சனி, 9 அக்டோபர், 2021

யூதாவின் யுத்தம் (ஆதி 38:11)

 

 யூதாவின் யுத்தம்


அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். (ஆதி 38:11)


தவறு இருக்கும் திசையினைத் தெரிந்துகொள்ளாமலும், தவற்றின் காரணத்தை புரிந்துகொள்ளாமலும், மாம்சீக அறிவின்படி மற்றவரைக் குற்றவாளிகளென்று நாம் தீர்த்துவிடக்கூடாது. தேவனுக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படுமென்றால், இணைக்கப்பட்டவைகள் கூட இடிந்துபோய்விடக்கூடும். குடும்ப வாழ்க்கைகள் பல கூளமானதற்கும், சத்துருவின் சூறாவளிக்கு இறையானதற்கும் இணைப்பவரை இறுகப்பற்றிக்கொள்ளாததே காரணம். குடும்ப உறவை இறுக்கமாக்கும் இணைப்பவரை விட்டுவிட்டு, இடித்துத்தள்ளும் மனிதர்களுக்கு இடையில் இடங்கொடுத்ததாலே, கோபுரமாக உயரவேண்டிய நேரத்தில், அஸ்திபாரமே அழிந்துபோகும் நிலைக்கு பலருடைய வாழ்க்கை தள்ளப்பட்டுவிட்டது. 

சகோதரர்களை விட்டுப் பிரிந்து சென்ற யூதா, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்ததோடு மாத்திரமல்ல, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான் (ஆதி. 38:1,2). ஏர், ஓனான் மற்றும் சேலா என்ற குமாரர்களையும்

பெற்றெடுத்தான். ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கிற்கு பெண் தேடும்படியாக வேலைக்காரனை அனுப்பியபோது, 'நீ நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போ (ஆதி 24:3,4) என்று அனுப்பினானே. அவ்வாறே ஈசாக்கும் யாக்கோபை அழைத்து, 'நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போ' என்று அனுப்பிவைத்தானே (ஆதி. 28:1,2). அப்படியிருக்க யூதா கானானிய ஸ்திரீயோடு சேர்ந்தது 'கர்த்தருக்கு விரோதமான உறவல்லவோ' அது அவனுடைய தவறுமல்லவோ. 

யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார் (ஆதி 38:7). கர்த்தரே தேவனென்று அறிந்திருந்தும் பொல்லாப்புக்கு தன்னை விற்றுப்போட்டதினால், அவனுடைய வரலாறு தொடருவதற்கும், அவனால் வம்சம் உருவாகுவதற்கும் கர்த்தர் வழிவிடவில்லை; என்றபோதிலும், மகனது மரணத்திற்கான காரணத்தை அறிந்துகொள்ளாத யூதா, விதவையாக விடப்பட்ட மருமகளான தாமாரை மற்றொரு மகனான ஓனான் என்பவனுக்கு மணமுடித்துவைத்தான். எனினும், 'நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு' (ஆதி 38:8) என்று தகப்பனாகிய யூதா சொன்ன வார்த்தைகள், ஓனானுக்கு பாரமாகத் தோன்றியது. தனக்கு அல்ல, மரித்துப்போன தமையனுக்கே சந்ததியை உண்டாக்குகின்றோம் என்பதை அறிந்துகொண்ட ஓனான், அதனை தவிர்த்துவிட நினைத்தான்; தமையனின் சந்ததிக்கு முடிவுகட்ட நினைத்தான். தகப்பனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, தாமாரோடு சேர்ந்தாலும், சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான் ஓனான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். (ஆதி 38:9,10)

இரண்டு குமாரர்களும் இறந்துபோனபோது, அவர்களது மரணத்திற்கு மருமகளே காரணம் என்ற தவறான தீர்ப்பினை மனதில் சுமந்துகொண்டிருந்தான் யூதா. எனவே, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று (ஆதி 38:11) அவளை அனுப்பிவிட்டான். யூதாவின் இந்த செயல், மருமகளிடத்திலே சேரும்படியாக அவனைத் தள்ளிவிட்டதே (ஆதி. 38:18); அவளாலேயே குற்றவாளி என்று தீர்க்கும் நிலையும் உண்டாகிவிட்டது. தன்னிடமிருக்கும் குறைகளைக் கண்டுகொள்ளாமல், 'மலடி' என்ற பட்டத்தை மனைவிக்கு மட்டும் சூட்ட நினைக்கும் கணவன்மார்களும், மணமுடித்தவர்களையே திருப்பி அனுப்பும் மனிதர்களும் உலகத்தில் உண்டே. தவறான சேர்க்கை, தவறான சேர்க்கையிலேயே முடிந்தது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக