தில் சேரும்படியாக வருவாயா?' என்று அவளிடத்தில் கேட்கச் சென்றபோது, உடனிருந்த சிநேகிதனான ஈராம்; யூதாவோடுகூட வேசித்தனம் பண்ணச் செல்லவில்லை; தான் தவறு செய்யவில்லை; என்றாலும், தடம் மாறிச் செல்லும் யூதாவையோ தடுத்து நிறுத்தவில்லையே! இப்படிப்பட்ட சிநேகிதர்கள் நமக்கு காவலாளிகளாயிருக்க முடியாதே (எசே. 38:7). ஈராமையும், ஆட்டு மந்தையையும் விட்டுவிட்டல்லவா வேசியினிடத்தில் சென்றான் யூதா. ஆடுகளைக் கூட்டிச் செல்லாமல், மேய்ப்பன் மட்டும்தான் வேசியினிடத்தில் சென்றான்; என்றாலும், அந்தச் செயலினால், மயிர் கத்தரிக்கும்படியாக கொண்டுசெல்லப்பட்ட வெள்ளாட்டுக் குட்டியையும், தனது வேசித்தனத்திற்கு இரையாக யூதா மாற்றிவிட இருந்தானே! நாம் செய்யும் பாவத்திற்கு நம்முடைய ஆடுகளை இரையாக்கிவிடக்கூடாது.

அதுமாத்திரமல்ல, அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படியாக, சிநேகிதன் கையில் அல்லவோ யூதா வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான். அவனோடு கூட வேசியினிடத்தில் போகாத சிநேகிதனை, 'வேசியைத் தேடவைத்துவிட்டானே' (ஆதி 38:20,21). அங்கே இருந்த மக்கள், ஈராமை அல்லவோ தவறாக நினைத்திருப்பார்கள். 'தான் மாத்திரம் பாவம் செய்துவிட்டு' 'நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு' (ஆதி 38:23) என்றல்லவா நாகூசாமல் சொல்லுகின்றான் யூதா. மாம்சத்தின் ஆசையினையோ மனதில் அடக்கிக்கொள்ள இயலாமல், சிநேகிதனுக்கு அவப்பெயரை உண்டாக்கி, ஒரு ஆட்டைக்கூட தேடியலையவேண்டிய மேய்ப்பன், அதனை இழக்க நினைத்து, மருமகளையும் கறையாக்கிவிட்டான் யூதா. மேய்ப்பனுடைய உடமைகளையே அடமானம் வைத்துவிட்டானே (ஆதி. 38:18). ஆடுகளை விட்டுப்போன மேய்ப்பன், தனது தவற்றிற்காக ஆடுகளை விலையாக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டானே!  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக