திங்கள், 11 அக்டோபர், 2021

கர்த்தரால் வந்த காரியம் (ஆதி 24:50)

 கர்த்தரால் வந்த காரியம்



அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம்பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது. (ஆதி 24:50)


முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்று இயேசு கிறிஸ்து போதித்திருக்கின்றபோதிலும், தேவனுடைய ராஜ்யத்தைப் பின்னுக்குத் தள்ளி மற்றவைகளையோ முன்னுக்கு வைத்து, திருமண அழைப்பிதலில் மாத்திரம் 'இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது' என்றே பூசிவிடுகின்றது இன்றைய உலகம். 

பெண் தேடும்படியாக ஆபிரகாம் தன் ஊழியக்காரனை அனுப்பிவைத்தபோது, உச்சிதமான பொருள்களைக் கொடுத்து அனுப்பினான் (ஆதி. 24:10). பெண்ணுக்குக் கொடுக்கும்படியான உச்சிதமான பொருட்களைச் சுமப்பதற்காகத்தான் பத்து ஒட்டகங்களோடு ஆபிரகாமின் ஊழியக்காரன் பயணப்பட்டானோ! துரவண்டையில் ரெபேக்காள் தனக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்ததும், அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் உடனே ஊழியக்காரன் எடுத்துக்கொடுத்துவிட்டானே (ஆதி. 24:22).

மேலும், துரவண்டையில் கொடுத்ததோடு ஆபிரகாமின் ஊழியக்காரன் நிறுத்திவிடவில்லை; ரெபேக்காளின் வீட்டிற்கு வந்த பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடமைகளையும், பொன்னுடமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான் (ஆதி 24:53). ஆனால், இன்றைய நாட்களிலோ, பத்து ஒட்டகங்களில் உச்சிதமான பொருட்கள் பெண் வீட்டிலிருந்து வரவேண்டும் என்ற வரதட்சணையின் வலைதளத்திற்குள் உலகம் வலம்வருகின்றதே. இதினிமித்தம் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட தகுதியான மணப்பெண்களையும் இழந்துவிட்ட மாப்பிள்ளைகள் உண்டு. 

ஆபிரகாமின் ஊழியக்காரனைச் சந்தித்த ரெபேக்காள் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் வாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தபோது (ஆதி. 24:28), ரெபேக்காளின் சகோதரனாகிய லாபான் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து' (ஆதி. 24:30) என்று வாசிக்கின்றோமே. அப்படியென்றால், துரவண்டைக்குச் சென்றிருந்தபோது ரெபேக்காள் ஆபரணங்கள் ஏதும் இல்லாதவளாகத்தானே சென்றிருக்கவேண்டும்! ஆபிரகாமின் ஊழியக்காரன் கொடுத்த காதணியையும், கடகங்களையும் கையிலே எடுத்துக்கொண்டு ரெபேக்காள் வீட்டிற்கு வரவில்லை; மாறாக, அணிந்துகொண்டுதான் வந்தாள். இது ரெபேக்காளின் வெளிப்படையான வாழ்க்கையினையே சுட்டிக்காட்டுகின்றது. யாரோ ஒருவரிடத்திலிருந்து தான் பெற்ற அணிகலன்களை, வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியாமல் அவள் ஒளித்துவைத்துவிடவில்லை. ஆனால், இன்றைய நாட்களிலோ, காதல் என்ற போர்வையின் கீழ் வாழும் சில வாலிபர்கள், உச்சிதமானவைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு, வீட்டார் அறியாமல் வீட்டிலேயே அவைகளை ஒளித்துவைத்துக்கொள்வதும், வீட்டாருக்கு மறைவாக உச்சிதமான இடங்களில் உலாவருவதும் வேதத்திற்கு விரோதமானதே.

மணவாட்டிகளாக நம்மை மாற்றிக்கொள்ளும்படியாக உன்னதத்தை விட்டு இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபோது, தன்னையே நமக்காகக் கொடுத்தாரே. தனது சரீரத்தின் கடைசிச் சொட்டு இரத்தத்தையும் நமக்காகச் சிந்தி நம்மை அவருடைய மணவாட்டிகளாக்கிக்கொண்டாரே; இந்த காரியம் கர்த்தரால் வந்தது, நாம் அவருக்கு நலம் பொலம் ஒன்றும் கொல்லக்கூடாது, மணவாட்டிகளாக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்வதுதான் சிறந்தது. ஊழியர்கள் மூலமாக வரும் உபதேசங்களை ஆபரணங்களாக்கிக்கொண்டு, வருகைக்காகக் காத்திருப்போம். தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோம 8:32) என்று அவரே சொல்லியிருக்க, ஆசீர்வாதங்களை மட்டும் வாங்கிக்கொண்டு அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட அல்ல, மணவாளனாக அவரை ஏற்றுக்கொண்டு மறுவாழ்வில் அவரோடு வாழும்படியாகப் புறப்பட்டுச் செல்ல நாம் அழைக்கப்பட்டவர்கள். வெள்ளியையும் பொன்னையும் மாத்திரம் வாங்கிக்கொண்டு, அவரை வாசலுக்கு வெளியே நிறுத்திவிடக்கூடாது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக