இரக்கமா? இறக்கமா?
ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுவதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். (ஆதி 18:28)
ஆண்டவருடைய இரக்கத்தை இறங்குமுகத்திலேயே பயன்படுத்திக்கொள்ள மனிதர்கள் பலர் முயற்சிக்கிறார்கள். அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் (யோவே 2:13) என்பது உண்மையே; என்றாலும், அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் (சங் 7:12) என்ற அவரது குணமும் நமது அறிவுக்கு எட்டவேண்டியது.
தனக்கு நேராக நின்றுகொண்டிருக்கும் ஆண்டவர்; சோதோமுக்கு எதிராகப் போகப்போகிறார் என்பதை அறிந்த ஆபிரகாம், 'பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள்; அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? (ஆதி 18:24) என்று கேட்டதோடு மாத்திரமல்லாமல், 'துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ' (ஆதி 18:25) என்று தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியபோது, நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுவதையும் இரட்சிப்பேன் என்றார் கர்த்தர் (ஆதி 18:26). ஆபிரகாம் கேட்ட கேள்விக்கு ஏற்ற பதில் ஆண்டவரிடத்திலிருந்து கிடைத்துவிட்டது. இந்த பதில் ஆபிரகாமை சந்தோஷப்படுத்திவிடவில்லை; மாறாக, 'எத்தனை நீதிமான்கள் இருப்பார்கள்?' என்ற சந்தேகம் ஆபிரகாமுக்குள் எழுந்தது, என்றாலும், 'துன்மார்க்கர்களைக் குறித்த பயம்' ஆபிரகாமை நிறைத்திருந்தது; அதனைத் தீர்த்துக்கொள்ளவே தொடர்ந்து கேள்விகளைத் தொடுக்கின்றான். எனவே, ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; 'அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுவதையும் அழிப்பீரோ' என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை (ஆதி 18:28) என்றெ பதில் சொல்கிறார் ஆண்டவர். ஆபிரகாம் 'ஐந்து துன்மார்க்கர்கள்' அழிவுக்குக் காரணமாகிவிடுவார்களா? என்று கேட்கும்போது, 'நாற்பத்தைந்து நீதிமான்கள் அதைக் காப்பாற்றிவிடுவார்கள்' என்பதே ஆண்டவரது பதிலாயிருந்தது. ஆண்டவரைப்போல, நம்முடைய கண்களும் நீதிமான்களைக் காணட்டும்; அழிவுக்குக் காரணமாகும் துன்மார்க்கரைக் குறித்து பயம் வேண்டாம். மேலும் ஐந்தைக் குறைத்து, 'நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ' என்றபோதும், நாற்பது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார் (ஆதி 18:29). நீதிமான்களின் மீது ஆண்டவர் கரிசனையாயிருப்பதைக் கண்ட ஆபிரகாம், 'முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ' என்றும், 'இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ' என்றும், 'பத்து நீதிமான்கள் காணப்பட்டாலோ' என்று 'பத்து பத்தாகக் குறைத்துக்' கேட்டபோதும், 'அழிப்பதில்லை' என்ற பதிலே வந்தது, எனினும், ஆண்டவரது தரப்பில் குறைப்பு கூறப்படவில்லை. (ஆதி. 18:30-32)
'ஐம்பது நீதிமான்கள்' என்று ஆபிரகாம் தொடங்கினபோதிலும், தப்புவிக்கப்பட்டவர்களோ 'நான்குபேர்தான்;' அதுவும், 'லோத்து என்ற ஒருவனின் நீதியே' மனைவியையம் மற்றும் பிள்ளைகளையும் தப்புவித்தது. மனைவியோ தப்புவிக்கப்பட்டும், தப்பிப்பிழைக்கவில்லை; மகள்களின் குணங்களும் கர்த்தருக்கு எதிரான சந்ததியையே உருவாக்கிவிட்டது. லோத்து என்ற ஒரே நீதிமான் நிமித்தமாகவே சோதோம் அதுவரை அழிக்கப்படாதிருந்தது என்பதே சரியான கணக்கு.நாமும் அநேக நேரங்களில், 'ஐம்பது' என்று தொடங்கும் கணக்கு அவருக்கு முன் 'ஐந்தில் கூட முடிவதில்லை.' பரிசேயனைப் போன்றதும் (லூக். 18:11,12), மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா குறிப்பிடும் வாலிபனைப் போன்றதுதான் (மத். 19:20,21) இன்று பலருடைய வாழ்க்கை. 'ஒரு நீதிமான் நிமித்தம்' என்று ஆபிரகாம் கேட்காதபோதிலும், லோத்துவை ஆண்டவர் தப்புவித்தார். உலகத்தின் அழிவு நீதிமான்களுக்கு அல்ல, துன்மார்க்கருக்கே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக