திங்கள், 11 அக்டோபர், 2021

உயர்ந்த நிலை (ஆதி 22:12)

உயர்ந்த நிலை  



அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஓப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். (ஆதி 22:12)


'பாவங்களை விட்டு விலகுவதும், பரிசுத்தமாக வாழ்வதும் கர்த்தருக்குப் பயப்படுதலே' என்றாலும், இந்த உலகத்தில் நம்மைக்கொண்டு செய்துமுடிக்கும்படியாக கர்த்தர் முன்குறித்திருக்கும் காரியங்களையும் செய்துமுடிக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற பயமும் நம்முடைய சிந்தையில் முந்தி நிற்கவேண்டும். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (சங் 111:10, நீதி. 1:7) என்பது நாம் அறிந்ததே; என்றாலும், கர்த்தருக்குப் பயப்படுதலின் தொடக்க நிலையிலேயே நமது பயணத்தை நாம் நிறுத்திவிடக்கூடாது; அவர் விரும்பும் வண்ணம் தொடர்ந்து பயணிக்கவும் நம்மை அர்ப்பணிக்கவேண்டும்.

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த நம்மை அவர் உயிர்ப்பித்தார். அவைகளில் நாம் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டோம் அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம் (எபே 2:1-3), எனினும், அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவா 1:12); எனினும், பிள்ளைளுக்குரிய அதிகாரம் மாத்திரம் போதும் என்றல்ல, அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் (மத் 10:1) என்ற அடுத்த நிலையினையும் புரிந்தவர்களாக இந்த உலகத்திற்குள் நாம் புகுந்து செநல்லவேண்டுமே. 

பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன் (சங் 34:11) என்று தனது சங்கீதத்தில் அறிவுரையாகக் கூறும் தாவீது, கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது (சங் 34:15) என்று பிள்ளைகளை நீதிமான்கள் என்னும் அடுத்த படிக்கு உயர்த்திக்காட்டி, கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது (சங். 34:22) என்று நீதிமான்களளை ஊழியர்கள் என்னும் அதனிலும் மேலான படிக்கு உயர்வாக்கிக் காட்டுகின்றாரே. நாம் கர்த்தருக்குப் பயப்படுபவர்களாக இருந்தால், நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட படிப்படியான முன்னேறுதலுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்; இல்லையேல், பிள்ளைகள் என்ற ஸ்தானத்திலேயே நின்றுவிடுவோம் அல்லது மற்றவர்களை நீதிமான்களாக்கவேண்டும் என்ற மனதற்றவர்களாக 'நாம் மாத்திரம் நீதிமான்களாயிருந்தால் போதும்' என்ற மனதுடன் வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருப்போம்; நம்மைக்கொண்டு இந்த உலகத்தில் அவர் செய்ய விரும்பும் காரியங்களுக்கு நம்மை அர்ப்பணித்தால் மாத்திரமே ஊழியக்காரர் என்ற உயர்ந்த நிலையில் இந்த உலகத்திலே நாம் உலாவரமுடியும்.  தன்னைத்தானே தாழ்;த்தி ஒப்புக்கொடுத்ததினால் அல்லவோ எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு கிறிஸ்து உயர்த்தப்பட்டார். (பிலி. 2:8,9)

அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள் (சங். 113:1) என்றும், இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் (சங். 134:1) என்றும், அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள் (சங். 135:1)  என்று உயர்ந்த நிலையினையே இவ்வசனங்கள் உரக்கக்கூறுகின்றனவே. ஆண்டவரும் இந்நிலையினையே உயர்த்துகின்றார் (ஆமோஸ் 3:7). அன்று ராத்திரியிலே கர்த்தர் ஈசாக்குக்குத் தரிசனமாகி: 'என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம்' உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் (ஆதி. 26:24) என்று ஒப்புக்கொடுத்த ஆபிரகாமை ஊழியனாக உயர்த்திக்காட்டுகின்றாரே ஆண்டவர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக