பலி
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். (ஆதி 22:1-3)
ஆபிரகாமை தேவன் சோதித்தபோது, 'ஈசாக்கை தகனபலியாகப் பலியிடு' என்று மாத்திரம் சொல்லிவிடவில்லை; மாறாக, எப்பொழுது? எங்கே? எதற்கு மேலே? எந்த இடத்திலே? என்பதையும் குறிப்பாக கூறுகின்றார். முதலாவதாக, 'ஆபிரகாமே' என்று தேவன் அழைத்தபோது, 'இதோ அடியேன்' என்று உடனே பதில் கொடுத்தான். ஆனால், ஏதேன் தோட்டத்தில் ஆண்டவர் ஆதாமைத் தேடினபோது, 'நீ எங்கே இருக்கிறாய்?' (ஆதி. 3:9) என்று கேட்டபோதிலும் ஆதாம் அமைதியாயிருந்தான். பாவத்தில் விழுந்த மனிதன்; தேவனுடைய சத்தத்தைக் கேட்டு ஒளிந்துகொள்ளுவான்; ஆனால், பரிசுத்தத்தைக் காத்துக்கொள்பவனொ 'இதோ அடியேன்' என்று அருகில் வருவான். பாவத்திலிருப்போரை மீட்கவும் தேடிவருகிறார், அப்படியே பரிசுத்தமாயிருப்பவர்களை இன்னும் பரிசுத்தமாக்கவும் அவர் தேடிவருகின்றார். 'இதோ அடியேன்' என்று சொல்பவர்களே, அடுத்தக் கட்டத்திற்குப் பயணப்படுகின்றனர். (ஏசா. 6:8)
இரண்டாவதாக, 'கர்த்தருக்குக் கீழ்ப்படியவேண்டுமென்றால், தாமதம் என்பது தவிர்க்கப்படவேண்டும்.' 'இப்பொழுது' என்ற வார்த்தைக்கு உடனே ஆபிரகாம் கீழ்ப்படிந்தான். வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார் (லூக் 9:59-60). 'அழைக்கப்பட்டபின்' 'ஆனாலும்' என்ற தாமதத்திற்கான வார்த்தை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை (லூக். 9:61,62). மேலும், ஆண்டவர் அழைப்பது ஆசீர்வாதத்திற்காக மாத்திரமே என்று நாம் நினைத்துவிடமுடியாது; சோதிக்கும்படியாகவும் நம்மை ஆண்டவர் அழைக்கக்கூடும். அழைத்து ஆசீர்வதிக்கும்போது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் ஜனங்கள், சோதனை வரும்போதோ சோர்ந்துபோகிறார்கள். கொடுப்பவராக மட்டுமே ஆண்டவர் இருக்கவேண்டும், எடுப்பவராயிருக்கக்கூடாது என்பதுதான் இன்னும் திண்ணமான எண்ணம் பலருக்கு.
மூன்றாவதாக, 'பலியிடு' என்று மாத்திரம் சொல்லியிருந்தால், எங்கேயாவது ஒருவேளை ஆபிரகாம் ஈசாக்கை பலியிட அழைத்துச் சென்றிருக்கக்கூடும்; ஆனால், 'மோரியா தேசத்திற்குப் போய்' பலியிடவேண்டும் என்று சொன்னபோது, 'ஆபிரகாம் பலிக்கு முதலிடம் கொடுத்து நிறைவேற்றிவிடாமல், பலியிடவேண்டிய இடத்திற்கு முதலிடம் கொடுத்து பயணப்படவேண்டியதாயிற்று.' இந்த பயணம் அவனது வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கக்கூடும். 'பயணம்' என்பது கடைசி மணித்துளிகளை மகனோடு செலவழிக்கும் 'தருணமாகக்' கொடுக்கப்பட்டது என ஒருவேளை ஆபிரகாம் நினைத்திருக்கக்கூடும். சில நேரங்களில் நாம் கர்த்தர் கொடுக்கும் கட்டளையினை கவனமாகச் செவிகொடுக்காமல், இருக்கும் இடத்திலேயே நிறைவேற்றிவிடத் துணிந்துவிடுகின்றோம். எங்கே சென்று அது நிறைவேற்றப்படவேண்டுமோ, அங்கே சென்று அதனை நிறைவேற்றவிடாதபடி, சத்துரு முன்வைக்கும் தடைகளுக்குள் அடைபட்டுவிடுகின்றோம். எத்தனையோ மிஷனரிகள் தங்களுடைய நாடுகளை, வீடுகளை, உறவுகளை, குடும்பத்தைக்கூட விட்டு அழைப்பை ஏற்று அறியாத தேசங்களுக்கும் சென்று தங்களை பலியாக ஒப்புக்கொடுத்ததுண்டே. அழைக்கப்பட்ட இடத்திற்குச் செல்லாமல் (கீழ்ப்படியாமல்), இருக்குமிடத்திலேயே அவசரப்பட்டால், ஒருவேளை பலிக்குப் பதிலாக ஆட்டுக்கடா உங்களுக்குக் கிடைக்காமற்போகலாம்; அது மோரியா மலையிலேயே கட்டப்பட்டிருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக