ஜீவனா? ஜீவனுக்குரியவைகளா?
யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. (ஆதி 32:24,25)
ஆசீர்வாதத்தை தகப்பனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டபின், தன் சகோதரனாகிய ஏசா தன்னைக் கண்டால் கொன்றுபோட்டுவிடுவான் என்ற உயிரைக் குறித்த பயத்தினால், அடைக்கலம் தேடி, தன் தாயின் சகோதரனாகிய லாபானுடைய வீட்டிற்குச் சென்றான் யாக்கோபு. அடைக்கலமாகப் புகுந்த லாபானுடைய வீட்டிலும், அமைதியை இழந்த யாக்கோபு, லாபான் தனக்குச் செய்யும் நீதிகேடுகளைக் கண்டு அங்கிருந்து புறப்பட்டபோது, மற்றுமொரு ஆபத்தை நினைத்து அவனது மனது அங்கலாய்த்துக்கொண்டிருந்தது. ஒருபுறம் மாமனாகிய லாபானால் உண்டான மனவருத்தங்கள், மறுபுறமோ சத்துருவைப் போலத் தோன்றும் சகோதரனாகிய ஏசா, இவ்விரு அழுத்தங்களும் யாக்கோபை ஆண்டவரண்டையே கொண்டு சேர்த்தது.
இன்றைய நாட்களிலும், நித்திய ஜீவனைக் குறித்து கவலைப்படாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அலைமோதும் கூட்டம் ஏராளம். ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டபின், உயிரைக் குறித்து உண்டாகும் பயம், ஆசீர்வாதத்தையல்ல, உயிரையே காப்பாற்றும் உணர்வுக்குள்ளாகவே ஒவ்வொரு மனிதனையும் தள்ளுகின்றது; என்றபோதிலும் இந்த உணர்வு காலதாமதமானதாகவே அநேகருடைய வாழ்க்கையில் காணப்படுகின்றது. ஜீவனைக் காப்பாற்றும் வழியினை அறியாமல், சரீரத்திற்கானவைகளில் திருப்தியடைவோமென்றால், நம்முடைய வாழ்க்கை சரிந்துபோய்விடும். எனவே, மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என்று இயேசு கிறிஸ்து போதித்தாரே.
உலகத்திற்குரிய பொருட்களை சரீரத்திற்காகச் சேர்த்துவைத்துவிட்டு, ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று சொல்லிக்கொண்ட மனிதனை நோக்கி, தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் (லூக் 12:19,20) என்று கேட்டாரே ஆண்டவர். இந்தக் கேள்வி நம்முடைய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியதே. ஆசீர்வாதங்களல்ல ஆண்டவரே முக்கியம் என்பதை மறந்துவிட்டவர்கள் அநேகர்.
லாபானுடைய வீட்டிலிருந்து திரளான ஆசீர்வாதங்களோடு யாக்கோபு புறப்பட்டு வந்துகொண்டிருந்தாலும், 'ஆசீர்வாதங்கள் அல்ல ஆண்டவரே தனது பயணத்திற்கு அவசியமானவர்' என்பதை உணர்ந்திருந்தான். ஒருபுறம் லாபானால் உண்டாகிவிட்ட நெருக்கம், மற்றொருபுறமோ சகோதரனாகிய ஏசாவினைக் குறித்த பயம்; இவ்விரண்டும், யாக்கோபை மீண்டும் தேவனண்டை கொண்டுவந்து சேர்த்தது. யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான் (ஆதி. 32:24). நம்முடைய வாழ்க்கையிலும் இருபுறமும் இப்படிப்பட்ட நெருக்கங்கள் உண்டாகும்போது, நாம் சார்ந்துகொள்ளவேண்டியது, தேடவேண்டியது தேவனையே. ஒருபுறம் இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும்படியாகப் புறப்பட்டு வந்துகொண்டிருந்த எகிப்தின் இராணுவம் (யாத். 14:9), மறுபுறமோ, தாண்டிச் செல்ல இயலாதபடிக்குத் தடையாக நிற்கும் சிவந்த சமுத்திரம் (யாத். 14:2), நின்றுகொண்டிருப்பதோ வழியில்லாத வனாந்தரம் (யாத். 14:3); இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், ஜனங்கள் தங்களைப் புறப்படப்பண்ணின மோசேயினிடத்தில் முறையிட்டார்கள் (யாத். 14:11,12); ஆனால், மோசேயோ தன்னை அழைத்த ஆண்டவரிடத்தில் முறையிட்டான் (யாத். 14:15); அப்போது, ஆண்டவராலே வழி உண்டாக்கப்பட்டது.
யாக்கோபின் வாழ்க்கையிலும் நடந்தது இதுவே, ஒருபுறம் அழிக்கும் நோக்கத்தோடு வந்த லாபானிடமிருந்து கர்த்தர் யாக்கோபைக் காப்பாற்றினார். மறுபுறம், பயணத்திற்கு தடை என்று நினைத்த சகோதரனாகிய ஏசாவை மாற்றி சமாதானமாகும்படிச் செய்தார். மறுபடியும் பின்தொடர்ந்த பார்வோனை சமாதியாகும்படிச் செய்தார்; மனம் மாறிய ஏசாவையோ சமாதானமாகும்படிச் செய்தார். ஆண்டவருக்கே முக்கியத்துவம் கொடுப்போமென்றால், நம்முடைய வாழ்க்கையிலும் இது சாத்தியமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக