பலியும் பழியும்
அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷpக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். (ஆதி 19:24,25)
கர்த்தருடைய அக்கினி எதற்காக இறங்குகிறது? என்ற கேள்வி, 'சத்துருவின் சந்ததியையும், கர்த்தருடைய பிள்ளைகளையும் பிரித்துக்காட்டக்கூடியது.' மோசேயோடு கர்த்தர் பேசும்போது, அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது (யாத் 3:2). தரிசனமான முட்செடிகூட வெந்துபோகவில்லை. இதற்கு ஒப்பனையாகவே மோசேயின் வாழ்க்கையிலும் நடந்தது. கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகைசூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது (யாத் 19:18); கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான் (யாத் 19:20); என்றாலும், மோசே அந்த அக்கினியில் எரிந்துபோகவில்லை. எலியா பலிசெலுத்தியபோது, கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது (1இரா 18:38); என்றாலும், எலியாவுக்கோ எவ்வித காயமும் அக்கினியால் ஏற்படவில்லை. நம்மை அழிக்க அல்ல, நம்மை வழிநடத்தவும், நம்முடையவைகளை ஏற்றுக்கொள்வதற்காகவே கர்த்தரிடத்திலிருந்து அக்கினி அனுப்பப்படுகின்றது.
ஆனால், தேவனற்ற ஆசீர்வாதங்களை நம்முடைய வாழ்க்கையில் வைத்துக்கொண்டிருப்போமென்றால், தேவனுடைய அக்கினிக்கு அவைகளை இரையாகத்தான் கொடுக்கவேண்டும். கண்களுக்குப் பிரியமானவைகள் என்று லோத்து நினைத்தவைகள் அனைத்தும் கந்தகத்துக்கு இரையாகவிருந்தவைகள். பல வேளைகளில் நாமும் நமது கண்களுக்குப் பிரியமானவைகளைப் பின்பற்றிச் சென்று, வானத்திலிருந்து விழும் அக்கினிக்கு அவைகளைப் பறிகொடுத்துவிடுகின்றோம். பலிகொடுப்பவர்களாக அல்ல, பறிகொடுப்பவர்களாக பரிதாபமான நிலைக்கு மாறிவிடுகின்றோம்.
ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். (லூக் 12:16-20)உலகத்தின் ஆசீர்வாதங்கடுத்த காரியங்களைக் குறித்துச் சிந்திக்கும்போது, சிந்தையில் நிறுத்திக்கொள்ளவேண்டிய இரண்டு நிபந்தனைகள் உண்டு; ஒன்று, ஆசீர்வாதங்கள் திடீரென எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டால் நம்முடைய நிலை என்னவாகும்? மற்றொன்று, நாம் திடீரென எடுத்துக்கொள்ளப்பட்டால் ஆசீர்வாதங்களின் நிலை என்னவாகும்? மதிகேடாய் நடந்துகொண்டு, மாளிகையில் வாழ்ந்துகொண்டிருப்பதால் எவ்வித பிரயோஜனமும் இல்லை. மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்குச் சமானம் (நீதி 11:22) என்ற நிலையில் நம்முடைய வாழ்க்கை காணப்படக்கூடாதே.
உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத் 6:21) என்று இயேசு போதித்தாரே. அப்படியிருக்க, பூமிக்கடுத்தவைகளையே சேர்த்துக்கொண்டிருந்தால், நம்முடைய இருதயம் பூயில் இருக்கிறது என்பதுதானே பொருள். அக்கினி வரும்போது நம்முடையவைகள் 'பழியாக அல்ல பலியாகட்டும்.'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக