தற்காலிகப் பாதுகாப்பா?
நிரந்தர தீர்வா?
பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள்; அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுவதையும் இரட்சிப்பேன் என்றார். (ஆதி 18:24,26)
நீதிமான்களின் நீதி இவ்வுலகத்தில் அழிவின் வீதியிலிருப்போரைத் தற்காலிகமாகப் பாதுகாக்கக்கூடும்; என்றாலும், நித்திய அழிவினின்று அவர்களும் தடுத்துநிறுத்தப்படவேண்டுமானால், அவர்களும் நீதிமான்களானால் மாத்திரமே அது சாத்தியமாகும் என்பதே வேதம் கற்றுத்தரும் சத்தியம். சோதோமை அழிக்கும்படியாக ஆண்டவர் புறப்பட்டுவந்தபோது, 'சோதோமிலிருக்கும் லோத்துவைக் குறித்து ஆபிரகாம் ஆண்டவரிடத்தில் வெளிப்படையாகப் பேசவில்லை;' மாறாக, ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? என்று மறைமுகமாக மன்றாடியபோது, 'கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுவதையும் இரட்சிப்பேன்' என்று மாறுத்தரமளித்தார். 'நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்து' (2பேதுரு 2:8) என்றே பேதுரு லோத்துவை அறிமுகப்படுத்துகின்றார். தவறான இடத்தை லோத்து தெரிந்தெடுத்திருந்தாலும், நீதிமானாகிய அவன் நிமித்தம் அந்த இடத்தின் அழிவு தாமதமாகிக்கொண்டிருந்தது. நீதிமானாகிய லோத்து சோதோமில் இருக்கும்வரை சோதோம் அழிக்கப்படவில்லை; அது தற்காலிகமானதோர் பாதுகாப்பே.
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசே 22:30) என்றும், எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை (சங் 14:3) என்றும், நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன் (சங் 69:20) என்றும், நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை (நீதி 1:24) என்றும், அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை (ஓசி 7:7) என்ற வசனங்கள், 'நீதிமானாக இருந்தாலும், சோதோமில் கர்த்தரை அறிவிக்கவுமில்லை, அதன் அழிவிற்காக அவன் வேண்டிக்கொள்ளவுமில்லை.' என்பதையே நமக்கு ஞாபகப்படுத்துகின்றது.
எனினும், நீதிமான்கள் நீங்கும் நேரத்திலோ, நீக்கப்படும் நேரத்திலோ அழிவு நிச்சயம் அவர்களை நெருங்கும். உலகத்தில் உண்டாகும் பயங்கரங்களினால் அழிக்கப்பட்டுவிடாதபடிக்கு, ஒருவேளை நீதிமான்களுக்குப் பின்னாலே நின்றுகொள்ளலாம்; என்றாலும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலோ, துன்மார்க்கர்களை பூமியிலே நிற்கவிட்டுவிட்டு 'நீதிமான்கள் மட்டுமே' பரலோகம் வரவேற்கும் என்பதை இன்றே அறிந்துகொண்டால் நன்று. மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையைநீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன். அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் (எசே 14:13,14). அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள் (மத் 24:40,41).
பூமியில் நீதிமான்களாக நாம் இருக்கும் நாட்களிலே, அழிவை நோக்கியிருக்கும் மக்களுக்காக வேண்டிக்கொள்வது நமது கடமை. நாம் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, பூமியோ எரிக்கப்பட்டுப்போம். தற்காலிகமான ஜீவனைக் காப்பதற்கு அல்ல, அவர்களது நித்திய ஜீவனைக் காப்பதற்கு முயற்சிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக