மரணத்திற்குக் காரணமாகும் மனிதர்கள்
அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு. அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார். (ஆதி 20:7)
நம்முடைய மரணத்திற்கு மாத்திரமல்ல, பிறருடைய மரணத்திற்கும் நம்மையே காரணமாக்கி அதிலே அனந்த ஆனந்தம் காண விரும்புபவன் சாத்தான். சாத்தானின் தூண்டுதலை அறியாமல், தூண்டிலில் சிக்கிக்கொண்ட மக்கள், தங்களுக்கு மாத்திரமல்ல தங்களைச் சார்ந்தவர்களுக்கும் துக்கத்தையே வருவிப்பவர்ளாக மாறிவிடுவர். ஆபிரகாம் பெலிஸ்தியரின் தேசமாகிய கேராரில் தங்கியிருந்தபோது, சாராயின் மேல் ஆசைகொண்டு, அவளை தன்னண்டைக்கு அழைத்தனுப்பினான் கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு; எனினும், 'சாவோ, அபிமெலேக்கை மாத்திரமல்ல, அவனைச் சார்ந்தவர்களையும் தொடரவிருந்தது;' தேவன் அபிமெலேக்கை நோக்கி, 'அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு' 'நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள்' (ஆதி. 20:7) என்று எச்சரிக்கின்றார். ஆபிரகாமே சகோதரி என்று ராஜாவுக்குச் சாதகமான வார்த்தைகளைச் சொல்லி சாராளை விட்டுக்கொடுத்திருந்தாலும், தீர்க்கதரிசியாகிய ஆபிரகாமின் மனைவியாகிய சாராளையோ விட்டுக்கொடுக்க ஆண்டவர் ஆயத்தமாயில்லை. பயத்தினிமித்தம் பல நேரங்களில் நம்முடைய கரங்களிலிருந்து நம்முடையதைக் கீழே போட்டுவிட நாம் நினைத்தாலும், பாய்ந்து வந்து தன்னுடைய கரங்களில் நம்முடையவைகளை தாங்கிக்கொள்பவர் நம்முடைய தேவன். பல நேரங்களில், நாம் செய்யும் பாவத்தினால், நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்களின் மரணத்திற்கும் நாம் காரணமாகிவிடுகின்றோம். நம்முடைய வாழ்க்கையின் இன்பத்திற்காக பிறருடைய வாழ்க்கையில் துன்பத்தை வருவித்துவிடக்கூடாது.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்தபோது, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்று சொன்னபோது, பார்வோன் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான் (யாத். 5:1.2). பலமுறை பார்வோனோடு மோசே பேசினபோதிலும், ஆண்டவருடைய ஜனத்தை ஆராதிக்கும்படி பார்வோன் அனுப்பவிவில்லை. விளைவு வாதைகளினால் எகிப்து தேசத்து மக்கள் அவதிப்பட்டதோடு மாத்திரமல்லாமல், எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்று (யாத் 10:7) பார்வோனுடைய ஊழியக்காரர்களே சொல்லும் நிலையும் உருவானது. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன். இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவைமாத்திரம் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள் என்றான். (யாத் 10:16,17)
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான் (யாத் 11:1) என்றார். நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார். அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை (யாத் 12:29,30). 2 சாமு. 24:15 மற்றும் யோசுவா :1-5 போன்ற வசனங்கள் எடுத்துக்கூறும் சத்தியமும் இதுதானே. நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்காக விதையாகவேண்டும், வலையாகிவிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக