பெலவீனமானப் பார்வை
அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான். (ஆதி 27:21)
தங்களால் இயலாவிட்டாலும், நாம் யார்? என்பதை அறியும்படியாகவே, பிற மனிதர்கள் நம்மை பக்கத்தில் அழைக்கிறார்கள்; ஆனால் ஆண்டவரோ, 'தான் யார்? என்பதை நாம் அறிந்துகொள்ளும்படியாகவே நமது பக்கத்தில் நிற்கிறார். கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார் (அப் 17:27) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே.
சகோதரனுக்குக் கொடுக்கப்படவிருந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக, தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் யாக்கோபு வந்தபோது, அருகில் அழைத்து தடவிப்பார்த்தபோதிலும் ஈசாக்கினால் அவன் யாக்கோபு என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை. 'சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள்' (ஆதி. 27:22) என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தபோதிலும், 'ஏமாற்றும் கைகளில்' ருசியான ஆகாரம் இருந்ததால் விழுந்துபோனான்; யாக்கோபின் சத்தத்தைக் குறித்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அவன் முன்னுரிமை அளிக்கவில்லை. இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட கைகளோடு வரும் மக்களை அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், அவர்கள் பக்கமாகச் சாய்ந்துபோய்விடும் மனிதர்கள் உண்டு. ஏமாற்றும் குரலை அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், கைகளில் இருப்பதற்கே முன்னுரிமை கொடுக்கும் மனிதர்கள் அநேகர்.
சாமுவேல் ஈசாயின் மகனாகிய எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான். அப்பொழுது, கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். (1சாமு 16:6,7).
யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது, தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான் (ஆதி 29:11,12) என்றாலும்; அவளுடைய வாழ்க்கை விக்கிரகத்திற்கு அடிமையாயிருக்கிறது என்பதையோ அவன் அறியாதவனாயிருந்தான். யாக்கோபைப் போல, வெளிப்புறத்தை மாத்திரம் பார்த்து, உள்ளத்தின் உட்புறத்தினை அறியாமல் அடிமையாகிப்போனவர்கள் அநேகர். யாக்கோபு தேவனது ஆசீர்வாதத்திற்குப் பாத்திரமானவன்; ஆனால், ராகேலோ விக்கிரகங்களுக்கென்று தன்னை விற்றுப்போட்டவள். இன்றும் இப்படிப்பட்ட நிலையில் பிரிந்திருக்கும் தம்பதியர்கள் உண்டே. யாக்கோபு கிட்ட வந்து முத்தஞ்செய்தபோதுகூட (ஆதி. 27:26) பார்வையற்ற ஈசாக்கினால் அவனைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ராகேலை முத்தஞ்செய்து மாட்டிக்கொண்டான் யாக்கோபு. யூதாஸ் முத்தஞ்செய்யும்படி இயேசுவினிடத்தில் வந்தபோது (லூக். 22:47), இயேசு அவனை நோக்கி: யூதாசே முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் (லூக். 22:28) என்று அவனை அடையாளம் கண்டுகொண்டு அவனிடமே சொன்னாரே. மனிதர்களை ஏமாற்றலாம்; ஆண்டவரை ஏமாற்றுவது கூடாதது.
லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப்பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான். ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை (ஆதி 31:33,34). இப்படிப்பட்ட நிலையில், அருவருப்புகளை, கர்த்தருக்கு விரோதமானவைகளை பிறரது கண்கள் காணாதபடி மறைத்துவைத்துக்கொண்டு, தேவஜனங்களைப் போல பயணித்துக்கொண்டிருக்கும் மக்கள் இன்றும் உண்டு. பலருடைய கூடாரம் சுத்தமாகவே இருக்கின்றது; ஆனால், உள்ளவோ கூளமாகக் கிடக்கின்றது. கூடாரத்தைத் தடவிப் பார்ப்பதினால்; உள்ளத்தில் உள்ளதைக் கண்டுபிடித்துவிடமுடியாது. மனிதனுடைய கண்கள் மனிதனின் மறுபுறத்தைக் காணும் பெலனற்றவைகளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக