ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஊசலாடும் உத்தமம் (ஆதி. 17:1)

ஊசலாடும் உத்தமம்


ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. (ஆதி. 17:1)


'உத்தமம்' (Perfect, Righteousness) என்பதே ஆண்டவரோடு நமக்கு இருக்கவேண்டிய உறுதியான அஸ்திபாரம். 'நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்' (ஆதி. 6:9) அறிமுகப்படுத்துகின்றது வேதம். யார் உடனிருந்தாலும், உடனில்லாமற்போனாலும், 'உத்தமனுக்குக் கர்த்தர் துணை' (2 நாளா. 19:11) என்பதே வேதத்தின் சத்தியம். 

ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலும் ஆடுகளிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும் (லேவி 22:21) என்று பலியைக் குறித்ததான கட்டளை, பலிக்கு மாத்திரமல்ல, பலியிடும் மனிதனுக்கும் உரியது. சில நேரங்களில் உலக பொருட்களையே உத்தமமானதாக எண்ணி, அவைகளை பலியிட்டுவிட்டு, உள்ளத்தையோ உத்தமத்திலிருந்து விலக்கிவைத்துவிடுகின்றோம். உத்தமமான உள்ளத்தோடு செலுத்தப்படும் உத்தமமான பலியின் சத்தமே தேவனுடைய செவிகளைச் சென்றடையும். எனவே இயேசு கிறிஸ்து, ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,  அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து (மத் 5:23,24) என்று கற்றுக்கொடுக்கின்றார். 

உத்தமமாய் கர்த்தரைப் பின்பற்றிய காலேப் மற்றும் யோசுவா ஆகியோரையே கானானைக் காணும்படிச் செய்தார் கர்த்தர். (எண். 14:24, எண். 32:11). அப்படியே, எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டார் (எண்; 32:12). தேசத்தைக் காணும் பாக்கியம் கிடைத்ததற்கும், கிடைக்காததற்கும் 'உத்தமம்' என்பதுதானே உத்தரவாகச் சொல்லப்பட்டது. அப்படியே, 'கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே (சங் 15:1,2) என்பதற்கும் உத்தரவாக உத்தமமே சொல்லப்படுகிறது.

யோபுவைக் குறித்து, 'உத்தமன்' என்றும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்று கர்த்தர் சாட்சி கூறுகின்றார் (யோபு 2:3). உறுதியாக நின்ற உத்தமத்தின் மீதுதான் யோபுவுக்கு சோதனை வந்தது, 'நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்' என்றாள் யோபுவின் மனைவி (யோபு 2:9). 'சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்' (யாக் 1:12) என்று எழுதுகின்றார் யாக்கோபு. 

ஆபிரகாமுக்கு வந்த சோதனையில் 'உத்தமன்' என்று தன்னை நிரூபிக்க அவன் தவறிவிட்டான், மனைவியாகிய சாராயின் வார்த்தைகளுக்கு அவன் செவிகொடுத்துவிட்டான். 'நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு' (ஆதி 17:1) என்று எச்சரிக்கின்றார். யோபுவோ மனைவியின் வார்த்தைகளைச் செவிகளில் வாங்கிக்கொள்ளவில்லை; நாம் யோபுவைப்போல உத்தமத்தில் உறுதியாயிருக்கிறோமா? அல்லது ஆபிராமைப்போல உத்தமத்திலே ஊசலாடிக்கொண்டிருக்கின்றோமா? 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக