வார்த்தையும் விபத்தும்
ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான். அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். (ஆதி 20:1,2)
நமது பாதுகாப்பிற்காக பிறரை குழிக்குள்ளும், அப்படியே, நாம் சுதந்தரமாக வாழவேண்டும் என்பதற்காக, பிறரை அடிமைத்தனத்திற்குள்ளும் தள்ளிவிடக்கூடாது. சோவாருக்குள் வந்தபோது லோத்துவை பயம் ஆட்கொண்டதைப் போலவே, கேராருக்கு வந்தபோது ஆபிரகாமையும் பயம் ஆட்கொண்டது. எனவே, அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய்? என்று கேட்டபோது, ஆபிரகாம் பிரதியுத்தரமாக, 'இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்' (ஆதி. 20:10,11) என்று சொல்லுகின்றான். தெய்வபயம் இல்லாத இடத்திற்கு, தேவன் நம்மை அழைத்துச் சென்றிருப்பாரென்றால், அவரே நமது அரணாயிருப்பார். தெய்வபயம் இல்லாத மனிதர்கள், தெய்வபயம் உடைய மனிதர்களுக்கு பயத்தை உருவாக்குகிறவர்களைப் போலக் காணப்பட்டாலும், 'தெய்வபயமுடையோருக்கு பாதுகாப்பு தேவனே என்பது தகர்க்க இயலாதது.' எனினும், 'அழைத்தவர் தேவன், எனவே அவரே என் பாதுகாப்பு' என்று எண்ணாமல், தானாகவே ஓர் தவறான பாதுகாப்பினை உருவாக்க முயன்றான் ஆபிரகாம். மனைவி என்ற மணவாளனுடனான மதிற்சுவரை உடைத்து, சகோதரி என்ற பெலனில்லாத பதிற்சுவரை உபயோகப்படுத்துகின்றான்.
ஆபிரகாமின் ஆலோசனை, அபிமெலேக்கிற்கு மாத்திரமல்ல, மனைவியாகிய சாராளுக்கும் ஆபத்தானது அல்லவோ. ஆகாரினிடத்தில் ஆபிரகாமை சாராள் தள்ளிவிட்டதுபோல, அபிமெலேக்கினிடத்தில் ஆபிரகாம் சாராளைத் தள்ளிவிடுகின்றான். ஆபிரகாமின் வித்தை ஆகார் இடையில் சுமக்க நேரிட்டது, எனினும், அபிமெலேக்கின் வித்தையோ ஆண்டவர் இடைமறித்தார். ஒருவழிப் பாதையினை உணராமல், வாழ்க்கையின் வழியில் வலியை உண்டாக்கிக்கொண்டனர் ஆபிரகாமும் சாராளும். இன்றும், பெலமுள்ளவைகளை தவிர்த்து, சத்துருவினால் எளிதில் தகர்க்கப்படக்கூடிய பெலனில்லாத சுவர்களை தங்களைச் சுற்றிலும் கட்டியெழுப்பவே மனிதர்களை சத்துரு உந்தித்தள்ளுகின்றான். கிறிஸ்தவர்களாக இருந்தபோதிலும், வேலை வாய்ப்பிற்காகவும், அரசின் சில சட்டதிட்டங்களிலிருந்து தப்பிக்கொள்ளவும், சலூகைகளைப் பெற்றனுபவிக்கவும், சான்றிதழில் தங்களை 'பிற மதத்தைச் சார்ந்தவர்கள்' என்று சமர்ப்பிப்பவர்கள் உண்டல்லவோ. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் (மத் 5:37) என்று இயேசு கிறிஸ்து சொன்னதை, யாக்கோபும் தனது நிருபத்தில் உறுதிப்படுத்துகின்றாரே (யாக். 5:12).
இளைய குமாரனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்னபோது (லூக் 15:17-19), தகப்பன் அந்த உறவை ஏற்றுக்கொள்ளவில்லையே, நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றானே. (லூக் 15:22-24)
அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது! நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! (யாக் 3:5,6) என்று யாக்கோபு எழுதுவதைப்போல, நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள், நம்முடைய வாழ்க்கையையோ அல்லது பிறரது வாழ்க்கையையோ கொளுத்திவிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக