வேலியாகட்டும் வாழ்க்கை
வேலியைப் போல இருக்கும் நம்முடைய வாழ்க்கை விலகுமென்றால், பிறருடைய வாழ்க்கையையே காலி செய்துவிடும் அளவிற்கு சத்துரு உள்ளே நுழைந்துவிடக்கூடும். பலமில்லாத நிலையிலிருக்கும் ஆத்துமாக்களை, பலமுள்ள சத்துருக்களின் கைகளில் விட்டுவிட்டுச் செல்வோமென்றால், நாம் திரும்பி வரும் முன் அவர்களது ஆத்துமாக்களை சத்துரு திருடிச் சென்றுவிடக்கூடும். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன் (1கொரி 9:22) என்று பவுல் எழுதுகின்றாரே.
நம்மை தற்காத்துக்கொள்ள, பிறரை தவறாக நாம் தீர்த்துவிடக்கூடாது; மூளையினால் மாத்திரம் நாம் எடுக்கும் முடிவுகளில் பிறருடைய வாழ்க்கை முடிந்துவிடக்கூடாது; பலியாவது பிறரென்றாலும், பழியோ நம்மேலே சுமந்துவிடுமே. நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றில் அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள் என்று யோசேப்பின் சகோதரர்கள் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டபோது, ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய், அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனைக் கொல்லாமல் வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான். (ஆதி 37:20-22)
சகோதரனாகிய யோசேப்பைத் தப்புவிப்பதற்குத் தற்காலிகமாகச் சரியானதோர் ஆலோசனையைக் கொடுப்பவனைப் போல ரூபன் காணப்பட்டாலும், உடனே கொல்லவேண்டும், என்ற சகோதரர்களின் ஆத்திரத்தைத் தணிக்கும் 'முதலுதவியைப்' போலவே இருந்தது ரூபனின் முடிவு. ரூபனின் ஆலோசனையும் யோசேப்பின் ஆயுசுக்கு மெல்ல மெல்ல முடிவுகட்டுவதாகவே இருந்தது. ரூபனுடைய வழிகாட்டலின்படி, யோசேப்பை குழியிலே போட்டார்கள்; எனினும், அந்தக் குழியோ தண்ணீர்கூட இல்லாத வெறுங்குழியாகவே இருந்ததே (ஆதி. 37:24). அந்த குழியிலே இருந்தால் யோசேப்பு இறந்துவிடுவான் என்பதை உணர்ந்துகொண்ட யோசேப்பின் மற்றொரு சகோதரனாகிய
யூதா, ரூபன் இல்லாத நேரத்தில் தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும், நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றல்லவா கூறுகின்றான் (ஆதி. 37:26,27). குழியில் இருந்தாலும் யோசேப்பு இறந்துவிடுவான் என்றும், 'தூக்கிக் போட்டவர்கள்' என்ற காரணத்தினால், பழி நம்மேலேயே சுமரும் என்பதையும் யூதா தன் சகோதரர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறுகின்றானே.
'நீங்கள் இரத்தம் சிந்தலாகாது' 'நீங்கள் அவன்மேல் கை வைக்கக்கூடாது' 'நீங்கள் பாவம் செய்யக்கூடாது' 'இரத்தப்பழி தங்களிடத்தில் வாங்கப்பட்டுவிடக்கூடாது' (ஆதி. 42:22) என்பதே ரூபனது பிரதானமான குறிக்கோளாயிருந்தது; சகோதரர்களைக் காத்துவிட்டு, யோசேப்பைக் காக்கும் ஆலோசனையாகவே இருந்தது ரூபனது ஆலோசனை.
சகோதரர்களை பாவம் செய்வதிலிருந்து தடுத்து காப்பாற்றிவிட்டால், யோசேப்பு காக்கப்பட்டுவிடுவான் என்று நம்பினான் ரூபன். எனினும், சகோதரர்களுக்கு பாதுகாப்பைக் கொடுத்த ரூபனின் வார்த்தைகள், யோசேப்பையோ படுகுழிக்குள்ளேதான் தள்ளியிருந்தது. மேலும், சகோதரர்கள் யோசேப்பிற்கு எதிராக சொல்லிக்கொண்டவைகளில், 'கொன்று' என்ற ஒரு பகுதியைத்தான் தடுத்து நிறுத்தியிருந்தது ருபனின் செயல்; 'குழிக்குள்' என்ற மறுபகுதியையோ தவிர்த்திருந்தது. தப்புவிக்கவேண்டும் என்ற திட்டம் ரூபனது ஆலோசனையின் ஒரு முனையில் காணப்பட்டபோதிலும், மறுமுனையிலோ மரணமும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்ததே. ஆத்துமாக்களைக் காக்கும் விண்ணகப் பணியில் வீரர்களாக நிற்கும் நாமும் இதனை மனதில் கொண்டவர்களாக செயல்படுவது அவசியம். சிங்கத்தின் வாயிலிருக்கும் மனிதர்களை தீவிரமாகத் தப்புவிக்கும் நாம், பாவத்தின் மரணத்திற்கு இரையாகும் இடத்தில் அவர்களை விட்டுவிட்டுப் போய்விடக்கூடாதே. அவ்வாறு நடந்துவிட்டால், தப்புவிக்கும்படி நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடுமே. பரலோகத் தகப்பனண்டை அவர்களைச் சேர்க்கும்வரை, அவர்களை விட்டுத் தூரம் போய்விடாமல், பாதுகாப்பு கொடுப்பது நம்முடைய கடமையே.
ரூபன் இல்லாத சமயத்தில், யூதாவின் ஆலோசனைக்கு இணங்கி (ஆதி. 37:27), சகோதரர்கள் யோசேப்பை இஸ்மவேலருக்கு விற்றுப்போட்ட பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குப் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் (ஆதி 37:29,30) என்றது உண்மையே; யோசேப்புக்கு விரோதமாக பாவம் செய்யாதபடி சகோதரர்களைக் காத்ததும் உண்மயே (ஆதி. 42:22); அத்துடன், தகப்பனிடத்திற்கு திரும்பவும் கொண்டுபோக நினைத்ததும் (ஆதி. 37:21) உண்மையே; என்றபோதிலும், ரூபனுடைய ஆலோசனையின்படி, 'யோசேப்பு வாழ இயலாத வெறுங்குழியில் அல்லவோ விடப்பட்டிருந்தான்.'
யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. (ஆதி 37:23,24) சகோதரர்களின் கைக்கு யோசேப்பைத் தப்புவித்தபின், குழிக்குள் போடுவதற்கு அனுமதிக்காமல், பாதுகாப்பாக இருக்கும்படியாக தன்னோடு யோசேப்பை அழைத்துச் சென்றிருக்கலாமே. குழிக்குள் யோசேப்பைப் போட்டுவிட்டு, பாதுகாப்பிற்கும் அப்பாற்பட்டு யோசேப்பைப் பகைக்கும் சகோதரர்களுக்கு அருகிலேயே விட்டு விட்டு, தான் மட்டும் தூரமாகச் செல்வதை ரூபன் தவிர்த்திருக்கலாமே. தண்ணீர்கூட இல்லாத குழியில் யோசேப்பை தனியே தவிக்கும்படியாக விட்டுவிட்டு, தானும் தனியே சகோதரர்களை விட்டுத் தூரமாகச் சென்றுவிட்டானே. விற்றுப்போடப்படாதிருந்தால்; ரூபனின் வருகை தாமதித்திருந்தால், யூதா சரியான நேரத்தில் ஆலோசனை கொடுக்காதிருந்திருந்தால், யோசேப்பின் வாழ்க்கை அந்தக் குழியிலேயே முற்றுப்பெற்றிருக்கக்கூடுமே. ரூபனின் ஆலோசனையைக் காட்டிலும், யூதாவின் ஆலோசனை மேலானதாகக் காணப்பட்டது; அதிலே தேவ திட்டமும் இணைந்திருந்தது.
'தப்புவிக்கவேண்டும்' என்ற தரிசனம் நமக்கு இருக்குமானால், சகோதரர்கள் குழியில் போடப்பட்டுவிடாதபடி 'தடுத்து நிறுத்தவேண்டும்' என்ற தைரியம் கூடவே இருக்கவேண்டும். சகோதரன் 'இறந்துவிடக்கூடாது' என்ற துடிப்பு இருதயத்தில் இருக்குமானால், சகோதரனை விட்டு 'தூரம் போய்விடக்கூடாது' என்ற துணிவும் கூடவே இருக்கவேண்டும். வார்த்தையில் மட்டும் பிறரது வாழ்க்கையைக் காப்பாற்றிவிட முடியாது; வாழ்க்கையே முடிந்தாலும், வேலியாய் நின்று சகோதரர்களைக் காக்கும் வீரம் வேண்டும். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவா 3:16)
அவ்வாறே, இயேசு கிறிஸ்துவை, கொலை செய்யும்படியாக ஜனங்கள் பிலாத்துவினிடத்தில் அவரைக் கொண்டுவந்தபோது. பிலாத்துவின் மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள் (மத் 27:19). எனினும், கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று தன்னை மாத்திரம் தப்புவிப்பதாக நினைத்துக்கொண்டான் பிலாத்து. ஜனங்களோ, இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்றே சொன்னார்கள் (மத் 27:24,25). பிலாத்துவின் வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவையோ, கொலைசெய்யப்படும்படியாக ஜனங்களிடத்தில் மாட்டிக்கொடுத்துவிட்டதே. ஜனங்கள் மீது பழியையும் சுமத்திவிட்டதே.
ரூபன் மற்றும் பிலாத்துவைப் போல இரத்தப்பழிக்கு தங்களை நீங்கலாக்கிக்கொள்ள விரும்பும் கூட்டமும் உண்டு; மேலும், இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த ஜனங்களைப் போல, இரத்தப்பழியை தங்கள்மேல் சுமந்துகொள்ள ஆயத்தமாயிருக்கும் கூட்டமும் உண்டு. நாம் தப்புவிக்கப்படவேண்டும் என்பதற்காக பிறர்மீது தவறாகத் தீர்ப்பெழுதிவிடக்கூடாதே. நம்மால் பிறர் பலியாகவும் கூடாது என்பதிலும், நம்மேல் பிறரால் பழி சுமரவும் கூடாது என்பதிலும் கவனமாயிருப்போம். நம்மை மாத்திரமல்ல, பிறரையும் காத்துக்கொள்ளுவோம். வளரும்வரை பிறரின் வாழ்க்கைக்கு வேலிகளாக மாறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக