புதன், 13 அக்டோபர், 2021

யுத்தமல்ல, முத்தம் (ஆதி 33:4)

யுத்தமல்ல, முத்தம்



அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள். (ஆதி 33:4)


ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் (நீதி 16:7). ஏசாவின் ஆசீர்வாதங்களை ஏமாற்றி வாங்கிக்கொள்வது எளிதாயிருந்தது யாக்கோபுவிற்கு;. எனினும், எதிரியாக ஏசா மாறிவிட்டபின், எதிர்கொண்டு செல்வதோ கடினமாயிருந்தது. எதனை இழந்தாலும், ஏசா தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே, யாக்கோபின் முதன்மையான எதிர்பார்ப்பாயிருந்தது. என்ன நடக்குமோ? என்ற பயத்துடன், ஏழுமுறை குனிந்து வணங்கி கிட்டச் சேர்ந்த யாக்கோபை (ஆதி. 33:3), 'எதிர்கொண்டு ஓடிவந்து, தழுவி, கழுத்தைக் கட்டிக்கொண்டு, முத்தஞ்செய்தான் ஏசா' (ஆதி. 33:4). இந்த நிகழ்வு யாக்கோபின் மனதை எத்தனையாய் குளிரப்பண்ணியிருக்கும்! 'லாபானின் வீட்டில் உண்டான நெருக்கம், மீண்டும் யாக்கோபை சகோதரனாகிய ஏசாவோடு இணைத்தது.' ஏசாவுடனான சந்திப்பு யுத்தத்தில் அல்ல முத்தத்தில் முடிந்தது. நம்முடைய வாழ்க்கையிலும், சத்துருக்கள் என்று நாம் நினைப்பவர்களை தேவன் சமாதானப்படுத்த முடியும். 

தகப்பன் யோசேப்பை அதிகமாக நேசித்ததினால், உடன்பிறந்த சகோதரனையே ஊருக்கு வெளியில் விற்றுவிட்டார்கள் யோசேப்பின் சகோதரர்கள். எனினும், எங்கே யோசேப்பை விற்றார்களோ, அங்கேயே போகவேண்டிய நிலை சகோதரர்களுக்கு உண்டானது (ஆதி. 42:2,3).  விற்கப்பட்ட யோசேப்பினிடத்திலிருந்தே, ஆகாரம் வாங்கவேண்டிய நிலை உண்டாகிவிட்டதே. நம்முடைய வாழ்க்கையையும் இப்படிப்பட்ட நிலைக்கு நாம் தள்ளிவிடக்கூடாது; தேவன் தெரிந்துகொண்ட நபர்களை, பரலோகத் தகப்பன் நேசிக்கும் மனிதர்களை விரோதித்து, துன்பப்படுத்தி, அவர்களை நம்மை விட்டுத் தூரப்படுத்துவோமென்றால்; அவர்களை எங்கே அனுப்பினோமோ அல்லது விரட்டிவிட்டோமோ, அங்கேயே போகவேண்டிய நிலை ஒருநாளில் நம்முடைய வாழ்க்கையிலும் உண்டாகும் என்பது நிச்சயம்.

தன் சகோதரர்களாலே துன்புறுத்தப்பட்டு, எகிப்தியரிடத்தில் விற்கப்பட்டவன் யோசேப்பு. தன்னை நேசித்த தகப்பனிடத்திலிருந்தும் தன்னைப் பிரித்துவிட்டவர்கள் தன்னுடைய கோதரர்களே. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும், யோசேப்பின் மனம் கசப்பாக மாறிவிடவில்லை; அன்பினால் மருரூபமாக்கப்பட்டிருந்தது; கோபம் அவனது நெஞ்சில் குடிகொண்டிருக்கவில்லை. தன்னை விரோதித்த சகோதரர்களை வெறுக்காமல், காண வாஞ்சையோடுகூட காணப்பட்டான் அவன். 'பஞ்சம் யோசேப்பையும் அவனது சகோதரர்களையும் இணைத்தது.' யாரென்று அறியாமலேயே, யோசேப்பின் சகோதரர்கள் 'முகங்குப்புற தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்: (ஆதி. 42:6). கடினமான மனிதனைப்போலப் பேசினாலும், ஒரு நடிகனாகவே யோசேப்பு காணப்பட்டான் (ஆதி. 42,44 அதி.); ஆனால், அழுகையோ யோசேப்பை நிறைத்தது (ஆதி. 42:24). மேலும், யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு, அவன் சத்தமிட்டு அழுதான் (ஆதி 45:2). யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றும், நீங்கள் விற்றுப்போட்ட யோசேப்பு நான்தான் என்றும், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம் தேவனே அனுப்பினார் என்றும் சொன்னது யோசேப்பின் சகோரர்களை எத்தனையாய் குளிரப்பண்ணியிருக்கும்! 

சத்துருக்களாக வாழ்ந்த மனிதர்களைச் சந்திக்கும்படியாக வந்தார் இயேசு கிறிஸ்து. தேடிவந்த அவரை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தேவையில்லை என சிலுவையிலறைந்தது உலகம்.. இன்றும் தேடிவரும் மனிதர்களை தேவன் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கின்றார். பங்கை வாங்கிக்கொண்டு தகப்பனை விட்டுப் பிரிந்துபோனவன் இளையகுமாரன். வாழ்க்கையில் உண்டான நெருக்கம், அவனை மீண்டும் வீட்டைநோக்கி நடக்கச்செய்தது (லூக். 15:14,15). புத்தி தெளிந்தவனாக, தகப்பன் தன்னை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியுடன் (லூக். 15:19,21) வீட்டை நோக்கிப் புறப்பட்டுவந்தபோது, அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்ததுடன் (லூக். 15:20), உயர்ந்தவைகளை உடுத்தி, விருந்தையும் ஆயத்தம் செய்தான். வெறுக்கப்பட்டுவிடுவேனோ என்று நினைத்தவன் வீட்டுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டான். இந்த நிகழ்வு இளையகுமாரனை எத்தனையாய் குளிரப்பண்ணியிருக்கும்! மனந்திரும்பினால் இந்த நிம்மதி நமக்கும் கிடைக்கும். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக