திங்கள், 11 அக்டோபர், 2021

சத்தியமா? சந்ததியா? (ஆதி 19:36)

 சத்தியமா? சந்ததியா?


இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். (ஆதி 19:36)

 

கர்த்தர் தங்களைக் காப்பாற்றியும், அதனைப் புரிந்துகொள்ளாமல் மீண்டும் கிணற்றிற்குள்ளேயே குதித்துவிடும் குணமுடைய மனிதர்கள் உலகில் அநேகர் உண்டு. லோத்து சோதோமை விட்டுப் புறப்பட ஆயத்தமானபோது, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்களின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது (ஆதி 19:14). அழிவுக்குள்ளாகவிருந்த சோதோம் பட்டணத்திலிருந்து மருமகன்களை எப்படிதாக் லோத்து தெரிந்தெடுத்திருந்தானோ! சோதோமை விட்டுப் பிரிந்துவர மனதில்லாத அந்த மருமக்கள்மார்களை, லோத்துவின் குமாரத்திகள் விவாகம் பண்ணியிருந்தால், 'கணவர்கள் என்னும் சங்கிலிகளால்' சோதோமிலேயே கட்டப்பட்டிருந்திருப்பார்கள். ஒருவேளை லோத்துவின் குமாரத்திகளுக்கு விவாகம் முடிந்திருந்தால், குமாரத்திகள் கணவர்கள் வீட்டிற்குக் குடிபெயர்ந்திருப்பார்கள்; அவ்வேளையில், லோத்துவின் வீட்டிற்கு தூதர்கள் வந்திருந்தாலும், கணவர்களோடு வாழும் குமாரத்திகளைக் காப்பாற்றுவது என்பது கடினமாகத்தானிருக்கும்; உறவை உதறுவது அத்தனை எளிதாயிருக்காதே. 

ஆண்டவருக்குப் பிரியமில்லாத சோதோமின் புருஷர்களால் லோத்துவின் குமாரத்திகள் கர்ப்பவதியாகியிருந்தால்; அதுவும் சோதோமில் ஆண்டவருக்கு அருவருப்பானதாகவே காணப்பட்டிருக்கும். இன்றும் இப்படிப்பட்ட உறவின் சங்கிலிக்குள் சிக்கிக்கொண்ட குமாரத்திகள் மற்றும் குமாரர்கள் உண்டு. தாங்கள் தப்பியோட நினைத்தாலும், தவறான உறவினால் உடன்கட்டை ஏறுவதைப்போல அவர்களோடு அழிக்கப்படவேண்டிய நிலையில் அகப்பட்டுக்கொண்டவர்கள் உண்டு. மருமக்கள்மார்  லோத்துவின் குமாரத்திகளை இத்தனை பெரிய ஆபத்திலிருந்து கர்த்தர் பாதுகாத்திருந்தார். என்றபோதிலும் லோத்துவின் குமாரத்திகள் அதனை உணர்ந்துகொள்ளவில்லை. லோத்துவின் குமாரத்திகளோ, தாங்களாகவே தவறான பாதையினைத் தெரிந்துகொண்டு தேவனை விட்டுப் பிரிந்துபோனார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள். (ஆதி 19:31,32). 

நீதிமொழிகள் 6:29-32 இவர்களது வாழ்க்கையை விளக்கப்போமானது.சந்தோஷத்தை மட்டுமே மனதில் கொண்டு சந்ததியை தவற விட்டுவிட்டவர்கள் உண்டு; அப்படியே, சந்ததிக்காக சத்தியத்தின் பாதையிலிருந்து தவறிவிட்டவர்களும் உண்டு. லோத்துவின் குமாரத்திகளோ, சந்ததிக்காக சத்தியத்தின் பாதையிலிருந்து தவறிவிட்டார்கள். லோத்துவின் குமாரத்திகளுக்கு 'சத்தியத்தின் பாதையல்ல, சந்ததியைக் குறித்த பார்வையே' பிரதானமானதாகக் காணப்பட்டது.  விளைவு, தேவனுக்குப் பிரியமில்லாத இரண்டு சந்ததிகள் பிறந்துவிட்டன. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன். இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன் (ஆதி 19:37,38). அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது (உபா 23:3) என்று கர்த்தரே சொல்லும் அளவிற்கு அவர்களது சந்ததிகள் காணப்பட்டன. 

ஆபிரகாமின் மனைவியாகிய சாராளும், விசுவாசத்தின் தப்பனாகிய ஆபிரகாமை தூண்டிவிட்டு விழவைத்துவிட்டாளே. சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான் (ஆதி 16:1,2); ஆபிரகாமோடு ஆகாருக்கு சாராள் உண்டாக்கிவிட்ட உறவு சாராளுக்கே அநியாயமானதாக மாறிப்போனதே (ஆதி. 16:5). மேலும், அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான்  (ஆதி 16:12) என்று விசுவாசத்தின் சந்ததிக்கு விரோதமாகிவிட்டதே.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக