திங்கள், 11 அக்டோபர், 2021

நீதிமானின் பாதுகாப்பு (ஆதி 19:15,16)

 நீதிமானின் பாதுகாப்பு


கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள். அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். (ஆதி 19:15,16)


நீதிமான் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதோடு மாத்திரமல்லாமல், பிறரையும் காப்பாற்ற முயற்சிக்கிறான்; ஆனால், துன்மார்க்கர்களோ, தங்களைத் தாங்களே அழிவுக்குள்ளாகத் தள்ளிக்கொள்ளுகிறார்கள். பட்டணத்தில் நடக்கும் அக்கிரமத்தை லோத்து அறிந்திருந்தான்; என்றபோதிலும், இத்தனை சீக்கிரமாகப் பட்டணம் அழிக்கப்படவிருப்பதையோ அப்போது அவன் அறியாதிருந்தான். மற்றவர்களுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று, காப்பாற்றும் நோக்கத்துடன், ஒருவேளை தனது வீட்டிற்கு லோத்து அவர்களை அழைத்துச் சென்றிருக்கக்கூடும். 'கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம்' (ஆதி. 19:2) என்று லோத்து அழைத்துச் சென்றபோதிலும், தூங்கவிடாமல் தொந்தரவு செய்துகொண்டிருந்தனர் சோதோமின் புருஷர்கள். துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ. பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம் (நீதி 4:14-16) என்ற ஆண்டவரது ஞானத்தினால் அருளப்பட்ட வார்த்தைகள் எத்தனை உண்மையானவைகள். தற்காலிகமாகப் பாதுகாப்பளித்த லோத்துவை பட்டணத்தாரிடமிருந்து பத்திரமாகப் பாதுகாத்தார்கள் தூதர்கள். 

இன்றும், நீதிமானுடைய வீட்டிற்குப் பொல்லாப்புச் செய்யவேண்டும் என்று, தூங்காமல் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும் துன்மார்க்கர்கள் உண்டே. இதனையே பேதுருவும், 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' (1பேதுரு 5:8) என்று எழுதுகிறார். 'நாம் சுற்றிவந்தால், எரிகோ கோட்டை தகர்ந்து விழுவது நிச்சயம்; ஆனால், சத்துருவின் சுற்றுதலுக்கலுக்கெல்லாம் சத்தியத்தினால் கட்டப்பட்டக் கோட்டை சரிந்துவிடாது; அது உறுதியானது, அதன் அஸ்திபாரமோ கிறிஸ்துவினாலானது.' 'மூலைக் கல்லைத் தொடாமல், உள்ளே நுழைவதோ முடியாதது; மூலைக் கல்லைத் தொட்டால், சத்துருவின் மூளைக்கே ஆபத்து; மேலும், இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் (மத் 21:44) என்பதே அவர்களுக்கு விடையாகக் கிடைக்கும். தானாகச் சென்று கல்லில் விழாவிட்டாலும், 'தானாக கல்லே உருண்டு வந்தும் விழுந்துவிடும்.' கூழாங்கலைக் கொண்டு கோலியாத்தை வீழ்த்தினவர் அவர்; ஆனால், மூலைக் கல் கையிலிருந்தால், முழு உலகமும் கொந்தளித்தாலும், 'தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்?' 

(சங் 56:11) என்று நாம் முழக்கமிடமுடியும். உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான் (சக 2:8). உறுதியான அஸ்திபாரமுடன் சுவரைக் கட்டிவைத்திருக்கும்போது, தலையினால் மோதினால் சத்துருவின் தலைமுறைக்கே அது இறுதியாயிருக்கும். அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போன்றது (வெளி 19:12), சத்துரு தொட்டால் சோதோமின் சாம்பல்தான் மிஞ்சும். பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய கண்களுக்குள் (சகரி. 4:10), சத்துரு சுண்டுவிரலை நுழைப்பது என்பது சாத்தியமில்லாதது. நம்முடைய காலங்கள் சத்துருவின் கரத்தில் அல்ல, 'கர்த்தருடைய கரத்திலிருக்கிறது' (சங். 31:15). படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும் (நீதி 26:27). மீண்டும் மீண்டும் நீதிமானின் வீட்டு வாசலை நெருக்கினால், குருட்டாட்டம் பிடிக்கும், அதற்குப் பின் வானத்திலிருந்து அக்கினி விழுவது நிச்சயம்.   என்றாலும், அவர் நமது கரங்களைப் பிடித்து, சத்துருக்களின் கண்களுக்கு மறைவாக நமது குடும்பத்தை அழைத்துச் செல்லுவார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக