ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஆகாரைத் தொடரும் ஆசீர்வாதம் (ஆதி 16:10)

 ஆகாரைத் தொடரும் ஆசீர்வாதம்


பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை (ஆகாரை) நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார். (ஆதி 16:10)


கர்த்தர் ஆபிராமை அழைத்தபோது, 'நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்' (ஆதி 12:2) என்று வாக்குக் கொடுத்தார். 'உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்' (ஆதி 17:6) என்றும், 'நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும் (ஆதி 22:17) ஆபிராமை ஆசீர்வதித்தார். விசுவாசத்தில் ஆபிராம் சற்று தளர்ந்திருந்தபோது, 'அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்' (ஆதி 15:5) என்று ஆபிராமை உற்சாகப்படுத்தினார். 

ஆனால், ஆபிராமுக்கே சொல்லப்பட்ட இந்த ஆசீர்வாதத்தினையே ஆகாரையும் நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்று அண்டவர் கூறுவது ஆச்சரியமானது. 

இது எப்படி சாத்தியமானது? நம்முடைய கரத்தில் எந்த கம்பெனியைச் சேர்ந்த கைபேசியை வைத்திருந்தாலும், அதிலே என்ன சிம்கார்டு போட்டிருக்கிறோமா, அந்த டவரைத்தானே அந்த கைபேசி காட்டும். அவ்விதமாகவே, ஆகாரின் வயிற்றில் ஆபிராமின் வித்து சிம்கார்டைப் போல விடப்பட்டிருந்ததால், ஆபிரகாமுக்கும் யெகோவாவுக்கும் இடையிலான உறவு, ஆகாரின் கருவோடு இன்னமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அது மாத்திரமல்ல, அந்த சிம்கார்டுக்கு உரிய ஆபரும் கிடைப்பது ஆனந்தமான செய்தி. 

யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டபோது, பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்தியன் வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்தார். (ஆதி 39:1,5). ஆனால், ஆபிராமின் மனைவியாகிய  சாராயினிடத்தில் பார்வோன் பிரவேசிக்க நினைத்தபோது, சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார் (ஆதி 12:17). நம்மை பிறர் கையாளுவதைப் பொறுத்து, 'உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்' (ஆதி. 12:3) என (ஆண்)டவரின் நிலை வேறுபடும். 

நாம் சிறையிலிருந்தாலும் அல்லது சிங்கக்கெபியில் இருந்தாலும் யெகோவாவினுடனான உறவு ஒருபோதும் முறிந்துபோவதில்லை. எனவே பவுல், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?  மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோம 8:39) என்று எழுதுகின்றார். 

நாமும், ஆசீர்வாதத்திற்கான 'ஆதாரத்தை' அடுத்தவரிடத்தில் சில நேரங்களில் விட்டுவிடுகின்றோம். தாவீது  பத்சேபாளிடத்தில் தனது வித்தை விட்டுவிட்டதால், ராஜ்யபாரமே சாலொமோனுக்குப் போகும்படியான விபத்து நேரிட்டது. ஆபிராமின் வித்து ஆகாருக்குள் விழுந்துவிட்டதால், 'ஆபிராமின் சந்ததியை' 'உன் சந்ததி' என்று சுட்டிக்காட்டும் நிலையும் ஆண்டவருக்கு உண்டானது.   ஆசீர்வாதத்திற்கான ஆதாரத்தைக் காத்துக்கொள்ளுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக