விடைபெறும் ஆசீர்வாதம்
இவ்விதமாய் அந்தப் புருஷன் (யாக்கோபு) மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான். (ஆதி 30:43)
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருப்போமென்றால், பிறர் நம்மை கையாளும் விதத்தைக் குறித்து கவலைகொள்ளவேண்டிய அவசியமில்லை. தேவனோடிருப்பவர்களை ஏற்றுக்கொள்ளும் எவரது வீட்டையும் தேவ ஆசீர்வாதம் நிரப்பக்கூடும். எனினும், அநியாயங்களை அரங்கேற்ற முயற்சிப்பார்களென்றால், அதற்கேற்ற நியாயம் பரலோகத்திலிருந்து நிச்சயம் வெளிப்படும்.
லாபானுடைய வீட்டை நோக்கி யாக்கோபு சென்றபோது, தேவன் யாக்கோபோடு கூட இருந்தார் (ஆதி. 28:20). லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான். மேலும், நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றும் சொன்னான் (ஆதி. 29:13,14). சகோதரியின் மகன் என்ற உறவிலே, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அன்போடு லாபான் யாக்கோபை உபசரித்துவந்தபோது, யாக்கோபோடு கூட இருக்கும் தேவனிடத்திலிருந்து உன்னதத்தின் ஆசீர்வாதங்களை லாபான் பெற்றனுபவித்துவந்தான். நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது (ஆதி 30:30) என்று யாக்கோபே சொல்லுகின்றான். லாபானுடைய வீட்டில் யாக்கோபு தங்கியிருந்த நாட்களில், யாக்கோபின் நிமித்தமாக வந்த (ஆதி. 30:27) ஆசீர்வாதங்கள் அனைத்தும் லாபானின் கணக்கிலேயே சேர்க்கப்பட்டது. லாபானுடைய வீட்டில் யாக்கோபு வேலை செய்துகொண்டிருந்தாலும், தேவனே அங்கு கிரியை செய்துகொண்டிருந்தார்.
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் இயேசு கிறிஸ்து (மத் 10:42). கொடுக்கிறவர்கள் யாராயிருந்தாலும் அந்த பலன் அவர்களுக்கு உண்டு. அவர்கள் கட்டாயம் கர்த்தரை அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை; என்றாலும், அந்த பலன் அவர்களை பரலோகத்தில் சேர்த்துவிடாது. இத்தகைய வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர்.
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டபோதும், இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று சீஷர்கள் அவரை வேண்டிக்கொண்டபோதிலும் (மத் 15:22,23), இயேசு கிறிஸ்து அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல (மத் 15:26) என்று சொன்னார்; என்றபோதிலும், பிள்ளைகளின் அப்பத்தை கானானிய ஸ்திரீயாகிய அவளுக்குக் கொடுத்தார். எனினும், அப்பம் சாப்பிட்டுவிட்டதால் (அற்புதத்தைப் பெற்றுவிட்டதால்) பிள்ளைகளாகிவிட்டோம் என்று அர்த்தமாகிவிடாது; அது பிதாவோடு பிள்ளைகள் சாப்பிடும் மேஜையிலிருந்து விழும் துணிக்கையை பொறுக்கும் நிகழ்வே. அது கிடைக்காவிட்டாலும், பிள்ளைகள் பரலோகம் சேருவது நிச்சயம் என்பதே வேதம் போதிக்கும் சத்தியம். (லூக். 16:22)
யாக்கோபை நன்றாக உபசரித்தபோது தேவன் லாபானை ஆசீர்வதித்தார்; ஆனால், ராகேலுக்காக வேலைசெய்த யாக்கோபுக்கு, லேயாளைக் கொடுத்து, தேவனோடிருந்த யாக்கோபை லாபான் ஏமாற்றத் தொடங்கினபோதோ, ஆசீர்வாதங்கள் யாக்கோபின் வசமாகச் சரியத் தொடங்கினது. யாக்கோபை தக்கவைத்துக்கொள்ள லாபான் முயற்சித்தாலும், ஆசீர்வாதத்தையோ அவனால் வீட்டில் தங்கவைக்க இயலவில்லை. தன்னை விட்டுப் புறப்படவிருந்த யாக்கோபை சம்பளத்தால் சமரசம் செய்யும் முயற்சியில் லாபான் இறங்கினபோது, யாக்கோபு லாபானை நோக்கி: நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும் (ஆதி 30:32) என்று சொன்னான். அப்படியே, லாபான் யாக்கோபை நோக்கி, நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி, அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான் (ஆதி 30:34-36). தன்னோடுகூட ஒரே வீட்டிலிருந்த யாக்கோபை, இப்போதோ 'மூன்று நாள் பிரயாணத் தூரத்திலே' வைத்துவிட்டான் லாபான். இன்றும், பிரிந்து செல்ல அனுமதிக்காமல், பிரித்துவைக்கும் மனிதர்கள் உண்டு.
மேலும், யாக்கோபின் மீதிருந்த நம்பிக்கையும் லாபானுக்குக் குறையத் தொடங்கியது. எனவே, யாக்கோபு லாபானை நோக்கி, 'அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; என்றும், புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் (ஆதி 30:33) என்றும் கடினமான வார்த்தைகளைக் கூறுகின்றான். என்றபோதிலும், கர்த்தர் யாக்கோபையே ஆசீர்வதித்தார். இவ்விதமாய் அந்தப் புருஷன் (யாக்கோபு) மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான் (ஆதி 30:43) என்று வாசிக்கின்றோமே.
அவ்வாறே, யோசேப்பு எகிப்துக்கு கொண்டுபோகப்பட்டபோது, கர்த்தர் யோசேப்போட இருந்தார் (ஆதி. 39:2). யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனை தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது (ஆதி 39:4,5). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட யோசேப்பின் மேல் தயவுவைத்து, தன்னுடைய வீட்டில் அவனை உயர்த்தி, அவனிடத்தில் எல்லாவற்றையும் ஒப்படைத்தபோது, பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபாரின் வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஆனால், ஆசீர்வாதத்திற்குக் காரணமாயிருந்த யோசேப்பினிடத்தில் போத்திபாரின் மனைவி அருவருப்பாக நடந்துகொள்ள முயற்சித்தபோதோ, ஆசீர்வாதத்திற்குக் காரணமாயிரந்த யோசேப்பு அங்கிருந்து அகற்றப்பட்டு வீட்டிலிருந்து தூரமாக சிறையில் வைக்கப்பட்டான்; அப்படியென்றால், ஆசீர்வாதமும் அங்கிருந்து அகன்றிருக்குமே. ஆனால், யோசேப்போடு கூட சென்ற ஆசீர்வாதம், அவனை அரண்மனை வரை உயர்த்திவிட்டது.
சவுல் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார் (அப் 9:3-5). முள்ளில் 'உதைக்கிறது எனக்குக் கடினம்' என்று அவர் சொல்லவில்லை; மாறாக, உனக்குக் கடினம் என்றல்லவோ சொல்லுகின்றார். மேலும், இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 21:44). மற்றவர்களை முட்களாகவும், அவர்களாலேயே நாம் குத்தப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்; ஆனால், அவர்கள் நம்மை உதைக்கும்போது, அவர்களே குத்தப்படுகிறார்கள்; நம்மை உதைப்பதினால், அவர்களது கால்களே காயப்படுகின்றன என்பதே சத்தியம்.
பிற மனிதர்கள் கடினமாக கையாளுவதை நினைத்து மனம் உடைந்துபோகும் மக்களும், ஆத்துமாவை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தபின்னும், அந்நியர்களுடைய ஆளுகையினால் அழுதுகொண்டிருக்கும் மக்கள் அநேகர். எனினும், ஆண்டவர் உடனிருந்தால், ஆசீர்வாதங்கள் நம்பக்கமே. குடும்ப வாழ்விலே, தேவனுடனிருக்கும் மனைவியை கடினமாகக் கையாளும் கணவர்கள் தங்களுக்கு வரும் ஆசீர்வாதங்களின் வழியையும், அப்படியே, தேவனுடனிருக்கும் கணவனை கடினமாகக் கையாளும் மனைவிகள் தங்களுக்கு வரும் ஆசீர்வாதங்களின் வழியையும் அடைத்துவிடுவார்கள். விவாரகத்து என்ற பெயரில் ஒருவரையொருவர் சத்துரு விலக்கியும் வைத்துவிடுகிறான். அவ்வாறே, அலுவலகங்களிலும், சபைகளிலும் ஒருவரையொருவர் கையாளும் விதம் தேவ கரத்தை நமக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் திரும்பச் செய்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக