திங்கள், 11 அக்டோபர், 2021

விருந்தா? விருத்தசேதனமா? (ஆதி 21:6)

 விருந்தா? விருத்தசேதனமா?



அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள். (ஆதி 21:6)


நம்முடைய பெலவீனங்களை தம்முடைய பெலத்தினால் நிரப்புகிறவர் நம் ஆண்டவர். எனவே, 'என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்' என்று ஆண்டவர் சொன்னபோது, 'ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்' (2கொரி 12:9) என்று கூறுகின்றார் பவுல். பலவீனங்களையே பார்த்துக்கொண்டிருக்கின்ற மனிதன், தன்னையே அற்பமாக நினைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு தன்னைத் தானே தள்ளிக்கொள்ளுவான்; ஆனால், ஆண்டவருடைய பெலத்தையே அனுதினமும் பார்த்துக்கொண்டிருக்கின்ற மனிதனோ, அற்புதமாக அவரால் வழிநடத்தப்படுவான். 

ஆண்டவர் ஆபிரகாமைச் சந்தித்தபோது, ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன்  மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்று சொன்னார். அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்த சாராளோ இந்த வார்த்தைகளைக் கேட்டு தன் உள்ளத்திலே நகைத்தாள் (ஆதி 18:10,12). ஆண்டவரை அற்பமாக எண்ணவில்லை; மாறாக, அவர் செய்யவிருந்த அற்புதத்தை அற்பமாக எண்ணினாள். அவரைப் பார்த்து நகைக்கவில்லை; மாறாக, தகுதியற்ற நிலையில் காணப்பட்ட தன்னுடைய சரீரத்தின் பார்த்தே நகைத்தாள் சாராள். விசுவாசிகளின் தகப்பனான ஆபிரகாமுக்கு, விசுவாசத்தில் தடுமாறுகிற ஓர் மனைவிதான் துணையாயிருந்தாள். 

ஆபிரகாம் சொன்னதும், தூதர்களுக்கு விருந்தினை ஆயத்தம் செய்தாள் சாராள் (ஆதி. 18:6); ஆனால், உடன்படிக்கையின் புத்திரனாக, விருத்தசேதனம் பண்ணப்படவிருக்கும் ஈசாக்கு தன் வயிற்றில் பிறக்கப்போவதற்கோ தன்னை ஆயத்தமில்லாதவளாகப் பார்த்தாள். சாராள் நகைத்ததை ஆண்டவர் அறிந்துகொண்டபோது, சாராள் பயந்து நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள்; அதற்கு அவர் இல்லை, நீ நகைத்தாய் என்றார் (ஆதி. 18:15). 'சாராய் எங்கே?' என்று தூதர்கள் கேட்டபோது, 'கூடாரத்தில் இருக்கிறாள்' என்றான் ஆபிரகாம்; அவள் உள்ளத்திலே நகைத்தாள் (ஆதி. 18:11), இவ்வுலகத்தின் கூடாரத்தையும், சரீரமாகிய கூடாரத்தையும் ஊடுருவிப் பார்த்தனவே கர்த்தரின் கண்கள். நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தரின் கண்கள் இப்படியே நம்மை ஊடுருவிப் பார்க்கும் வலிமையுள்ளவைகள் என்பதை அறிந்து அவருடைய வல்லமைக்குள் அடங்கிவாழ ஒப்புக்கொடுத்தால் விசுவாசம் பெருகும்.  

அற்பமாக நகைத்த சாராளுக்கு, அற்புதமான நகைப்பை பலனாகத் தந்தார் ஆண்டவர். இப்போதோ அதே சாராள் மீண்டும் நகைக்கிறாள். 'தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்' (ஆதி. 21:6) என்கிறாள். உள்ளத்தில் நகைத்தவளை உதடுகளால் நகைக்கப்பண்ணினார் ஆண்டவர். நாமும் பல நேரங்களில் நம்முடைய பெலவீனங்களை மாத்திரம் மனதில் கொண்டு நகைப்பவர்களாகக் காணப்படலாம்; ஆனால், ஆண்டவரோ தம்முடைய பெலனைக் கொண்டு நம்முடைய பலவீனங்களை மாற்றி நம்முடைய பெலவீனத்தினால் நாம் பெறக்கூடாமலிருந்தவைகளை, தன்னுடைய பெலத்தினால் பெற்றுக்கொள்ளும்படிச் செய்கின்றார். 

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான் (ஆதி 21:4). பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான் (ஆதி 21:8). இன்றைய நாட்களில், விருந்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது; விருத்தசேதனமோ (ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அடுத்த காரியங்களோ) விட்டுவிடப்படுகின்றது. பிள்ளைகளின் பிறந்தநாட்கள், திருமண நாட்கள் மற்றும் பிற விசேஷித்த நாட்களில், விருந்துகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விருத்தசேதனத்திற்குக் (பிள்ளைகளைக் குறித்த கர்த்தரின் சித்தத்திற்குக்) கொடுக்கப்படுகிறதா? என்ற கேள்விவிடையளிக்க முற்பட்டால், நிகழ்காலத்தில் மட்டுமே நாம் நின்றுகொண்டிருக்கிறோம்; பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்க்கையின் எதிர்காலத்தை இன்னும் நாம் எட்டிப்பார்க்கவில்லை என்பது நமது கண்களுக்குத் தெரியவரும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக