தொடரோட்டம்
அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே, இந்த சமபூமியில் எங்கும் நில்லாதே. நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். (ஆதி. 19:17)
விடுதலையோடு நின்றுவிடாமல், வழிநடக்கும்போது கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளைக் குறித்தும் நாம் கவனமுடனிருக்கவேண்டும். அழிவுக்குள்ளாகவிருந்த சோதோம் பட்டணத்திலிருந்து லோத்து காப்பாற்றப்பட்டபோது, 'உன் ஜீவன் தப்ப ஓடிப்போ' 'பின்னிட்டுப் பாராதே' 'எங்கும் நில்லாதே' 'மலைக்கு ஓடிப்போ' போன்ற நான்குவிதமான கட்டளைகள் லோத்துவுக்குக் கொடுக்கப்பட்டது.பாவத்திலிருந்து விடுதலையடைந்து, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் வெளியே அழைத்துக்கொண்டுவரப்பட்டிருந்தாலும்; கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் பயணிப்போமென்றால், காப்பாற்றப்பட்டும் கைவிடப்பட்டுவிடப்படும் நிலையினை நாமே நமது வாழ்க்கையில் உருவாக்கிக்கொள்ளக்கூடும். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தும், பார்வோனின் ஆளுமையிலிருந்தும் தன்னுடைய ஜனங்களை மோசேயை கொண்டு கர்த்தர் விடுதலை செய்தார்; என்றபோதிலும், விடுதலையடைந்து எகிப்தை விட்டு வெளியே அழைத்துக்கொண்டுவரப்பட்ட அனைவரும் கானானைக் கண்டடையவில்லையே; கர்த்தருக்குக் கீழ்ப்படியாததும், கட்டளையினைக் கைக்கொள்ளாததும், கர்த்தரையே கோபமூட்டியதும், முன்னேறிச் செல்லவேண்டிய நேரத்தில் முறுமுறுப்புடன் வாழ்ந்ததும் அதற்குக் காரணமல்லவோ. இத்தகைய நிலை முன்னின்று நடத்திச் சென்ற மோசேக்கும் உண்டாது; அப்படியென்றால், கீழ்ப்படிதல் என்பது எத்தனை முக்கியமானது?
இன்றும், என்றோ பாவத்தில் அழிந்துபோயிருக்கவேண்டிய மனிதர்களை 'அவர்கள் மீது வைத்த இரக்கத்தினால், வசனத்தைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் வெளியே ஆண்டவர் அழைத்துக்கொண்டு வந்திருக்க,' தொடர்ந்து சொல்லப்படும் கற்பனைகளுக்கும், கட்டளைகளுக்கும் அவர்கள் செவிகொடாமற்போனால், எகிப்திலே அழிந்துபோயிருக்கவேண்டியவர்கள் வனாந்தரத்திலே வந்து அழிவார்கள்; அவ்வளவுதான் வித்தியாசமாயிருக்கும். 'எகிப்திலிருந்து வெளியே வந்த எல்லாரையும் கானானிலே காணமுடியவில்லையே; நம்முடைய வாழ்க்கை இந்நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே. காப்பாற்றப்பட்டும், தொடர்ந்து ஓடக்கூடாத நிலைக்கு ஜனங்களை மாற்றிவிடவே சத்துரு முயற்சிக்கிறான்.
'ஜீவன் தப்பும்படியாகவே' நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற சிந்தை எப்போதும் நம்முடைய வாழ்க்கையில் 'முந்தி நிற்கவேண்டும். 'ஜீவனைத் (ஆத்துமாவை) தப்புவிக்கும்படியாக' எகிப்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுவரப்பட்டிருந்தும், 'ஜீவனுக்கடுத்த (சரீரத்திற்கடுத்த) காரியங்களைக் குறித்தே கர்த்தரிடத்தில் நாம் தர்க்கித்துக்கொண்டிருப்போமென்றால்,' அச்சிந்தை, தேவ சித்தத்திலிருந்து நம்மை பின்னிட்டுத் திரும்பிப் பார்க்கச் செய்துவிடும். இவ்வுலக வாழ்க்கைக்காகவே வனாந்தரத்தில் ஜீவனை விட்டுவிட்டு, பரம கானானை பறிகொடுக்கும் நிலைக்கு நம்மை நாமே தள்ளிவிடும் சூழ்நிலையை உருவாக்கிவிடும்; இச்செயல்கள், விடுதலைக்காகச் செய்யப்பட்ட விலைக்கிரையத்தை வீணாக்கிவிடும். நான் தேவஅறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன். ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய்; விவரித்துக் காண்பித்தேன் (கலா. 2.2) என்றும், நான் வீணாக ஓடினதும், வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள் (பிலி. 2:14) என்றும், நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக் குறித்து பயந்திருக்கிறேன் (கலா. 4:11) என்றும் பவுல் எழுதுகின்றாரே. இயேசு கிறிஸ்து செலுத்தின விலைக்கிரயத்தையும், அழிவினின்று நம்மை வெளியெ அழைத்துவர அவரால் அனுப்பப்பட்ட ஊழியர்களின் உழைப்பையும்மவீணாக்கிவிடாதபடி கவனமாயிருப்போம். செழிப்பான சமபூமியில் எங்கும் நில்லாமல், உலகத்துக்கு வெளிச்சமாயிருக்க, மலையின்மேல் இருக்கிற பட்டணமாக மாற (மத். 5:14), கன்மலையாகிய கிறிஸ்துவண்டை ஓடிவருவோம். 'வெளியே நின்றுகொண்டு, விட்டுவந்தவைகளை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தால், தொடர்ந்து ஓடக்கூட இயலாத உப்புத்தூணாகிவிடுவோம்.'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக