திங்கள், 11 அக்டோபர், 2021

நீயா? நானா? (ஆதி. 12:2)

நீயா? நானா?



தம்பதியருக்கு இடையிலான போட்டிமனப்பான்மை, குடும்ப வாழ்க்கையின் தொடரோட்டத்தில் அவர்களை இடறச் செய்துவிடுவதுடன், போட்டியின்போது உண்டாகும் இடைவெளியில் இடையூறாக பிறர் ஊடுருவதற்கும் காரணமாக அமைந்துவிடும். ஆபிரகாமை ஆண்டவர் அழைத்தபோது, 'நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவென்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்' (ஆதி. 12:2) என்று வாக்குக்கொடுத்தார். வாக்குத்தத்தத்தைப் பெற்ற ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான் (ஆதி 13:2). ஆசீர்வாதம் ஆபிரகாமின் வாழ்க்கையில் முந்தி வந்துவிட்டபோதிலும், ஆசீர்வாதத்திற்குச் சொந்தமான சந்ததியோ, வாக்குத்தத்தத்தைச் சுதந்தரிக்கும்படியான சந்ததியோ பிந்திக்கொண்டேயிருந்தது. நம்முடைய வாழ்க்கையிலும், இத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவேளை நாம் நடத்தப்படக்கூடும்; வாழ்க்கைக்குத் தேவையானவைகள் அனைத்தும், நாம் விரும்புகின்ற ஆசீர்வாதங்கள் அத்தனையும் ஒருவேளை முந்தி அவரால் அருளப்பட்டுவிடக்கூடும்; ஆனால், வாக்குத்தத்தத்தின்படியான வாரிசோ பிந்திக்கொண்டேபோகலாம்; என்றாலும், ஏற்ற வேளையில் ஆபிராமை ஆசீர்வதித்த ஆண்டவர் நம்மையும் ஆசீர்வதிக்கப் போதுமானவர். 

கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான் (ஆதி 15:1-3). அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று (ஆதி 15:4) கர்த்தரே ஆபிரகாமை தடுத்தார். 

தன் வீட்டிலே பிறந்த பிள்ளை ஒன்றை ஆபிரகாம் வாரிசாக்க நினைத்துக்கொண்டிருந்ததை அறிந்துகொண்ட சாராள், ஆபிரகாமுக்குப் போட்டியாக திட்டம் தீட்டினாள். எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். (ஆதி 16:1,2)

தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் தனக்கு அடிமையாகவே இருக்கும் ஒரு பெண்ணை ஆபிரகாமுக்குக் கொடுத்தால், பிறக்கும் குழந்தை ஆபிரகாமைச் சார்ந்ததாக அல்ல தன்னைச் சார்ந்ததாகவே வளரும் என்று சாராள் நினைத்திருக்கக்கூடும். ஆபிரகாமின் சந்ததி ஆபிராமை அண்டி நிற்கும் ஊழியர்கள் வசமாகப் போய்விடக்கூடாது, தன்னுடைய ஆளுகையின் கீழ் வரவேண்டும் என்பதற்காவே ஒருவேளை சாராள் இத்தகைய முடிவை எடுத்திருக்கக்கூடும். ஏனெனில், இதற்கு முன் சாராள் இத்தனையாய் அவசரப்பட்டதில்லையே! 'என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான்' என்று ஆபிரகாம் சொன்னபின்புதானே சாராள் 'என் அடிமைப்பெண்ணோடே சேரும்' என்று ஆபிரகாமை அவசரப்படுத்துகின்றாள். ஆபிரகாமை திசை திருப்பும் முயற்சியாக, எகிப்தைச் சேர்ந்த தன் வசமிருக்கும் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை ஆபிரகாமினண்டைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்தாள்.  

ஆபிரகாமோடு இடைபட்ட ஆண்டவர், சாராளோடு இடைபட்டு அவளைத் தடுக்கவில்லையே. அந்தப் பணியினை ஆபிரகாம் செய்திருக்கவேண்டும். 'நம்முடைய வீட்டிலே பிறந்த பிள்ளை ஒன்றை நமக்கு சுதந்தரவாளியாக நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்; ஆனால், ஆண்டவரோ, 'இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்' என்று சொல்லிவிட்டார்; எனவே, அடிமைப்பெண்ணாகிய ஆகாரிடத்தில் சந்ததியை நாம் எதிர்பார்க்கவேண்டாம்; நம்மிடத்திலேயே நம்முடைய சந்ததி உருவாகும் என்று சாராளினிடத்தில் சொல்லியிருக்கவேண்டும். விலக்கப்பட்ட கனினை ஆதாம் ஏவாளின் கையில் வாங்கிச் சாப்பிட்டதைப்போல, ஆகாரோடு ஆபிரகாம் சேர்ந்துவிட்டான். ஆதாமுக்கு கிடைத்த வேதனை ஆபிரகாமின் சந்ததிக்கும் கிடைத்தது. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக