வீதிக்குத் விரட்டப்பட்ட வீடு
அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.(ஆதி 16:6)
இந்த வசனத்தின் அழுத்தத்தைப் புரிந்துகொள்ள மேலும் இரண்டு வசனங்களின் அர்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அவன் (அம்னோன்) அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்
(2சாமு 13:14,15). இதே நிலைதான் சாராயின் வாழ்க்கையில் காணப்பட்டது. ஆபிராமோடு அவளைச் சேர்த்துவிட்டபோது, தன் வீடு எப்படியாகிலும் கட்டப்பட்டுவிடும் என்ற சந்தோஷத்தில் சாராய் காணப்பட்டிருப்பாள். ஆனால், ஆகார் கருத்தரித்த பின்போ, சாராய் ஆகாரை வெறுக்கத் தொடங்கிவிட்டாள். 'அவள் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது.'
பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார் யெகோவா
(ஏசா 66:9). யெகோவாவின் குணம் இப்படியென்றால், சாராய் செய்தது என்ன? ஆண்டவருக்கு விரோதமானதுதானே. குழந்தை வேண்டும் என்பதற்காக அடிமைப்பெண்ணாகிய ஆகாரை தனது கணவனாகிய ஆபிராமினிடத்தில் பிரவேசிக்கச் செய்தாள்; ஆனால், ஆகார் கருத்தரித்த பின்னரோ, வயிற்றிலே குழந்தையைச் சுமந்துகொண்டிருந்த வேளையிலோ ஆகாரை தனது வீட்டிலே குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்துவிடாமல், வீட்டை விட்டே துரத்திவிட்டாள். 'பிரசவிக்க வழிவகுத்துக்கொடுத்த சாராய், இப்போதோ பிரசவத்தைத் தடுக்க முயற்சிக்கிறாள்.'
எசேக்கியா ராஜாவின் நாட்களில், அசீரியா ராஜா அவனுக்கு விரோதமாக வந்தபோது, தனது அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக எசேக்கியா அனுப்பினான். இவர்கள் அவனை (ஏசாயாவை) நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை (2இரா 19:2,3) என்று சொன்னதைப் போன்ற நிர்ப்பந்தமான நிலையே ஆகாருடைய வாழ்க்கையிலும் ஏற்பட்டது.
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (சங் 127:1) என்கிறான் சாலமோன். பல ஸ்திரீகளைக் கொண்டு தனது வீட்டை கட்டி, அந்நிய தெய்வங்களுக்கும் கோவிலைக் கட்டியவன் அவன். சாராயின் வீட்டை கர்த்தர் கட்ட தாமதித்துக்கொண்டிருக்க, தானே கட்டிவிடவேண்டும் என்ற முடிவுக்குள் வந்துவிட்டாள் சராய். உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ? (லூக் 14:28-30) என்று இயேசு போதித்தாரே.
தேவனுடைய வேளைக்காகக் காத்திருக்காமல், அவரது வார்த்தைகளுக்காகவும், வாக்குத்தத்தங்களுக்காகவும் காத்திருக்காமல், நாமே தீர்மானங்களை எடுத்துக்கொண்டு போடப்படும் அஸ்திபாரங்களினால் உண்டாகும் உபத்திரவங்களை நாமே சுமக்கவேண்டியதாகிவிடும். ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும் (பிர 10:15) என்ற நிலைக்கு நம்மையும், பிறரையும் நாம் தள்ளிவிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக