திங்கள், 11 அக்டோபர், 2021

விருந்தினரும் வீடும் (ஆதி 19:7,8)

விருந்தினரும் வீடும்


சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.  இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு. அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ;டப்படி செய்யுங்கள். இந்தப் புருஷர் என் கூரையின் நிழலில் வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான். (ஆதி 19:7,8)


 'லோத்து நீதிமான்தான்' என்றாலும், வீட்டிலிருக்கும் விருந்தினர்களைக் காக்க, தன் பிள்ளைகளையே பாவிகளிடத்தில் தாரைவார்க்க அவன் துணிந்துவிட்டான். 'சகோதரரே, இந்த அக்கிரமம் வேண்டாம்' என்று கூறும் லோத்து, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகளை வெளியே கொண்டுவருகிறேன், 'அவர்களுக்கு உங்கள் இஷ;டப்படி செய்யுங்கள்' என்கிறான். ஒரு அக்கிரமத்தைத் தடுக்க, 'மற்றொரு அக்கிரமத்தினாலே' சோதோமின் மனுஷரை திருப்திப்படுத்த முயலுகின்றான் லோத்து. 'இரண்டு குமாரத்திகளை, வீட்டைச் சூழ்ந்து நிற்கும் அனைத்து வாலிபர்களுக்கும் கிழவர்களுக்கும் கொடுப்பது' எத்தனை அக்கிரமமானது? பெற்றுவளர்;த்த குமாரத்திகளின் நிலமை எத்தனை அலங்கோலமாகியிருக்கும்? ஒருவேளை லோத்துவின் குமாரத்திகளை சோதோம் மனுஷர் அறிந்திருந்தால், அந்த உறவினால் பிறக்கும் குழந்தைகளும் கர்த்தருக்கு அருவருப்பான சந்ததியாயிருந்திருக்குமே. 

ஒருவேளை, லோத்துவின் குமாரத்திகள் தங்கள் தகப்பனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டிருந்தால், எத்தனையாய் மனமடிவடைந்திருப்பார்கள்? அந்த மனமடிவின் விளைவு, உங்களால்தானே எங்களுக்கு இந்த ஆபத்து வரவிருக்கிறது,  என்று குமாரத்திகளின் முகக்களையில் விருந்தினர்களாக வீட்டிற்கு உள்ளே இருக்கும் தூதர்களுக்கு வெளிப்பட்டிருக்குமே! ஆபிரகாமின் மனைவியாகிய சாராளை பார்வோன் தொட்டுவிடாதபடி கர்த்தர் தடுத்ததைப் போலவே, லோத்துவின் இந்த முடிவை தூதர்களைக் கொண்டும், சோதோமின் மனிதர்களைக் கொண்டும் (அவர்கள் மறுத்ததினால்) தடுத்தார் ஆண்டவர். நம்முடைய நிலை இப்படி காணப்படக்கூடாது. லோத்து நீதிமானாக இருந்தபோதிலும், அவனால் எடுக்கப்பட்ட இந்த முடிவோ நீதியானது அல்லவே.  ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது (பிர 7:8). விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான் (பிர 7:2) என்கிறான் சாலமோன். விருந்தினரை உபசரிக்கிறோம் என்று சத்துருவின் குறியை வீட்டை நோக்கித் திருப்பிவிடக்கூடாது. தகப்பனாகிய லோத்துவோடுகூட காப்பாறப்படவேண்டிய குமாரத்திகளை, சோதனையின் நேரத்தில் சோதோமின் கைகளில் விட்டுவிட நினைத்தான் லோத்து. நீதிமானின் குடும்பத்தைக் கவிழ்க்கும்படியாக, புருஷரை அறியாத லோத்துவின் குமாரத்திகள், தகப்பனாகிய லோத்துவையே அறியக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டார்களே. நீதிமானாகிய லோத்துவினால், நீதியானதோர் சந்ததியினை உருவாக்க முடியாதுபோயிற்றே! மனைவியை வழியிலே பறிகொடுத்துவிட்டான்; குமாரத்திகளுக்கு அவனே பலியாகிவிட்டான். குடும்பத்தைக் குறித்தக் கவலையில்லாத லோத்துவை விட்டு குடும்பமே பறிக்கப்பட்டுப்போயிற்று.

ஊழியங்களின் மீதே கவனம் செலுத்தி, பிள்ளைகளை வீதியிலே விட்டுவிடக்கூடாது. கர்த்தருக்கடுத்த காரியங்களையே காத்துக்கொண்டிருந்தபோதிலும், பலர் தங்கள் பிள்ளைகளை சத்துருவுக்குப் பறிகொடுத்துவிட்டனர். 'இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை (1சாமு 8:5) என்று சாமுவேலின் பிள்ளைகள் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். சாமுவேல் சிறுபிள்ளையாயிருந்தபடியினால், கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான் (1சாமு 3:7); ஆனால், ஏலியின் குமாரர்களோ, பெரியவர்களான பின்னும், பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை (1சாமு 2:12). பாகாலின் பலிபீடத்தை இடித்துப்போட்டவன் கிதியோன் (நியா. 6:25-27). ஆனால், அவனது குமாரனான அபிமெலேக்கோ, பாகாலின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை பெற்றுக்கொண்டு, விணரும் போக்கிரிகளுமான மனுஷரை சேவகத்தில் வைத்துக்கொண்டு, தனது தகப்பனின் (கிதியோனின்) குமாரர்களான தன் சகோதரர்களை ஒரே கல்லின் மேல் கொலை செய்தான் (நியா. 9:4,5). கிதியோனின் மூத்தகுமாரனாகிய யெத்தேர் பட்டயம் உருவக்கூட பயப்படுகிறவனாயிருந்தான் (நியா 8:20). 1 தீமோ. 3:4,5 வசனங்களை வாழ்க்கையாக்குவோம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக